Tuesday, May 28, 2019

அன்னை சக்தி!


துயரமெல்லாம் மாற்றிடுவாய் துர்கா பரமேஸ்வரி
துன்பமெல்லாம் ஓட்டிடுவாய் தாயே புவனேஸ்வரி
(துயரமெல்லாம்)

அண்டமெல்லாம் பூத்தவளே அன்னையெனக் காப்பவளே
அண்டி வரும் அடியவர்க்கு அபயந்தரும் உமையவளே
(துயரமெல்லாம்)

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற ஆதி சக்தியே, கருத்த
கண்டனுள்ளம் கவர்ந்திழுக்கும் காந்த சக்தியே
பண்ணில் உந்தன் புகழைப் பாட மகிழும் சக்தியே, எம்மைக்
கண்ணிமை போல் காத்தருளும் அன்பு சக்தியே
(துயரமெல்லாம்)


--கவிநயா

Tuesday, May 21, 2019

உனக்காக...



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கீதம் அம்மா உனக்காக
பன்னிரு தோளன் பழனியின் பாலன் தாயே உனக்காக
(ஒவ்வொரு)

துயரங்கள் பலவும் தொடர்ந்திடும் போதும்
வினையெனும் கடலினில் மூழ்கிடும் போதும்
மனமது மயக்கத்தில் ஆழ்ந்திடும் போதும்
பாடல்கள் உனக்காக, தலை பணிதலும் உனக்காக
(ஒவ்வொரு)

கண்ணால் உன்னைக் காணும் போதும்
பண்ணால் உன்னைப் பாடும் போதும்
நீயே சரணென உணரும் போதும்
பாடல்கள் உனக்காக, தலை பணிதலும் உனக்காக
(ஒவ்வொரு)


--கவிநயா

Tuesday, May 14, 2019

சரணம்!



ஆதியே சரணம்! அந்தமே சரணம்!
பாதியே சரணம்! பதம் சரணம்!

நீதியே சரணம்! நிர்மலே சரணம்!
நிர்குணே சரணம்! நிதம் சரணம்!

முன்னையே சரணம்! பின்னையே சரணம்!
அன்னையே சரணம்! அடி சரணம்!

கன்னியே சரணம்! கமலையே சரணம்!
காளியே சரணம்! கால் சரணம்!

வீரமே சரணம்! வித்தையே சரணம்!
விமலையே சரணம்! மா சரணம்!

ஆரமே சரணம்! அழகியே சரணம்!
அற்புதே சரணம்! அடி சரணம்!

பூரணே சரணம்! புண்யையே சரணம்!
காரணே சரணம்! கால் சரணம்!

சாரமே சரணம்! சத்யமே சரணம்!
சக்தியே சரணம்! சதம் சரணம்!



--கவிநயா


Monday, May 6, 2019

கடைக்கண் பார்வை



கடைக்கண் பார்வை அது போதுமே, நாம்
கடைத்தேற அது ஒன்றே வழி கோலுமே
(கடைக்கண்)

படமெடுக்கும் அரவை
உடம்பிலணிந்த அரன்
இடமிருக்கும் உமையே
சரணடைந்தோம் உனையே
(கடைக்கண்)

படைத்தவன் பிரமன் எனினும்
அடைக்கலம் நீயன்றோ?
எடுப்பவன் எமன் எனினும்
கொடுப்பவள் நீயன்றோ?

ஒருகணம் எனைப் பார்ப்பாய்
பழவினை களைத் தீர்ப்பாய்
உனதருளை வார்ப்பாய்
எனை உனதடி சேர்ப்பாய்
(கடைக்கண்)


--கவிநயா