Wednesday, February 22, 2023

தாயே கதி

 

தாயே கதி

அவள் அருளே நிதி

அவள் பதநிழல் என்றும்

தந்திடும் நிம்மதி

(தாயே)

 

சித்தத்தில் அவள் முகம்

நித்தமும் சுகம் தரும்

பக்கத்தில் அவள் துணை

துக்கங்கள் துரத்திடும்

(தாயே)

 

வந்த வினைகள் ஒழிய

வரும் வினைகள் ஒளிய

சந்ததமும் அவள் பெயரை

சிந்தனை செய்வாய் மனமே

 

இருள் கெடுப்பாள்

அவள் ஒளி கொடுப்பாள்

மருள் கெடுத்தே நமக்கு

அருள் கொடுப்பாள்

(தாயே)


--கவிநயா


Tuesday, October 25, 2022

அன்புக்கு அளவேது?


அம்மா உன் அன்புக்கு அளவேது?

உன் பத நிழலுக்கு இணையேது?

(அம்மா)

 

கமல முகம் கண்டு கனிந்திடும் என்னுள்ளம்

கடலெனும் கருணையிலே கரைந்திடும் என் நெஞ்சம்

(அம்மா)

 

அம்மா என்றழைத்ததும் ஓடி வந்தருள்வாய்

அஞ்சேல் அஞ்சேல் என்று அபயம் தந்திடுவாய்

வழியும் கண்ணீரினை வாஞ்சையில் துடைப்பாய்

கழியட்டும் வினை என்று கனிவுடன் அணைப்பாய்

(அம்மா)


--கவிநயா


Monday, October 3, 2022

துர்க்கை அம்மா

 இனிய நவராத்திரி வாழ்த்துகள்!

துர்க்கை அம்மா துர்க்கை அம்மா

துர்க்கை அம்மா துர்க்கை அம்மா

(துர்க்கை அம்மா)

 

துக்கமெல்லாம் தீர்த்து விடும் துர்க்கை அம்மா

பக்கம் வந்து காத்து நிற்கும் துர்க்கை அம்மா

(துர்க்கை அம்மா)

 

சூலம் கொண்டு வந்திடுவாள் துர்க்கை அம்மா

சுற்றும் வினை விரட்டிடுவாள் துர்க்கை அம்மா

நீல நிறக் காளியவள் துர்க்கை அம்மா

நின்று பகை வென்றிடுவாள் துர்க்கை அம்மா

(துர்க்கை அம்மா)

 

சீறுகின்ற சிம்மத்திலே துர்க்கை அம்மா, பெண்

சிங்கமென வந்திடுவாள் துர்க்கை அம்மா

ஆறுதலைத் தந்திடுவாள் துர்க்கை அம்மா

அரவணைத்துக் காத்திடுவாள் துர்க்கை அம்மா

பேறு பெற்றேன் உன்னைப் பாட துர்க்கை அம்மா

வேறு என்ன வேண்டுமடி துர்க்கை அம்மா

(துர்க்கை அம்மா)


--கவிநயா



Sunday, September 18, 2022

வர வேண்டும் தாயே

 

வர வேண்டும் வர வேண்டும் தாயே, அருள்

தர வேண்டும் தர வேண்டும் நீயே

(வர)

வரம் வேண்டும் வரம் வேண்டும் தாயே

நிலையாக என்மனதில் நின்றிடவே நீயே

(வர)

 

ஒரு பார்வை பார்க்க வேண்டும்

ஒரு வார்த்தை பேச வேண்டும்

கண்ணே என்றணைக்க வேண்டும்

கனிவாய்ப் புன்னகைக்க வேண்டும்

வாழ்வெல்லாம் உன்றன் நிழலில்

வாழ்ந்திட நீ அருளிட வேண்டும்

(வர)

 

--கவிநயா


Tuesday, July 5, 2022

அன்பைத் தருவாய்

அன்பைத் தருவாய் அம்மா

அன்பைத் தருவாய், உன்றன்

திருப்பாத கமலங்களில்

அன்பைத் தருவாய்

(அன்பை)

 

உன் நினைவில் வாழ்ந்திடவே

அன்பைத் தருவாய்

உலகப் பற்றை அறுத்து உன்மேல்

அன்பைத் தருவாய்

(அன்பை)

 

செவ்வந்தி வானம் போல தேவி உன் நிறம்

செந்தூரம் துலங்கிடவே ஒளிரும் உன் முகம்

செக்கச் சிவந்த பட்டாடை உன்றன் இடையினில்

செங்கமலப் பதம் பதிப்பாய் என்றன் நெஞ்சினில்

(அன்பை)

 

--கவிநயா