Thursday, June 2, 2011

தமிழிசை: நீ இரங்காய் எனில் புகலேது?

அம்மன் பாட்டு-ன்னாலே கவிநயா அக்கா தான்!
இருந்தாலும் அம்மா-க்கு பொண்ணுங்களை விட பசங்க தான் ஒரு சுத்து ஜாஸ்தியா பிடிக்குமாம்!:)

அதனால் நான்...இன்று, இங்கு, அம்மன் பாட்டிலே...
ஆதி சக்தி வீட்டில் எந்தன்
நாதி கிடக்கும் - என்
மீதி உயிர் மீது அவன்
பார்வை பிறக்கும்

கந்தன் மனக் கல்லுருகும்
காலம் வரைக்கும் - உன்
தோளே கதி, தாளே கதி
தோகை மயிலே!

அம்மா...நீ இரங்காய் எனில், புகல் ஏது?


பலருக்கும் இந்தப் பாட்டு தெரியும்!
புகழ்பெற்ற இந்தப் பாடலை இயற்றியவர்: பாபநாசம் சிவன் (தஞ்சை இராமையா)!
தஞ்சைக்கு அருகில் உள்ள பாபநாசத்தில், ஒரு சிவன் கோயில்! உடல் முழுக்க திருநீறு பூசிக் கொண்டு, கோயிலில் போக்கற்று திரிந்த காலத்தில், இவர் பாடிக் கொண்டே இருப்பதைக் கண்டு, அவ்வூர் மக்கள்...
நம்மூரு "பாபநாசத்தில் ஒரு சிவன்" போல இருக்கிறாரே என்று வியக்க...அதுவே நாளடைவில் "பாபநாசம் சிவன்" என்றே நிலைத்து விட்டது!

கர்நாடக இசையில் தமிழ்ப் பாடல்கள் சொற்பமாக இருந்த காலத்திலே...
தமிழ்ப் பாடல்களாக எழுதிக் குவித்த அண்ணல்! தமிழ்த் தியாகைய்யர் என்றும் போற்றுவார்கள்! 1973-இல் மறைந்தார்!
தமிழிசை, மற்றும் தமிழ்மொழியில் கர்நாடக இசை...இரண்டுக்கும் பெருந்தொண்டு ஆற்றியவர் நம் பாபநாசம் சிவன்!

நீ இரங்காயெனில் புகலேது - இந்தப் பாடலின் பின் ஒரு கதையும் உண்டு!

இதை சினிமாவுக்காக எழுதிக் கொண்டு சென்றார் சிவன்! ஆனால் அந்த இசையமைப்பாளர் கண்டு கொள்ளவில்லை! மனமொடிந்த சிவன், இதை இராஜாஜி-யிடம் காண்பிக்க...
அவர் அதை எம்.எஸ் அம்மாவிடம் காண்பிக்க, ஆழ்வார் பாசுரம் போலவே இருக்கே-ன்னு எம்.எஸ் அதை "ஹம்" பண்ணிக் காட்ட, அருகில் இருந்த பலரும் சொக்கிப் போய் விட்டார்கள்!

பின்பு.....எம்.எஸ் அதை உருக உருகப் பாடி.....
ஒரு மறுதலிக்கப்பட்ட பாடல்...
ஏற்றுக்கொண்ட பாடலாகி...
மேடை தோறும் மேடை தோறும்...

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
புகல் ஒன்றில்லா அடியேன்,
நீ இரங்காய் எனில் - புகல் ஏது?

கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
* எம்.எஸ்.சுப்புலட்சுமி
* மகாராஜபுரம் சந்தானம்
* நாதசுரம் - Fusion - கோகுல்

நீ இரங்காய் எனில் புகல் ஏது? - அம்பா
நிகில ஜகன்னாதன் மார்பில் உறை திரு
(நீ இரங்காய் எனில்)

தாய் இரங்கா விடில், சேய் உயிர் வாழுமோ?
சகல உலகிற்கும் நீ, தாய் அல்லவோ அம்பா?
(நீ இரங்காய் எனில்)

பாற்கடலில் உதித்த திருமகளே - செள
பாக்ய லட்சுமி என்னைக் கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா
(நீ இரங்காய் எனில்)

வரிகள்: பாபநாசம் சிவன்
ராகம்: அடானா
தாளம்: ஆதி

பிற கலைஞர்கள்: (One Stop Shop)
* சாக்ஸோஃபோன் - கத்ரி கோபால்நாத்
* வயலின் - குன்னக்குடி
* வீணை - காயத்ரி


* சுதா ரகுநாதன்
* மும்பை ஜெயஸ்ரீ
* உன்னி கிருஷ்ணன்

Monday, May 30, 2011

ஓர் சக்தி அவளே!



ஓம்சக்தி ஓம்சக்தி என்று பாடுவோம்
ஓயாமல் அவள்நாமம் என்றும் ஓதுவோம்
உன்சக்தி என்சக்தி என்றிங் கில்லை
ஓர்சக்தி அவளேயென் றுணர்வோம் உண்மை

சரணடைந்தால் சூலமேந்தி வருவாள் சக்தி
மரணங்கூட அணுகாமல் காப்பாள் சக்தி
பரமென்றே தொழுதுநின்றால் மகிழ்வாள் சக்தி
சிவமோடு சேர்ந்துஅருள் பொழிவாள் சக்தி

சக்திஅவ ளாலேதான் உலகம் இயங்கும் - அவளை
பக்திசெய்ய மறந்தாலே உள்ளம் மயங்கும்
சக்திசக்தி சக்தியென்று சிந்து பாடுவோம் - மாய
சக்திதனை வென்றுஅவளின் பாதம் தேடுவோம்!

--கவிநயா

படத்துக்கு நன்றி: தினமலர்


ஹிந்தோளம் ராகத்தில் வெகு பொருத்தமாக அமைத்து அருமையாக பாடித் தந்த சுப்பு தாத்தாவிற்கு நன்றிகள் பல!

Monday, May 23, 2011

நீ என்றன் அன்னையன்றோ?



கணந்தோறும் உன்னைக் கருத்துடன் பூஜித்தேன்
கருணை கொஞ்சம் வைப்பாய் நீ
மனம் காட்டுகின்ற மாயைகள் நம்பாமல்
உன்னை நம்ப வைப்பாய் நீ

கரடு முரடான என்றன் மனதினைச்
செப்பனிட்டு வைத்தேன் நான்
குறைகள் இருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேணும்
தங்க மனத் தாயே நீ

சிரமம் பாராமல் சிங்கத்தை விடுத்து
என் மனம் குடிபுகுவாய்
காணாத வினைகளும் தானாக ஓடிடுமே
உன் முகம் கண்டதுமே

எத்தனை பிழைகள் நான் செய்தாலென்ன
நான் உன்றன் பிள்ளையன்றோ
மன்னித்து உன்னடி சேர்த்துக் கொள்ள வேணும்
நீ யென்றன் அன்னையன்றோ?

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/arunar/2777658592/

Monday, May 16, 2011

இமைப்பொழுதும் நீங்காதிரு!



இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா திருப்பாய்
இல்லை ஒருதுயரம் எனநீயே உரைப்பாய்
கணப்பொழுதில் மறைகின்ற மின்னல் போலன்றி
எப்பொழுதும் என்னுள்ளே பரிதியாய் ஒளிர்வாய்

சுடுநெருப்பின் வெம்மைபோல் குளிர்நீரின் தண்மைபோல்
இலைஉடுக்கும் பசுமைபோல் வான்நிலவின் வெண்மைபோல்
ஒருநொடியும் அகலாமல் என்னுள்ளே நிறைவாய்
உருகாத பனியாகி உள்ளத்தில் உறைவாய்

உன்னடிகள் உறுதியுடன் பற்றும்வரம் தருவாய்
உன்னையன்றி ஒருநினைவும் அற்றிடவே அருள்வாய்
மயக்கம்தரும் மாயைஎனும் மருள்நீக்க வருவாய்
இயக்கத்தின் மூலமே எம்மைக் காத்தருள்வாய்


--கவிநயா

Tuesday, May 10, 2011

சஞ்சலம் அகற்றிடுவாய்!


சஞ்சல மகற்றிடுவாய் - அம்மா
அஞ்சலென் றணைத்திடுவாய்
அஞ்சன விழி உமையே - சிவன்
கொஞ்சு கின்ற சிவையே

தஞ்சமென் றுனை அடைந்தேன் - எழில்
அஞ்சுகமே அருள்வாய்
கஞ்சமலர்ப் பதங்கள் - என்றன்
நெஞ்சினிலே பதிப்பாய்

துஞ்சிடும் பொழுதினிலும் - அம்மா
என்னுடனே இருப்பாய்
விஞ்சிடும் அன்புடனே - என்னை
இருகரத் தாலணைப்பாய்


--கவிநயா

சுப்பு தாத்தா அடானா ராகத்தில் பாடுகிறார். மிக்க நன்றி தாத்தா!



படத்துக்கு நன்றி: http://jmdtutor.com/images/wallpaper/god/goddess_durga_wallpapers02.jpg