Monday, December 27, 2010

பார்வதி பஞ்சகம்


காரமர் மேனியன் கற்பக கணபதி
கனிவுடன் காருமய்யா
வானவர் வினைகளை விரட்டவே உதித்திட்ட
வேலவா வாருமய்யா
காமனைக் கண்ணினால் எரித்திட்ட பரமனே
கண்கொண்டு பாருமய்யா
அறியாத பிள்ளைக்கு வழிகாட்டும் சத்குரு
உன்னருள் தாருமய்யா!

அகிலமெல்லாம் காக்கும் அகிலாண்ட நாயகியை
அனுதினமும் பாட வேண்டும்
அகத்திலே பொங்கிவரும் அளவிலா அன்பதனை
அவள்பாதம் சேர்க்க வேண்டும்
இகத்திலும் பரத்திலும் அவள்நாமம் ஒன்றேதான்
இன்பமாய் இருக்க வேண்டும்
சுகத்திலும் குறையாத சோகத்திலும் அவளை
சிக்கெனப் பிடிக்க வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

சிந்தையில் அவள்நினைவே கல்பதித்த சிற்பம்போல்
கலையாமல் இருக்க வேண்டும்
மந்தையென வருகின்ற எண்ணங் களைவிரட்டி
மங்கைதனை துதிக்க வேண்டும்
கந்தையென துயரங்கள் பிழிகின்ற போதினிலும்
கலங்கா திருக்க வேண்டும்
விந்தையெனும் இவ்வுலகில் உழலாமல் உறுதியுடன்
விரைந்தவளைப் பற்ற வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

காணும்பொருள் யாவிலும் கன்னிஉன் திருமுகமே
கணந்தோறும் காண வேண்டும்
வானம்நிலம் மாந்தரும் வஞ்சிஉன் இன்னருளால்
வளம்பெற்று வாழ வேண்டும்
கோள்வென்று குறைதீர்க்க நாளெல்லாம் நலமாக
நாயகியே அருள வேண்டும்
வீணென்று இப்பிறவி ஆகாமல் எப்போதும்
உன்நினைவாய் இருக்க வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

நின்றாலும் நடந்தாலும் கிடந்தாலும் உன்நினைவே
என்துணையாய் ஆக வேண்டும்
சென்றாலும் இருந்தாலும் வென்றாலும் தோற்றாலும்
என்றும்உடன் இருக்க வேண்டும்
ஒன்றான ஓர்பொருளாய் என்நெஞ்சில் நீயேதான்
பொன்றா திருக்க வேண்டும்
குன்றாத ஒளியாக குறையாத நிதியாக
இறைவிநீ அருள வேண்டும்
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!

காலனைக் கால்கொண்டு கடிந்தவர்க்கு ஒருபாகம்
தந்தவளே போற்றி போற்றி!
வேலனவன் வென்றிடவே வேல்தந்து வரமளித்த
வேல்விழியாள் அடிகள் போற்றி!
மலையரசன் மகளாக வந்துதித்த மாமணியின்
மலர்ப்பதங்கள் போற்றி போற்றி!
நிலையான அன்பதனை உன்மீது பொழியும்வரம்
தரவேண்டும் தேவி போற்றி!
பதினான்கு புவனங்களும் படைத்துரட் சிக்கின்ற
பாவைபதம் போற்றி போற்றி!
பார்புகழ பனிமலையில் பரமனுடன் வீற்றிருக்கும்
பார்வதி தேவி போற்றி!


--கவிநயா

அனைவருக்கும் மனம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!

Monday, December 20, 2010

நீயே என் நினைவுக்குள் நிலையானவள்!


நீயே என் நினைவுக்குள் நிலையானவள்
தாயே என் மனதுக்கு சுகமானவள்
மாயே என் மயக்கங்கள் களைகின்றவள்
சேயென்று எனை அள்ளி அணைக்கின்றவள்

விழியினில் விழுந் தென்னை இழுக்கின்றவள் - என்
மொழியினில் நுழைந் திசையாய் ஒலிக்கின்றவள்
ஒளிகளுக் கெலாம் ஒளியாய் ஜொலிக்கின்றவள் - அண்ட
வெளியெங்கும் தண் ணருளால் நிறைக்கின்றவள்

மலரினில் நிற மாகி சிரிக்கின்றவள் - அதன்
மகரந்தம் தா னாகி மணக்கின்றவள்
சொல்லோடு பொரு ளாகி சுவைக்கின்றவள் - அவள்
கன்றோடு பசு வாகி களிக்கின்றவள்

பல்லுயி ராய் மண்ணில் பிறக்கின்றவள் - அவள்
இன்னுயி ராய் என்னில் இருக்கின்றவள்
தன்னுயி ராய் நம்மை காக்கின்றவள் - அவள்
பொன்னடி பணி வோரை ஏற்கின்றவள்!

--கவிநயா

Monday, December 13, 2010

உன் அன்பொன்றே வேண்டும்!



மனிதரும் வலிதரும் யாதொன்றும் வேண்டாம்
அம்மாஉன் அன்பொன்றே வேண்டும்
களிதரும் கன்னியே என்னுள்ளே நீயே
என்றென்றும் ஒளிவீச வேண்டும்

பனிதரும் பிறைசூடன் இடப்பாகம் கொண்டாய்
அவனுக்குன் வலப்பாகம் தந்தாய்
ஆதியே பரமனில் பாதியாய் ஆனாய்
சோதியென ஒன்றாகி நின்றாய்

நஞ்சுண்ட சிவனையே கருநீல கண்டனாய்
ஆக்கியே காத்திட்டாய் அம்மா
வினையென்னும் உரவினை உண்டுண்டு வீழ்ந்தேன்
எனையும்நீ காக்கவே வேண்டும்

என்இதயக் கோவிலில் நீஇருக்க வேண்டும்
உன்னைத்தினம் பூஜிக்க வேண்டும்
பண்பாடி புகழ்பாடி அருள்நாடி அதுவே
வாழ்வெனவே வாழ்ந்திருக்க வேண்டும்!


--கவிநயா

Monday, December 6, 2010

உன்னையன்றி எவருமில்லை...


உன்னையன்றி எவருமில்லை
உள்ளந்தன்னில் திறனுமில்லை
முள்ளிலிட்ட சேலை போலே
நானும் ஆகினேன் – அம்மா
உள்ளிருக்கும் உன்னைத் தேடி
கானம் பாடினேன்

உன்னைப் பாடும் பாடல் எல்லாம்
காற்றில் கரைந்து போகுதோ?
இல்லை யுன்னைத் தேடி வந்துன்
பாத மலரில் சேருதோ?

என்றன் கண்ணின் ஈரம் என்று
உன்னை வந்து நனைக்குமோ?
உன்றன் அன்பின் ஈரம் என்று
என்னை வந்து அணைக்குமோ?

ஏதும் அறி யாத பிள்ளை
உன்மடி யைத் தேடுது
பாதம் பற்றிக் கொண்டு நீயே
சொந்தம் என்றுபாடுது!


--கவிநயா