Tuesday, July 27, 2021

உன் அழகு


உன்னழகைப் பாட என் கவியால் ஆகுமோ?

உன்புகழைக் கூற செந்தமிழும் போதுமோ?

(உன்)

 

சின்னஞ் சிறு கவியினிலே

வண்ணத் தமிழைக் குழைத்து

பண்கள் அதில் அமைத்து

பக்தி கொஞ்சம் இழைத்து

(உன்)

 

கொஞ்சும் மொழி அழகு

அஞ்சும் நடை அழகு

வஞ்சியுன்றன் பாதங்களில்

கொஞ்சும் கொலுசும் அழகு

 

கொடியன்ன இடை அழகு

மதியன்ன நுதல் அழகு

கடலன்ன கருணை பொங்கும்

கரு விழிகள் அழகு

(உன்)


--கவிநயா


Wednesday, July 21, 2021

ஆடி மாசக் காத்து

 

 ஆடி மாசக் காத்துப் போல ஆடுதம்மா மனசு

ஒன்னத் தேடித் தேடிப் பாடிப் பாடி ஏறுது என் வயசு

(ஆடி)

 

கூடு விட்டுக் கூடு பாயும் பொறப்பு ரொம்ப தினுசு, அதுல

ஒன் நெனப்பே பொழப்பானா நிம்மதியாகும் மனசு

(ஆடி)

 

ஆத்தான்னு கூப்புட்டேன் திரும்பிப் பாக்கவில்ல

ஏந்த்தான்னு ஒரு வார்த்த நீயும் கேட்கவில்ல

காத்தோட என் சோகம் போக வெக்கவில்ல

பாத்தாலும் போதும் ஆனாலும் பாக்கவில்ல

(ஆடி)

 

 --கவிநயா

Tuesday, July 13, 2021

உன் நாமம்

 

மயிலறகாய் வருடுதம்மா உன்திரு நாமம், அதைச்

சொல்லச் சொல்ல நாவினிலே ஊறுது தேனும்

(மயில்)

 

ஓடுகின்ற எண்ணமெல்லாம் ஒரு நொடி நிற்கும், அது

வாடுகின்ற போதுன் உன்மேல் நம்பிக்கை வைக்கும்

(மயில்)

 

கோடிக் கோடிப் பிள்ளைகளில் கடைநிலைப் பிள்ளை, உனைக்

கூவிக் கூவி அழைக்கின்றேன், பொறுத்திடு தொல்லை

உன் புகழைப் பாடிப் பாடிப் பிழைத்திடும் கிள்ளை

உன் திருவடிக ளன்றி எனக்கு அடைக்கலம் இல்லை

(மயில்)

 

 

--கவிநயா


Monday, July 5, 2021

எல்லாம் உன்னருளே

 


உன்னருளாலே உன்னருளாலே

உலகமெல்லாம் உன்னருளாலே

உன்னருளாலே உன்னருளாலே

உயிர்களெல்லாம் உன்னருளாலே

(உன்)

 

முன்னவளே எழிற்பெண்ணவளே

பின்னவளே எனைப் பெற்றவளே

கண்ணவளே கனியமுதவளே

அன்னையளே அன்பினியவளே

(உன்)

 

எந்தையுடன் எனையாண்டிடவே

சிந்தையிலே வந்தருளிடுவாய்

முந்தைவினை எனைவிட்டிடவே

முந்திவந்துன்பதம் பற்றிடவே

 

கந்தன் கணபதி தாயவளே

இந்தப் பிள்ளையும் உனதன்றோ

சந்தத் தமிழினில் ஏத்துகிறேன்

வந்தருள்வாய் அருள்தந்தருள்வாய்

(உன்)


--கவிநயா