Monday, October 31, 2016

ஒரு பதில் கூறாயோ?



சுபபந்துவராளி ராகத்தில் கீதாம்மா மனமுருகப் பாடியது. மிக்க நன்றி அம்மா!

எந்தன் உறவாய் உன்னை நினைத்தேன்

உள்ளம் முழுவதும் உன்னை நிறைத்தேன்

கண்மணித் தாயே என்னுயிர் நீயே

என்னிடம் வாராயோ?

வந்தெனக்கு ஒரு பதில் கூறாயோ?



அன்னை என்றுதான் உன்னை அழைத்தேன்

அருகில் அமர்ந்து பேசத் தவித்தேன்

அன்னைத் தமிழால் பாட்டும் படித்தேன்

என்னிடம் வாராயோ?

வந்தெனக்கு ஒரு பதில் கூறாயோ?



உந்தன் பெயர்தான் நெஞ்சில் பதித்தேன்

மந்திரமாய் அதை ஓதி ஜெபித்தேன்

சுந்தரத் தாயே என்னுயிர் நீயே

என்னிடம் வாராயோ?

வந்தெனக்கு ஒரு பதில் கூறாயோ?



விண்ணில் நிலவாய் என்னுள் ஒளிர்வாய்

மண்ணில் மலராய் என்னுள் மலர்வாய்

சொல்லில் பொருளாய் என்னுள் இருப்பாய்

என்னிடம் வாராயோ?

வந்தெனக்கு ஒரு பதில் கூறாயோ?


--கவிநயா 


Monday, October 24, 2016

தேவி நின் திருவடிகள் போற்றுகின்றேன்!



கீதாம்மாவின் இனிய குரலில் மிக்க நன்றி கீதாம்மா! 

தேவி நின் திருவடிகள் 
போற்றுகின்றேன்

தேவாதி தேவரெல்லாம் 
பதம் பணிந்தேத்தும் எந்தன்

(தேவி)



மூவருக்கும் முதல்வி

வேதங்களின் தலைவி

நாளும் தொழுபவர்க்கு

நலம் புரியும் துணைவி

(தேவி)



சித்தமெல்லாம் என்றும்

சிவை மயமே

சக்தி உந்தன் துணை இருக்க

இனி எனக்கேன் பயமே?

(தேவி)

பக்தி என்னும் பணிவைத்

தந்தருள்வாய்

பித்தனுடன் விடையேறி

வந்தருள்வாய், அம்மா

(தேவி)



--கவிநயா 

Monday, October 17, 2016

அபிராமி!



கீதாம்மாவின் இனிய குரலில்ல், இசையில் மிக்க நன்றி கீதாம்மா!

அபிராமி உன் பாதம் பணிந்து விட்டேன்
அபயமென்று அடைக்கலமாய் வந்து விட்டேன்

(அபிராமி)



திருக்கட வூரினிலே அபிராமி

தில்லை நகர்ச் சிதம்பரத்தில் சிவகாமி

மாநகர் மதுரையிலே மீனாக்ஷி

கோவில் நகர்க் காஞ்சியிலே காமாக்ஷி

(அபிராமி)



ஆயிரமாயிரம் பெயர் கொண்டாய், ஆயினும்

அன்னை என்றே என்நெஞ்சில் நிலை கொண்டாய்

பாயிரம் ஆயிரம் பாடுகின்றேன்

பயிரவி நினதருளை நாடுகின்றேன்

(அபிராமி)


--கவிநயா 

Sunday, October 9, 2016

வாணியை வேண்டுதல்



வாணியை வேண்டுதல் 
(பாரதியாரின்  பாஞ்சாலி சபதத்திலிருந்து  கிடைத்த 
 சரஸ்வதி  துதி )

தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர 

            மொழிந்திடுதல்;சிந்திப்பார்க்கே 

களிவளர உள்ளத்தில் ஆனந்தக்கனவு பல 

              காட்டல் ,கண்ணீர்த் 

துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம்

               நீ அருளும் தொழில்களன்றோ ?

ஒளிவளருந்தமிழ்வாணீ !அடியநேற் 

                 கிவையனைத்தும்  உதவுவாயே.
 

Wednesday, October 5, 2016

மா லக்ஷ்மி தாயே!




கீதாம்மாவின் தேனினிய குரலில் சங்கராபரணம் ராகத்தில்.... மிக்க நன்றி கீதாம்மா! 

மா லக்ஷ்மி தாயே!

மலர் பூத்த மாயே!

மாலவனின் மணிமார்பில்

மகிழ்ந்திருப்பாயே!

(மா லக்ஷ்மி)



அழகுக்கு அழகான

திருமகள் நீயே!

அகிலமெல்லாம் போற்ற

அலைகடல் உதித்தாயே!

(மா லக்ஷ்மி)



செல்வங்கள் யாவற்றிற்கும்

அதிபதி நீயே!

எந்தச் செல்வம் வந்த போதும்

எந்தன் செல்வம் நீயே!



விண்ணும் மண்ணும் அளந்தவனின்

கண்ணின் மணி நீயே!
நெல்லிக் கனி ஒன்றிற்காக

பொன்மழை பொழிந்தாயே!
(மாலக்ஷ்மி)


--கவிநயா 


Sunday, October 2, 2016

துர்க்கை அம்மா!


அனைவருக்கும் இனியா நவராத்திரி வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!




நாதநாமக்கிரியை யில் கீதாம்மா இனிமை ததும்பப் பாடியது... மிக்க நன்றி அம்மா!


துர்க்கை என்னும் நாமம் கொண்டு துக்கம் நீக்குகின்றவள்!

பட்சம் கொண்டு பக்கம் வந்து காத்து நிற்கும் தாயவள்!



அன்னையென்று சொல்லி விட்டால் மின்னல் போல வருபவள்!

சண்ட முண்டர் சிரமறுக்கச் சண்டியாகி நின்றவள்!



வீறு கொண்ட வேங்கை போல வேகங் கொண்ட மாதவள்!

பார் சிறக்கப் போர் தொடுத்து அசுரர் தம்மை மாய்த்தவள்!



கால் பிடித்த பக்தருக்குக் காவல் நிற்கும் தாயவள்!

மால் பிடித்த மதி மயக்கம் தெளிய வைக்கும் தூயவள்!



மாய மகிஷன் தன்னை வெல்லச் சூலமேந்தி வந்தவள்!

காலம் வென்று காளியாகித் தர்மம் காத்துத் தந்தவள்!



அண்டி வந்த பக்தர் தம்மை அரவணைத்துக் காப்பவள்!

சண்டியாகி நின்ற போதும் அன்பு செய்யும் தாயவள்!



சங்கரனில் பாதியவள் சங்கடங்கள் நீக்குவாள்!

சந்திரனைச் சூடியவள் சஞ்சலங்கள் போக்குவாள்!



மறைகள் எல்லாம் போற்றுபவள் குறைகளெல்லாம் நீக்குவாள்!

பிறை அணிந்த நாதனுடன் பிறவித் துன்பம் போக்குவாள்!


--கவிநயா