Friday, July 29, 2011

ஆ.வெ.2: மஹாலக்ஷ்மி அஷ்டோத்ரம்



இங்கே கேட்கலாம்...

ஒவ்வொரு நாமாவின் ஆரம்பத்தில் 'ஓம்' மற்றும் இறுதியில் 'நம:' சேர்த்துக் கொள்ளவும்.

ஓம் ப்ரக்ருத்யை நம:
விக்ருத்யை
வித்யாயை
ஸர்வபூத-ஹிதப்ரதாயை
ச்ரத்தாயை
விபூத்யை
ஸ¤ரப்யை
பரமாத்மிகாயை
வாசே
பத்மாலயாயை
பத்மாயை
சுசயே
ஸ்வாஹாயை
ஸ்வதாயை
ஸுதாயை
தன்யாயை
ஹிரண்மய்யை
லக்ஷ்ம்யை
நித்யபுஷ்டாயை
விபாவர்யை
அதித்யை
தித்யை
தீப்தாயை
வஸுதாயை
வஸுதாரிண்யை
கமலாயை
காந்தாயை
காமாக்ஷ்யை
க்ஷீரோதஸம்பவாயை
அனுக்ரஹ ப்ரதாயை
புத்தயே
அநகாயை
ஹரிவல்லபாயை
அசோகாயை
அம்ருதாயை
தீப்தாயை
லோகசோக-விநாசின்யை
தர்மநிலயாயை
கருணாயை
லோகமாத்ரே
பத்மப்ரியாயை
பத்மஹஸ்தாயை
பத்மாக்ஷ்யை
பத்மஸுந்தர்யை
பத்மோத்பவாயை
பத்மமுக்யை
பத்மநாபப்ரியாயை
ரமாயை
பத்மமாலாதராயை
தேவ்யை
பத்மின்யை
பத்மகந்தின்யை
புண்யகந்தாயை
ஸுப்ரஸன்னாயை
ப்ரஸாதாபிமுக்யை
ப்ரபாயை
சந்த்ரவதனாயை
சந்த்ராயை
சந்த்ரஸஹோதர்யை
சதுர்ப்புஜாயை
சந்த்ரரூபாயை
இந்திராயை
இந்து-சீதலாயை
ஆஹ்லாதஜனன்யை
புஷ்ட்யை
சிவாயை
சிவகர்யை
ஸத்யை
விமலாயை
விச்வஜனன்யை
துஷ்ட்யை
தாரித்ர்ய-நாசின்யை
ப்ரீதிபுஷ்கரிண்யை
சாந்தாயை
சுக்லமால்யாம்பராயை
ச்ரியை
பாஸ்கர்யை
பில்வநிலயாயை
வராரோஹாயை
யசஸ்வின்யை
வஸுந்த்ராயை
உதாராங்காயை
ஹரிண்யை
ஹேமமாலின்யை
தனதானயகர்யை
ஸித்தயே
ஸ்த்ரைணஸெளம்யாயை
சுபப்ரதாயை
ந்ருபமேச்மகதானந்தாயை
வரலக்ஷ்ம்யை
வஸுப்ரதாயை
சுபாயை
ஹிரண்யப்ராகாராயை
ஸமுத்ரதனயாயை
ஜயாயை
மங்களாயை
தேவ்யை
விஷ்ணுவக்ஷஸ்தல-ஸ்திதாயை
விஷ்ணுபதன்யை
ப்ரஸன்னாக்ஷ்யை
நாராயணஸமாச்ரிதாயை
தாரித்ர்யத்வமஸின்யை
தேவ்யை
ஸர்வோபத்ரவவாரிண்யை
நவதுர்க்காயை
மஹாகாள்யை
ப்ரஹ்மவிஷ்ணு - சிவாத்மி காயை
த்ரிகாலஜ்ஞானஸம்பன்னாயை
புவனேச்வர்யை

அன்புடன்
கவிநயா

படத்துக்கு நன்றி: http://shrimatasharan.blogspot.com/2010/11/sri-lakshmi-puja.html


***

இந்த அட்டோத்திரத்தின் மொழிப்பெயர்ப்பு:

ஓம் இயற்கையே போற்றி!
ஓம் பலவடிவானவளே போற்றி!
ஓம் கல்வியே போற்றி!
ஓம் அனைத்துயிர்க்கும் அருள்பவளே போற்றி!
ஓம் இசைக்கப்படுபவளே போற்றி!

ஓம் செல்வமே போற்றி!
ஓம் விண்ணவளே போற்றி!
ஓம் உள்ளுறைபவளே போற்றி!
ஓம் சொல்லே போற்றி!
ஓம் தாமரைக் கோவிலே போற்றி!

ஓம் தாமரையே போற்றி!
ஓம் தூய்மையே போற்றி!
ஓம் மங்கலமே போற்றி!
ஓம் அமங்கலத்தைத் தீர்ப்பவளே போற்றி!
ஓம் அமுத ஊற்றே போற்றி!

ஓம் நன்றியே போற்றி!
ஓம் பொன்வடிவானவளே போற்றி!
ஓம் இலக்குமியே போற்றி!
ஓம் என்றும் வலிமை அருள்பவளே போற்றி!
ஓம் ஒளியே போற்றி!

ஓம் அளவில்லாதவளே போற்றி!
ஓம் வேண்டுதல் அருள்பவளே போற்றி!
ஓம் கனலே போற்றி!
ஓம் உலகமே போற்றி!
ஓம் உலகைக் காப்பவளே போற்றி!

ஓம் தாமரையே போற்றி!
ஓம் கவர்பவளே போற்றி!
ஓம் காதற்கண்ணியே போற்றி!
ஓம் பாற்கடலில் உதித்தவளே போற்றி!
ஓம் அருளை அள்ளித் தருபவளே போற்றி!

ஓம் அறிவே போற்றி!
ஓம் குற்றமில்லாதவளே போற்றி!
ஓம் விண்ணவன் துணைவியே போற்றி!
ஓம் சோகமற்றவளே போற்றி!
ஓம் அழிவற்றவளே போற்றி!

ஓம் சுடரே போற்றி!
ஓம் உலகக் கவலைகள் தீர்ப்பவளே போற்றி!
ஓம் அறத்தில் நிலைத்தவளே போற்றி!
ஓம் அருளே போற்றி!
ஓம் உலக அன்னையே போற்றி!

ஓம் தாமரையை விரும்புபவளே போற்றி!
ஓம் தாமரை ஏந்தியவளே போற்றி!
ஓம் தாமரைக்கண்ணியே போற்றி!
ஓம் தாமரை அழகியே போற்றி!
ஓம் தாமரையில் தோன்றுபவளே போற்றி!

ஓம் தாமரை முகத்தவளே போற்றி!
ஓம் பத்மநாபன் துணைவியே போற்றி!
ஓம் மகிழ்ச்சியே போற்றி!
ஓம் தாமரை மாலை அணிந்தவளே போற்றி!
ஓம் தேவியே போற்றி!

ஓம் தாமரைத் திருவே போற்றி!
ஓம் தாமரை மணமே போற்றி!
ஓம் புனித மணமே போற்றி!
ஓம் எளிதில் மகிழ்பவளே போற்றி!
ஓம் அருள்வதில் மகிழ்பவளே போற்றி!

ஓம் ஒளிவட்டமே போற்றி!
ஓம் மதிமுகமே போற்றி!
ஓம் மதியே போற்றி!
ஓம் மதியின் உடன்பிறப்பே போற்றி!
ஓம் நால்கரத்தாளே போற்றி!

ஓம் மதிவடிவானவளே போற்றி!
ஓம் நீலத்தாமரையே போற்றி!
ஓம் மதியின் குளிர்ச்சியே போற்றி!
ஓம் பேரின்பப் பெருக்கே போற்றி!
ஓம் உடல் நலமே போற்றி!

ஓம் மங்கலமே போற்றி!
ஓம் மங்கலம் அருள்பவளே போற்றி!
ஓம் உண்மையே போற்றி!
ஓம் குறையில்லாதவளே போற்றி!
ஓம் அனைத்திற்கும் அன்னையே போற்றி!

ஓம் நல வடிவே போற்றி!
ஓம் வறுமையைப் போக்குபவளே போற்றி!
ஓம் அன்பு ஏரியே போற்றி!
ஓம் அமைதியே போற்றி!
ஓம் வெண்ணிற மாலையும் ஆடையும் உடுத்தியவளே போற்றி!

ஓம் ஒளியைத் தருபவளே போற்றி!
ஓம் வில்வத்தில் உறைபவளே போற்றி!
ஓம் வரங்களை அருள்பவளே போற்றி!
ஓம் புகழே போற்றி!
ஓம் இயற்கைச் செல்வங்களைத் தாங்குபவளே போற்றி!

ஓம் ஒப்பற்ற அழகே போற்றி!
ஓம் மான் ஒத்தவளே போற்றி!
ஓம் பொன்னணியாளே போற்றி!
ஓம் பொன்னையும் உணவையும் தருபவளே போற்றி!
ஓம் பயனே போற்றி!

ஓம் பெண்களுக்கு அருள்பவளே போற்றி!
ஓம் சுபம் அருள்பவளே போற்றி!
ஓம் அரண்மனைகளில் நிலைத்தவளே போற்றி!
ஓம் வரலட்சுமியே போற்றி!
ஓம் செல்வங்கள் தருபவளே போற்றி!

ஓம் சுபமே போற்றி!
ஓம் பொன்னால் சூழப்பட்டவளே போற்றி!
ஓம் அலைமகளே போற்றி!
ஓம் வெற்றியே போற்றி!
ஓம் மங்கலமே போற்றி!

ஓம் தேவியே போற்றி!
ஓம் மாலவன் மார்பில் நிலைத்தவளே போற்றி!
ஓம் மாதவன் துணையே போற்றி!
ஓம் மகிழ்ச்சி பொங்கும் கண்களை உடையவளே போற்றி!
ஓம் நாரணனுடன் அடைக்கலமாக அடையப்படுபவளே போற்றி!

ஓம் வறுமையை துவைப்பவளே போற்றி!
ஓம் தேவியே போற்றி!
ஓம் அனைத்து இடைஞ்சல்களையும் நீக்குபவளே போற்றி!
ஓம் நவதுர்க்கையே போற்றி!
ஓம் மகாகாளியே போற்றி!

ஓம் பிரமன் விண்ணவன் சிவன் வடிவானவளே போற்றி!
ஓம் முக்காலமும் அறிந்தவளே போற்றி!
ஓம் உலகை ஆளும் அன்னையே போற்றி!

Monday, July 25, 2011

ஆடியிலே கூழு வச்சு...



ஆடியிலே கூழு வச்சு
ஆத்தா ஒனக்காகத் தந்தோம்
ஓடிவந்து எங்களுக்கு கண்ணாத்தா – நீயும்
ஒதவி செய்ய வேணுமடி பொன்னாத்தா!

மஞ்ச குளிச்சுப் புட்டு
மங்கலமா பொட்டு வச்சு
மாவிளக்கு எடுத்து வந்தோம் கண்ணாத்தா – நீயும்
மனசு வக்க வேணுமடி பொன்னாத்தா!

அச்சுவெல்லந் தட்டிப் போட்டு
பச்சரிசி பொங்க வச்சு
பக்குவமா எடுத்து வந்தோம் கண்ணாத்தா – நீயும்
பரிவு காட்ட வேணுமடி பொன்னாத்தா!

தாயே உன் காலடியே
தஞ்சமின்னு ஓடி வந்தோம்
தயங்காம எங்களுக்கு கண்ணாத்தா – நீயும்
தயவு செய்ய வேணுமடி பொன்னாத்தா!

--கவிநயா

('செல்லாத்தா' பாடலின் பாதிப்பு :)

படத்துக்கு நன்றி: http://shakthinesaa.blogspot.com/2011/07/blog-post.html

Friday, July 22, 2011

ஆ.வெ.1: படவேடு! - செல்லாத்தா!

ஆடி வெள்ளியில் ஆடி வரும், அழகி...
எங்கூருக்கு அண்மையில் உள்ள...படவேடு மாரியம்மன் = ரேணுகாம்பாள்!
குங்குமமே தராத அம்மன் கோயில்-ன்னா, இது மட்டுமே!

தொண்டை மண்டல அம்மன் கோயில்களில் படவேடு மிகவும் புகழ் பெற்றது!
ஆர்க்காடு-ஆரணி சாலையில் உள்ளது!
பெங்களூரில் இருந்து பள்ளிகொண்டா-வாழியூர் வழியாக வரலாம்; வேலூரில் இருந்து சந்தவாசல் வழியாகவும் வரலாம்!

சம்புவராயர் காலம் தொட்டு, பல நூற்றாண்டுப் பழமை வாய்ந்த கோயில் சூழ இருக்கும் ஆலயம்!
இந்த ஆலயங்கள் ஆற்று மணலில் புதையுண்டு போக, அதை மீட்டெடுத்து, TVS அறக்கட்டளை பேணி வருகிறது!

சுற்றிலும் வாழைத் தோப்பும் வயல்களும் மலைகளும் சூழ...
அம்மன்=ரேணுகை!
பரசுராமனின் தாய்!
மூலவரான அம்மன், முகம் மட்டுமே தரையில் ஊன்றியவள்!

அவளுக்குப் பின்னே, அத்தி மரத்தால் செய்த அம்மனின் முழுத் திருவுருவம்! ஆதிசங்கரர் நிறுவிய பாணலிங்கம் மற்றும் நானாகர்ஷணச் சக்கரமும் அருகில்!
இங்கு குங்குமப் பிரசாதம் கிடையாது!
ஆற்றோரமாய், ஜமதக்னி முனிவரின் யாக குண்டம் எனப்படும் திட்டிலிருந்து, ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மண்"நீறு" மட்டுமே தருவது வழக்கம்!



ஜமதக்னி முனிவர்-ரேணுகாம்பாள் கதை பலரும் அறிந்த ஒன்றே!

தேவியின் அம்சமான ரேணுகை, தனது போர் வீரர்களுடன் யாத்திரை சுற்றி வர, சிவபெருமானின் அம்சமான ஜமதக்னி தங்கி இருக்கும் இடத்தில் வந்து சேர்கிறார்!
இரு கூட்டத்தாருக்கும் இடையே சண்டை மூள, தேவி நெருப்பினை ஏவ, முனிவர் கமண்டல நதியால் அதைக் குளிர்வித்து, பின்னர் அவளை மணமும் புரிந்து கொள்கிறார்!

இவர்களுக்குப் பிறந்தவனே பரசுராமன்!

ஒரு நாள்.....
ரேணுகை, ஆற்றிலே நீர் முகக்கும் போது, கந்தர்வனின் நிழல் கண்டு சற்றே சலனப்பட...
கற்பெனப் படுவது பிறன் "நெஞ்சு புகாமையோ"?.....
அப்படிப் பார்த்தால் யார் தான் கற்புள்ளவர்கள்? முருகா :((

ஜமதக்னி, அவள் "சலனம்" கண்டு சலனப்பட்டார்....
அவளை ஒதுக்குகிறார்!
மகன் பரசுராமனை ஏவி, அவளைக் கொல்லவும் சொல்லி ஆணையிடுகிறார்!
முனியின் சீற்றம் கண்டு, வேறு வழியே இன்றி, அவனும் தாயைத் துணித்து, தன் ஒரு கையையும் துணித்துக் கொள்கிறான்!

ஒரு சலனத்துக்கு, இத்தனை தொடர் சலனங்கள் தேவையா?
பரசுராமன் அழ.....சிவ சொரூபமான முனிவர் வருந்தி, ரேணுகையை உயிர்பித்துத் தரும் நீரைக் கமண்டலத்தில் தர,
பரசுராமனோ படபடப்பில், தாயின் தலையை, காட்டில் வேறொரு குயவப் பெண்ணின் உடலோடு பொருத்தி விடுகிறான்! புதிய ரேணுகை, எழுகிறாள்!

இந்த நிகழ்வுகளுக்குப் பின் முனிவர் மிகவும் ஒடுங்கிப் போய், தவம் இயற்றத் தொடங்க, வேறு ஒன்று சூழ்கிறது!
ஆசிரமத்தின் காமதேனுப் பசுவுக்கு ஆசைப்பட்டு, கார்த்தவீர்ய மன்னன் அவரைத் தவநிலையில் கொன்று விடுகிறான்!

சேதி அறிந்த பரசுராமன், அவனையும், அவன் தோன்றல்களையும், ஆணவம் பிடித்த அரசர்களையும் பூண்டோடு வீழ்த்த பெருங் கோலங் கொள்கிறான்!

முனிவரின் உடலை எரித்த நெருப்பிலே, ரேணுகையும் வீழ...
அப்போது பெய்த மழையால், அவள் மேல் தீக்காயங்கள் பரவின! வேப்பிலை போர்த்தியபடி எரியிலிருந்து எழ, ஈசன் அவளுக்கு அருள்கிறான்!
ஜமதக்னியும், ரேணுகையும் மேலுலகம் செல்லவிட்டு நிற்க....,

அவளோ, அவள் பட்ட மனத் துயரங்களின் நினைவாக, தலை உருவத்தை வழிபாட்டுக்குத் தந்து போகிறாள்!

எந்தத் தலை சலனப்பட்டதோ....அதே தலைக்கு வழிபாடு!
எந்தத் தலையைத் தண்டிக்கத் துணிந்தார்களோ....அதே தலைக்கு வழிபாடு!
கற்பெனப் படுவது....பிறன் நெஞ்சு புகாமையோ?
கற்பெனப் படுவது....இரு நெஞ்சங்களும் ஒருவரை ஒருவர் அறிவதே!


படவேடு ஆலயம் வயல்கள் சூழ, மலையின் கீழ் அமைந்துள்ளது!
விழாக் காலங்களில் கூட்டமும் நிறைய! ஆடியும், நவராத்திரியும் சிறப்பு விழாக்கள்! மற்றபடி, பெரிய வசதியுள்ள ஊர் கிடையாது!
சுற்றிலும் கிராமங்களே! அம்மன் கோயில் மட்டுமில்லாம, எல்லாக் கோயிலுக்கும் போகணும்-ன்னா, சாப்பாட்டுக்கு முன்னமேயே சொல்லிக்கிறது நல்லது! வெயிலில், பசி வயிற்றைக் கிள்ளும்!:)

மலை மேல் உள்ள முருகன் ஆலயமும், வேல் ஆலயமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! மிகவும் வித்தியாசமான முருகன்!
மயில் மேல் உட்காராமல், உய்ய்யரமாய்...."நின்று" கொண்டிருப்பான்!
ஏறு மயில் ஏறி, நெட்டைக் கொக்காய் நிற்கும் முகம் ஒன்றே! - டேய் நெட்டைக் கொக்கு முருகா - Stand up on the bench:)

இந்தக் கிராமச் சுழலும், இவனும்....சின்ன வயசில் முதன் முதலாகப் பார்த்த போது பறி கொடுத்தது-ன்னு நினைக்கிறேன்! அப்போ ரொம்ப சின்ன வயசு!
இவன் பொம்மையைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டுத் தூங்கும் பழக்கம்....வாழைப் பந்தல் கிராமத்தில் என்னைப் பலரும் கேலி:)

முருகன்-ன்னா, தெய்வம்-ன்னே ஒரு உணர்வு வராம, என்னவன்-என்னவன்-ன்னு இப்படித் தான் ஆகிப் போனதோ? தெரியல!
பெருமாள்-ன்னாத் தான் தெய்வம், ஆலயத்தில் தமிழ் ஏற்றம், சாதி மறுப்பு, இராமானுசர்-ன்னு ஆகிப் போனது!

ஆலயத்துக்கு அருகிலேயே ஒரு வித்தியாசமான இராமன் கோயில்! அனுமன் கையில் ஏட்டுடன் படித்த படி முன்னே இருக்க...
இராமன் தியான கோலத்தில் உட்கார்ந்த வண்ணம், சீதை-இலக்குவன் அருகிருக்கும் காட்சி!
மயில் ராவணனின் மாயங்களை அடக்க முடியாமல் தவித்த போது, அனுமன் தேவியை வேண்டும் காட்சி! அதுவே படவேடு ஆலயத்துக்கு அருகில் அமைந்து விட்டது!

அழகான வயல்கள்! அழகான மலைகள்! அழகிய கிராமங்கள்!
சம்புவராயர் காலக் கல்வெட்டுகள்!
கைலாசப் பாறை, ஜலகம் பாறை, ஜவ்வாது மலை சூழ இருக்கும் காட்சி!
படவேட்டுக்கு ஒரு முறை அவசியம் சென்று வாருங்கள்! பெங்களுர்-சென்னை நெடுஞ்சாலை இன்னும் எளிது!



இன்றைய ஆடி வெள்ளிப் பாடல்...அனைவரும் அறிந்த...செல்லாத்தா!
குரல்: எல்.ஆர்.ஈஸ்வரி
ஆல்பம்: தாயே கருமாரி

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
(செல்லாத்தா)

தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா
(செல்லாத்தா)

பசும்பாலைக் கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி அதைப் பாங்காகக் குடித்துவிட்டு
தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
(செல்லாத்தா)

ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா - எங்கள்
ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா!


அம்மா......படவேடு தாயே!
மனம் இரங்கி என்னைப் பார்க்க மாட்டாயா? "என் முருகனுக்கு என்னை விதி" என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு!

Wednesday, July 20, 2011

பேருண்மை நீயேயடி!


காருண்ய தேவதையே காப்பாற்று காமினியே
பேருண்மை நீயேயடி!
வேருண்ட மண்போல நீயுண்ட என்மனதால்
வேறுண்மை தேடேனடி!

நீருண்ட மேகமென நீண்டிருக்கும் குழலழகி
நிலங்கொண்டு பதம்பணிந்தேன்!
காடுண்ட இருள்போல கருத்திருக்கும் விழியழகி
வலங்கொண்டு வணங்குகின்றேன்!

படங்கொண்ட அரவணிந்த பரமசிவன் நாயகியே
சிரங்கொண்டு பதம்பணிந்தேன்!
விடங்கொண்ட கண்டனவன் இடமிருக்கும் பைங்கிளியே
மனங்கொண்டு வணங்குகின்றேன்!

--கவிநயா