Monday, December 29, 2014

என் வேலை!

அனைவருக்கும் மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்னையின் அருள் என்றென்றும் நிறைந்திருக்கட்டும்!

சுப்பு தாத்தா பைரவி / முகாரியில் உளமுருகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



என் குரல் உன் காதில் விழுகிறதோ, இல்லை
காற்றினில் தடம் மாறி அலைகிறதோ?
(என் குரல்)

தாயுன்னை அழைக்கின்றேன் தமிழாலே, கொஞ்சம்
சேயென்னைப் பாராயோ அருளாலே?
(என் குரல்)

காலைச் சுற்றி வருகின்றேன் காவாயோ? கடும்
பாலைதனில் உனதருளைப் பொழியாயோ?
வேலையென்று வேறில்லை என் தாயே, உன்னருள்
வேண்டுவதே என்வேலை அறியாயோ?
(என் குரல்)

 --கவிநயா

Monday, December 22, 2014

பாதம் போதும்!

சுப்பு தாத்தா சாவேரியில் சரளமாகப் பாடித் தந்தது இங்கே.... மிக்க நன்றி தாத்தா!


அம்மா உன் பாதம் போதும்
அதுவே என் வேதமாகும்
பாதத் துளி மேலே பட்டால்
பாவமெல்லாம் தீய்ந்து போகும்
(அம்மா)

பதமலரை என் தலையில் சூடிக் கொள்ளணும், அந்த
மலர் பரப்பும் மணத்தில் எந்தன் மனதை இழக்கணும்
நாளும் பொழுதும் உன்னை நினைத்து நானும் களிக்கணும், உன்
நாமந் தன்னைச் சொல்லிச் சொல்லி காலம் கழிக்கணும்
(அம்மா)

பதமொன்றே சதமென்று பற்றிக் கொள்ளணும், உன்னை
விதவிதமாய் நிதநிதமும் போற்றி மகிழணும்
விதிசெய்யும் சதியெல்லாம் மறந்து வாழணும்
என் மதியில் உன் மதிமுகமே நிறைந்து ஒளிரணும்
(அம்மா)


--கவிநயா

Monday, December 15, 2014

உன்னை நாடி...


வஸந்தா ராகத்தில் சுப்பு தாத்தா அருமையாகப் பாடித் தந்தது இங்கே...மிக்க நன்றி தாத்தா!



என்னுள்ளம் உன்னை நாடி ஓடுதே

பூவைத் தேடும் வண்டைப் போலப் பாடுதே

(என்னுள்ளம்)



வானில் அலையும் மேகம் போல அலையுதே

தானும் கொள்ள நீரைக் கொஞ்சம் தேடுதே

(என்னுள்ளம்)



பூவை உந்தன் பாதப் பூவை நாடுதே

சேவை உனக்குச் செய்ய வேண்டி ஏங்குதே

நாவில் உந்தன் நாமம் மட்டும் நவிலுதே

பாவில் உன்னைப் பாடிப் பாடி மகிழுதே

(என்னுள்ளம்)


--கவிநயா

Monday, December 8, 2014

அருள்வாய் அம்மா!


சுப்பு தாத்தா கல்யாணியில் கலக்கலாகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



எண்ணிப் பார்த்தும் எண்ணித் தீரா

  செல்வம் தந்தாயே!

சொல்லிப் பார்த்தும் சொல்லித் தீரா

  சொந்தம் தந்தாயே!

அள்ளிப் பார்த்தும் அள்ளித் தீரா

  இன்பம் தந்தாயே!

செல்வம், சொந்தம், இன்பம் எல்லாம்

  நீயாய் வந்தாயே!



உலகம் எல்லாம் ஒன்றாய்ப் பெற்ற

  அம்மா நீயம்மா!

உன்னைக் கண்ணாய்ப் போற்றிக் காக்கும்

  பிள்ளை நானம்மா!

நாளும் உன்னைத் தொழவும் அழவும்

  அருள்செய் வாயம்மா!

அதுவே போதும், காலன் வரினும்

  அஞ்சேன் நானம்மா!



பச்சைக் கிளிபோல் படித்துச் சொன்னேன்

  உந்தன் பெயரம்மா!

இச்சை எனக்காய் ஏதும் வேண்டாம்,

  காப்பாய் நீயம்மா!

பச்சைப் பிள்ளை சொல்லும் பாடல்

  கேட்பாயோ அம்மா?

உன் இச்சைப்படியே நானும் ஆக

  அருள்வாயே அம்மா!


--கவிநயா

Monday, December 1, 2014

மரகத மீனாட்சி!


சுப்பு தாத்தா மென்மையான லாலி மெட்டில் இனிமையாகப்  பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



மாமதுரை ஆளும் மரகத மீனாட்சி!
மனதினில் வந்தமர்ந்து தந்திடு திருக்காட்சி!
(மாமதுரை)

கொடியென ஒசிந்து நிற்கும் கோலஎழில் வடிவே!
விழி யசைவில் உலகைக் காத்திடும் அருட்கடலே!
(மாமதுரை)

போருக்கு வந்தவனின் ஆரமுதாகி விட்டாய்;
ஒருதிருப் பார்வையினால் அவனுள்ளம் கொண்டு விட்டாய்!
நேசத்துக்குரியவளே, நெஞ்சத்தில் அமர்ந்து விட்டாய்;
நிதமுன்னைத் துதிப்பவர்க்கு நித்திலமே அருள்புரிவாய்!
(மாமதுரை)

--கவிநயா