Monday, November 27, 2017

இன்பம் அவள் பாதம்



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

உலகெல்லாம் அளந்தோனின் உடன்பிறந்தவளே
உத்தமியே உமையவளே சத்தியத்தின் வடிவே
(உலகெல்லாம்)

சின்னஞ்சிறு உயிருக்கும் உணவளிப்பவளே
பென்னம் பெரும் கடலெனவே கருணை செய்பவளே
(உலகெல்லாம்)

அம்மா வென்ற ழைத்து விட்டால் அள்ளி அணைத்துக் கொள்வாள்
கன்னத்திலே ஓடும் நீரை முந்தானையால் துடைத்திடுவாள்
துன்பம் இனி இல்லையென்னும் நம்பிக்கையை அவள் அளிப்பாள்
இன்பம் அவள் பாதம் என்று அன்பால் உணர்த்திடுவாள்
(உல்கெல்லாம்)


--கவிநயா


Monday, November 20, 2017

ஊஞ்சலாடி வருகின்றாள்!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

ஊஞ்சலாடி வருகின்றாள் உலக நாயகி, நம்மை

வாஞ்சையோடு காக்கும் எங்கள் தையல் நாயகி

பொன்னூஞ்சல் ஆடி வரும் புவன நாயகி, நம்மை

பாசமுடன் காக்கும் எங்கள் நேச நாயகி

(ஊஞ்சலாடி வருகின்றாள்)



ஆடி வரும் அவள் அழகில் உலகம் மயங்கும், அவளை

பாடிப் பாடிக் திளைப்பதிலே உள்ளம் மகிழும்

கூடுகின்ற பக்தர் கூட்டம் கொண்டாடி வணங்கும், பல

கோடிக் கண்ணும் போதாது போல் அவள் எழில் விளங்கும்

(ஊஞ்சலாடி வருகின்றாள்)





மாடு மனை வீடு சுற்றம் எல்லாம் தருவாள், அவளை

நாடி விட்டால் பிறவி இல்லாப் பேறும் தருவாள்

கூவி அம்மா என்றழைத்தால் ஓடி வருவாள், அவளைக்

கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாலோ குழைந்து விடுவாள்

(ஊஞ்சலாடி வருகின்றாள்)


--கவிநயா


Monday, November 13, 2017

சின்னஞ்சிறு பெண் போலே



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

என்னோடு வருவாயே அம்மா, உன்னைப்

பிள்ளையெனப் பாராட்டி, செல்லமெனச் சீராட்ட

(என்னோடு)



சிற்றாடை கட்டிக் கொண்டு சின்னஞ்சிறு பெண் போலே

முத்தாரம் மார்பசைய முல்லை மலர்ப் பூப் போலே

காலிரண்டில் கொலுசொலிக்க துள்ளும் புள்ளி மான் போலே

பால் நிலவைப் பழிக்கின்ற வட்ட எழில் வதனமுடன்

(என்னோடு)



ஒரு முறை உனை நினைந்தால் உலகெல்லாம் ஒளி மயமே

ஒரு கணம் உனை மறந்தால் உள்ளம் மூழ்கும் இருளிடமே

என்னருகில் நீ இருந்தால் இன்ப துன்பம் சரிசமமே

உன்னருகில் நான் இருந்தால் இப்பிறவி பயன் பெறுமே

(என்னோடு)


--கவிநயா


Monday, November 6, 2017

அழகு மயில்


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அழகு மயில் போல அன்னை ஆடி வருவாள், நல்ல

பழகு தமிழ் பாடல் கேட்டு ஓடி வருவாள்

(அழகு)



குழந்தை மனம் கொண்டு விட்டால் கொஞ்சி வருவாள், செல்லக்

குழந்தை யெனச் சேர்த்தணைக்கத் தேடி வருவாள்

(அழகு)



ஆதிசிவன் பாதியவள் அசைந்து வருவாள்

ஆதிசேஷன் குடை பிடிக்க இசைந்து வருவாள்

துன்பமெல்லாம் தீர்த்து வைக்கத் தேவி வருவாள், உண்மை

இன்பமெல்லாம் தானெனவே உணரத் தருவாள்

(அழகு)


--கவிநயா