Monday, January 12, 2009

லலிதா நவரத்தினமாலை – 1


சிறுவயதிலிருந்தே மிகவும் விரும்பிப் பாடி வரும் பனுவல் இது. மிகுந்த சந்த நயத்துடன் கூடி இருக்கும். சந்த நயம் நன்கு இருப்பதால் பாடுவதற்கு மிக எளிதாகவும் சுவையாகவும் இருக்கும். பாடிப் பழகினால் எந்தப் பாடலும் எளிதில் மனனம் ஆகும். செந்தமிழும் நாப்பழக்கம் என்று அதனால் தான் மூத்தோர் சொன்னார்கள் போலும். செந்தமிழ் மட்டுமில்லை எந்த மொழியும் அப்படித் தான்; பாடிப் பழகினால் எளிதில் வசப்படும். வடமொழிப்பாடல்களும் சௌராஷ்ட்ரமொழிப்பாடல்களும் அப்படித் தான் எனக்கு மனப்பாடம் ஆகின்றன.

தேவி லலிதா திரிபுரசுந்தரியை ஒன்பது பாடல்களால் போற்றிப் பரவும் பனுவல் இது. ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு மணியை பொருத்திப் பாடுவதால் இவை நவமணிப்பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. நவமணிகளால் செய்யப்பட்ட ஒரு அழகிய மாலையைப் போன்ற இத்துதி 'லலிதா நவரத்தின மாலை' என்று அழைக்கப்படுகிறது.

சிறுவயதில் இருந்தே பாடிப் பழகியிருந்தாலும் பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் தெரியாமலேயே இருந்தது. 2007 ஜூலை மாதத்தில் அன்புத்தோழி இப்பாடல்களை அம்மன் பாட்டு வலைப்பதிவில் இட்டார். அப்போது தான் ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன பொருள் என்று சிந்திக்கத் தொடங்கினேன். அவருடைய அனுமதியுடன் சிறிய அளவில் பொருள் எழுதி அவருடைய இடுகைகளிலேயே இணைத்து வைத்தேன். அப்போதில் இருந்து ஆசை - இந்தப் பாடல்களுக்கு விரிவான பொருள் எழுத வேண்டும் என்று. அன்னையின் திருவருளை முன்னிட்டு இன்று தொடங்குகிறேன்.

ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரோ சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்


தொடங்கும் செயல்கள் யாவும் தடையின்றி நிறைவேற ஆனைமுகனையும் ஆறுமுகனையும் உண்மைப்பொருளை அறிவிக்கும் குருவையும் வணங்கித் தொடங்குவது மரபு. எச்செயலைச் செய்தாலும் தன்னறிவு பெறுவதற்குத் துணை நிற்கும் செயலாக அது அமைகின்றதா என்று பார்த்துச் செய்வது அறிவுடையோர் இயல்பு. சிலர் அதனை முக்திக்கு வழி என்பார்கள்; சிலர் அதனை இறையருளுக்கு வழி என்பார்கள்; இன்னும் சிலர் இறை உவப்புக்கு வழி என்பார்கள். இவை எல்லாம் ஒரே ஒளிக்கதிரை வெவ்வேறு நிறங்களில் பார்ப்பது போலத் தான். அந்த அறிவொன்றை அடைய அறிவே உருவான இறையை வணங்குவதைப் போல் அமைந்திருக்கின்றன இந்நான்கு வரிகள்.

நம்மைச் சுற்றி இயற்கைச் சக்திகள் எத்தனையோ இருக்கின்றன. ஐம்பூதங்கள், அவை ஏற்படுத்தும் பல விதமான விளைவுகள், உயிரில்லா பொருட்கள், உயிருள்ள பொருட்கள், அவற்றின் செயல்களால் விளையும் பல விதமான விளைவுகள் என்று எத்தனையோ சக்திகள் இப்பூமியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் ஒரே தெய்வ சக்தியின் உருவங்களே. அவற்றை கணங்கள் என்று சொல்வதும் மரபு. அந்த இயற்கை சக்திகள் ஒன்றுக்கொன்று இயைந்தும் முரண்பட்டும் இவ்வுலகில் பலவிதமான செயல்களைச் செய்து கொண்டு செல்கின்றன. இந்த இயற்கைச் சக்திகளான கணங்களின் தலைவன் எவனோ அவனுக்குப் பெயர் தான் கணபதி; கணேசன்.

இந்த இயற்கைச் சக்திகள் எல்லாம் வெளிப்பட்டு உருவங்களுடன் செயல்படும் போது அவை இந்த பூதிக (Physical) உலகில் வெளிப்படையாகத் தென்படுகின்றன. உடல், மனம், அறிவு, பேரறிவு என்று பல நிலைகள் ஒரு மனிதனுக்குள் இருக்கின்றன. இந்நிலைகள் எல்லாம் மனித உடலில் ஆதார சக்கரங்களாக இருக்கின்றன. எந்நிலையில் மனிதன் இருக்கிறானோ அதைப் பொறுத்து அவனது அடிப்படை சக்தி அந்த அந்த சக்கரத்தில் இருப்பதாகச் சொல்லப்படும். பெரும்பான்மையான நேரத்தில் பூதிக உலகத்திலேயே மனிதன் இருப்பதால் அவனது அடிப்படை சக்தி பூதிக உலகத்தின் ஆதார சக்கரமான மூலாதாரத்தில் இருப்பதாகச் சொல்வார்கள். இந்த இயற்கைச் சக்திகள் எல்லாம் பூதிக உலகில் வெளிப்படும் நிலையிலேயே தான் மனிதனால் அவற்றை இனம் காண முடிகிறது; அவற்றைப் பயன்படுத்தியோ அடக்கி வைத்தோ தான் நினைத்ததை நடத்திக் கொள்ள விழைகிறான். அப்போது அவனுக்குத் துணையாக நின்று காக்க வேண்டிய இறை சக்தியே கணங்களின் தலைவனான கணேசன். அவன் அந்த மூலாதார சக்கரத்தில் நிலை நின்று காக்கிறான். எந்தத் தடைகளும் இல்லாமல் எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெறுவதற்குத் தொழத் தக்கவன் ஆகிறான்.

அவன் அறிவே வடிவானவனாய் இருப்பதால் அவனை 'ஞான கணேசா' என்று விளித்துச் சரணடைகிறோம். 'ஞான கணேசா சரணம் சரணம்'.

இயற்கைச் சக்திகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதாலேயே அனைத்துக் காரியங்களும் நடைபெறுகின்றன. சிறிய விதயங்களில் இருந்து முடிவான நிலையான இறையிணைதல் வரை எல்லாமுமே இணைவதில் தான் நடக்கின்றன. அவ்வாறு சிறு செயல்களில் இணைப்பை நடத்துபவனும் அவனே; பேரறிவைத் தந்து அறிவே உருவாய் நம்மை மாற்றி பிரம்மமயம் ஆக்குபவனும் அவனே; அவனே தான் ஸ்கந்தன் - இணைந்தவன்; இணைப்பவன். அவனும் அறிவே வடிவாய் இருப்பதால் அவனை 'ஞான ஸ்கந்தா' என்று விளித்துச் சரணடைகிறோம். 'ஞான ஸ்கந்தா சரணம் சரணம்'.

பேரறிவினைப் பெற்றவர் தான் அப்பேரறிவை மற்றவருக்கு வழங்க இயலும். இல்லையே பார்வையற்றவர்களுக்குப் பார்வையற்றவர்களே வழிகாட்டிச் செல்லுவது போல் அமைந்துவிடும். உண்மைக் குரு என்பவர் பேரறிவினைப் பெற்றவர்; அப்பேரறிவினை மற்றவர்களுக்குத் தருபவர்; அதனால் அறிவே உருவான அந்த உண்மைக் குருவை 'ஞான சத்குரோ' என்று விளித்துச் சரணடைகிறோம். 'ஞான சத்குரோ சரணம் சரணம்'

இறைவனின் குணங்களைப் பற்றி வேதங்கள் சொல்லும் போது 'சத் சித் ஆனந்தம்' என்றும் 'சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம:' என்றும் இன்னும் பலவாறாகவும் சொல்கின்றன. என்றைக்கும் இருப்பது, அறிவே வடிவாய் இருப்பது, இன்பமயமாய் இருப்பது என்பவை இறைவனின் குணங்களாக வேதங்கள் சொல்கின்றன. பேரறிவும் பேரானந்தமும் வடிவாய் இருப்பவனை 'ஞானானந்தா' என்று விளித்து சரணடைகிறோம். 'ஞானானந்தா சரணம் சரணம்'.

16 comments:

  1. எனக்கும் பிடித்த, மனப்பாடமான, தினம் சொல்லும் பாடல்களில் ஒன்று. உங்கள் விளக்கங்களை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  2. என்னடா இன்னும் யாரும் எதுவும் சொல்லவில்லையே; ரொம்ப கடினமா எழுதிட்டோமோன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் அக்கா. :-)

    நன்றி.

    ReplyDelete
  3. //பூதிக உலகத்திலேயே மனிதன் இருப்பதால் அவனது அடிப்படை சக்தி பூதிக உலகத்தின் ஆதார சக்கரமான மூலாதாரத்தில் இருப்பதாகச் சொல்வார்கள்//

    //இந்த இயற்கைச் சக்திகள் எல்லாம் பூதிக உலகில் வெளிப்படும் நிலையிலேயே தான் மனிதனால் அவற்றை இனம் காண முடிகிறது; அவற்றைப் பயன்படுத்தியோ அடக்கி வைத்தோ தான் நினைத்ததை நடத்திக் கொள்ள விழைகிறான்//

    //அப்போது அவனுக்குத் துணையாக நின்று காக்க வேண்டிய இறை சக்தியே கணங்களின் தலைவனான கணேசன். அவன் அந்த மூலாதார சக்கரத்தில் நிலை நின்று காக்கிறான்//

    "மூலாதாரத்து" மூண்டு எழு கனலை
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே...

    //செந்தமிழ் மட்டுமில்லை எந்த மொழியும் அப்படித் தான்; பாடிப் பழகினால் எளிதில் வசப்படும்//

    :)
    பாடிப் பழகும் போது, பிறர் ஓடிப் பழகினாலும், நாம் பாடிப் பழக வேணும் என்று சொன்ன குமரனிடம் நாடிப் பழகறேன், தமிழ் தேடிப் பழகறேன்! :)

    ReplyDelete
  4. எப்படியோ 'பழகுனா' சரி இரவி. :-)

    நன்றிகள்.

    ReplyDelete
  5. பனுவல் - இந்த வார்த்தையை நிறைய இடங்களில் உபயோகம் செய்கிறீர்கள். ஏதோ புரிந்த மாதிரி இருப்பினும், சரியான பொருள் கூறுங்களேன்?.

    எல்லோருக்கும் சத்குருஞானாநந்தரது அருள் பரிபூரணமாகட்டும்.. :-)

    ReplyDelete
  6. நீங்க ஞானாநந்தர் என்று இறைவனைச் சொல்லியிருக்கீங்க...நான் மேலே சொன்னது ஞானாநந்த ஸ்வாமிகளையே....அவரது அருள் கிடைக்கட்டும் என்று. உங்களுக்கு அவரைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. நானும் இந்த பாட்டு படிக்கும்போதெல்லாம் ஞானானந்த சுவாமிகளைத் தான் நினைச்சுக்குவேன். இந்தப் பாடலை சின்ன வயசுல அவருடைய "தபோவனத்"தில்தான் கத்துக்கிட்டேன்.

    ReplyDelete
  8. ஸ்தோத்ரம், பிரபந்தம், பாசுரம், பாடல் நூல் போன்ற இடங்களுக்கெல்லாம் பனுவல் என்ற சொல்லைப் புழங்கலாம் மௌலி. பன்னிப் பன்னி (திரும்பத் திரும்ப) உரைப்பது எதுவோ அது பனுவல்.

    ஞானானந்தா சரணம் சரணம் என்று பாடும் போதெல்லாம் சத்குரு ஞானானந்தர் தான் நினைவிற்கு வருவார். பொதுவாக இருக்கட்டும் என்று தான் இந்தப் பொருள் சொன்னேன். அவரைப் பற்றி ஓரளவிற்குத் தெரியும். தென்னாங்கூர் ஒரு முறை சென்றிருக்கிறேன்.

    ReplyDelete
  9. நானும் தான் அக்கா. தபோவனத்தவர்கள் தான் இந்தப் பனுவலைப் பாடினவங்களோ?

    ReplyDelete
  10. @குமரன் எல்லொருக்கும் ஆநனந்தத்தை கொடுக்கும் குருவே ஞனானந்தர் என்றும் கூறலாம், தபோவனத்தில் வாழ்ந்த குருஜியின் குருவான ஞனானந்தரையும் கூறலாம், எல்லா கலைகளுக்கும் ஆதாரமாக விளங்கும் ஞானானந்தமயமான ஹயக்கிரீவரயும் கூறலாம். நல்ல முயற்சி குமரன் தொடருங்கள்.

    ReplyDelete
  11. உண்மை தான் தி.ரா.ச.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  12. ஐயா,
    ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் இந்த பாடல் இவ்வாறு முடிவடைகிறது :

    ஜெய சிவரமணீ குருகுஹ ஜயணீ -ஜெயமனவனஹரிணீ
    ஜெய ஓம் ஸ்ரீ மாதா-மாதா-ஜெய ஜெய ஜெகன்மாதா
    மாதா- ஜெய ஓம் ஸ்ரீமாதா-மாதா- ஜெயஜெய ஜெகன்மாதா

    இந்த வரி வேறு எதிலும் இல்லை. நீங்கள் இதற்கும் விளக்கம் தந்தால் நன்றாக் இருக்கும்

    N.R.Ranganathan. Thapovanam.

    ReplyDelete
  13. Mr.Kumaran, sir, is it copyrighted article ?, do you have any objection if I reproduce this, with or without modifications or editing, in one of the spiritual journals ? please reply. Thank you. With regards,
    N.R.Ranganathan. ( mail id - nrpatanjali@yahoo.com )

    ReplyDelete
  14. Mr.Kumaran, sir, is it copyrighted article ?, do you have any objection if I reproduce this, with or without modifications or editing, in one of the spiritual journals ? please reply. Thank you. With regards,
    N.R.Ranganathan. ( mail id - nrpatanjali@yahoo.com )

    ReplyDelete
  15. Sir. You may reproduce this in the spiritual journals. Please mention my name and this blog name while doing so. Thanks.

    ReplyDelete