Monday, July 24, 2017

ஆடி மாசக் காத்து



கீதாம்மா வின் சிறப்பு கிராமிய விருந்து... மிக்க நன்றி கீதாம்மா!

ஆடி மாசக் காத்து போல ஆடுதம்மா மனசு, அதில்

அசையாத தீபம் போல எரியுந்தன் நெனைப்பு

(ஆடி)



ஆடியிலே கூழு காச்சி ஆத்தா ஒனக்குத் தரணும்

ஆசையாக அதக் குடிக்க வெரசா நீ வரணும்

பச்சரிசி அச்சு வெல்லம் பொங்க வெச்சுத் தரணும்

மச்ச விழி மாரியாத்தா இச்சை தீர்க்க வரணும்

(ஆடி)



ஓடி ஓடி அலஞ்சு தினம் பட்டதெல்லாம் போதும்

பாடிப் பாடிக் காலடியில் பணியவேணும் நானும்

நெனப்பெல்லாம் ஒன்னச் சுத்தி இருந்தாலே போதும்

கணக்காக இன்பமெல்லாம் தானா வந்து சேரும்

(ஆடி)


--கவிநயா

Monday, July 17, 2017

மதுரை மல்லிகை




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

மதுரை மல்லிகை போலச் சிரிக்கும் மங்கல மீனாக்ஷி

இதய மடுவில் தாமரை உன் எழில் மிகு காட்சி

           

            விழி மூடிடும் போதினிலும்

                        தோன்றிடும் உன் முகமே

            பாடிடும் நாவினிலே தினம்

                        ஆடிடும் உன் பெயரே

(மதுரை)



தோளினிலே கிளியை அவள் தாங்கியிருப்பாள்

தாளில் விழுந்தோருக் கவள் தோள்கள் கொடுப்பாள்

           

            பச்சை நிற மேனி, அவள்

                        பாண்டி நாட்டு ராணி

            இச்சையுடன் தொழுபவரின்

                        துன்பந் தீர்க்கும் தோணி

(மதுரை)



சுந்தரனின் சுந்தரத்தில் சொக்கி விட்டவளாம்

மந்திரம்போல் அவன் சிரிப்பில் மயங்கி விட்டவளாம்



            போர் முனையில் சென்று

                        தனை மறந்து நின்று

            ஆயுதத்தைத் தவற விட்டு

                        அவன் அழகில் கிறங்கிச் சற்று

(மதுரை)


--கவிநயா

Monday, July 10, 2017

ஆயிரம் நாமங்கள் கொண்டவள்!





சுப்பு தாத்தா வின் சிறப்பு விருந்து... மிக்க நன்றி தாத்தா!


கீதாம்மா வின் இனிய குரலிலும்... மிக்க நன்றி கீதாம்மா!

ஆயிரமாயிரம் நாமங்கள் கொண்டாய் ஆதி பராசக்தி

பாயிரமாயிரம் பாடிட அருள்வாய் அன்பு மகாசக்தி

(ஆயிரம்)



அன்னை உன்னைத் தேடி வரும் உன் பிள்ளைகள் பலகோடி

உன்னருள் தேடி வந்தவருள்ளே நானொரு கடைக்கோடி

(ஆயிரம்)



எண்ணத்தில் உன்னைப் பதித்து விட்டாலே எதுவும் நலமாகும்

கிண்ணத்தில் ஊறும் மதுவைப் போலே வாழ்வும் சுகமாகும்

பண்ணில் உன்னைப் பாடி வந்தாலே தீரும் பெருந்துன்பம்

கண்ணில் வைத்து நெஞ்சில் துதித்தால் கிடைப்பது பேரின்பம்

(ஆயிரம்)


--கவிநயா 

Monday, July 3, 2017

மறவாமல் காப்பாய்!



கீதாம்மா தன் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அலை பாயும் என் மனதில்
விளையாடும் அம்பிகையே
சிலையாக நில்லாமல்
துணையாய்நீ அருள் புரியேன்
(அலை பாயும்)

சிறை போலும் இப்பிறவி
போதும் போதுமென
சிந்தையிலே உன்னை வைத்தேன்
சிறை மீட்டு வாழ்வு தர
(அலை பாயும்)

மலை போல உன்னை நம்பி
உன் பாதம் பணிந்தேனை
மறவாமல் காப்பாயே
மறை போற்றும் திருத்தாயே!
(அலை பாயும்)


--கவிநயா