Monday, May 30, 2011

ஓர் சக்தி அவளே!



ஓம்சக்தி ஓம்சக்தி என்று பாடுவோம்
ஓயாமல் அவள்நாமம் என்றும் ஓதுவோம்
உன்சக்தி என்சக்தி என்றிங் கில்லை
ஓர்சக்தி அவளேயென் றுணர்வோம் உண்மை

சரணடைந்தால் சூலமேந்தி வருவாள் சக்தி
மரணங்கூட அணுகாமல் காப்பாள் சக்தி
பரமென்றே தொழுதுநின்றால் மகிழ்வாள் சக்தி
சிவமோடு சேர்ந்துஅருள் பொழிவாள் சக்தி

சக்திஅவ ளாலேதான் உலகம் இயங்கும் - அவளை
பக்திசெய்ய மறந்தாலே உள்ளம் மயங்கும்
சக்திசக்தி சக்தியென்று சிந்து பாடுவோம் - மாய
சக்திதனை வென்றுஅவளின் பாதம் தேடுவோம்!

--கவிநயா

படத்துக்கு நன்றி: தினமலர்


ஹிந்தோளம் ராகத்தில் வெகு பொருத்தமாக அமைத்து அருமையாக பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றிகள் பல!

Monday, May 23, 2011

நீ என்றன் அன்னையன்றோ?



கணந்தோறும் உன்னைக் கருத்துடன் பூஜித்தேன்
கருணை கொஞ்சம் வைப்பாய் நீ
மனம் காட்டுகின்ற மாயைகள் நம்பாமல்
உன்னை நம்ப வைப்பாய் நீ

கரடு முரடான என்றன் மனதினைச்
செப்பனிட்டு வைத்தேன் நான்
குறைகள் இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேணும்
தங்க மனத் தாயே நீ

சிரமம் பாராமல் சிங்கத்தை விடுத்து
என் மனம் குடிபுகுவாய்
காணாத வினைகளும் தானாக ஓடிடுமே
உன் முகம் கண்டதுமே

எத்தனை பிழைகள் நான் செய்தாலென்ன
நான் உன்றன் பிள்ளையன்றோ
மன்னித்து உன்னடி சேர்த்துக் கொள்ள வேணும்
நீ யென்றன் அன்னையன்றோ?

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/arunar/2777658592/

Monday, May 16, 2011

இமைப்பொழுதும் நீங்காதிரு!



இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா திருப்பாய்
இல்லை ஒருதுயரம் எனநீயே உரைப்பாய்
கணப்பொழுதில் மறைகின்ற மின்னல் போலன்றி
எப்பொழுதும் என்னுள்ளே பரிதியாய் ஒளிர்வாய்

சுடுநெருப்பின் வெம்மைபோல் குளிர்நீரின் தண்மைபோல்
இலைஉடுக்கும் பசுமைபோல் வான்நிலவின் வெண்மைபோல்
ஒருநொடியும் அகலாமல் என்னுள்ளே நிறைவாய்
உருகாத பனியாகி உள்ளத்தில் உறைவாய்

உன்னடிகள் உறுதியுடன் பற்றும்வரம் தருவாய்
உன்னையன்றி ஒருநினைவும் அற்றிடவே அருள்வாய்
மயக்கம்தரும் மாயைஎனும் மருள்நீக்க வருவாய்
இயக்கத்தின் மூலமே எம்மைக் காத்தருள்வாய்


--கவிநயா

Tuesday, May 10, 2011

சஞ்சலம் அகற்றிடுவாய்!


சஞ்சல மகற்றிடுவாய் - அம்மா
அஞ்சலென் றணைத்திடுவாய்
அஞ்சன விழி உமையே - சிவன்
கொஞ்சு கின்ற சிவையே

தஞ்சமென் றுனை அடைந்தேன் - எழில்
அஞ்சுகமே அருள்வாய்
கஞ்சமலர்ப் பதங்கள் - என்றன்
நெஞ்சினிலே பதிப்பாய்

துஞ்சிடும் பொழுதினிலும் - அம்மா
என்னுடனே இருப்பாய்
விஞ்சிடும் அன்புடனே - என்னை
இருகரத் தாலணைப்பாய்


--கவிநயா

சுப்பு தாத்தா அடானா ராகத்தில் பாடுகிறார். மிக்க நன்றி தாத்தா!



படத்துக்கு நன்றி: http://jmdtutor.com/images/wallpaper/god/goddess_durga_wallpapers02.jpg