Monday, March 31, 2014

அன்னையின் அழகுக்கு நிகரேது?


சுப்பு தாத்தா மணிரங் ராகத்தில் மணி மணியாய்ப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



அன்னையின் அழகுக்கு நிகரேது? அவள்
கருணையின் பொழிவிற்கு அளவேது?
(அன்னையின்)

இடையினில் மேகலை கிணுகிணுக்க, முகம்
முழுமதி எழிலினை விஞ்சி நிற்க
பாசாங்குசம் கரங்கள் தாங்கி நிற்க, கரும்பு
வில்லுடன் மலரம்பும் ஏந்தி நிற்க, என்
(அன்னையின்)

மாயா விளையாட்டில் மகிழுபவள், அவளே
தாயாய் உடனிருந்து அருளுபவள்
மேயா மனதினிலே உறையுமவள், ஆங்கே
தேயா நிலவாக ஒளிருபவள், என்
(அன்னையின்)


--கவிநயா

Monday, March 24, 2014

செல்லும் இடமறியேன்...


சுப்பு தாத்தா மதுவந்தியில் மனமுருகப் பாடியிருப்பதை நீங்களும் கேட்டு உருகுங்கள்... மிக்க நன்றி தாத்தா!


செல்லும் இடமறியேன்
சேற்றின் குணம் நானறியேன்
அன்னை உனை அடைய
பேதை ஏதும் வழியறியேன்
(செல்லும்)

கண்ணிருந்தும் பார்வையில்லா
குருட்டுப் பிள்ளை நானம்மா
கண்ணொளியாய் நீயிருந்து
வழிகாட்ட வா அம்மா

வாயிருந்தும் வார்த்தையில்லா
ஊமைப் பிள்ளை நானம்மா
வாய்மொழியாய் நீயிருந்து
வழிகாட்ட வா அம்மா
(செல்லும்)

கதறும் கன்றின் குரல்
கேட்கலையோ, கேட்கலையோ?
பதறும் பிள்ளை குரல்
கேட்டும் வர மனமில்லையோ?

சேற்றில் புதையும் முன்னே
சேர்த்தெடுக்க வா அம்மா
காற்றெனக் கடுகி வந்து
கனிந்து என்னைக் கா அம்மா!
(செல்லும்)


--கவிநயா

Monday, March 17, 2014

எந்நிறம்? எக்குணம்? எவ்விடம்? எவ்வடிவம்?


பச்சை நிறமாய் இருப்பாள்
நீல நிறமாய்ச் சிரிப்பாள்
அந்தி வான நிறத்தினிலே
அங்கம் மின்ன ஜொலித்திருப்பாள்!

தாமரை மலரிருப்பாள்
அலைகடலில் முகிழ்ப்பாள்
மலைமகளாய்ப் பிறப்பாள்
பாலையென வடிவெடுப்பாள்!

வேத வடிவாயிருப்பாள்
நாத வடிவாயிருப்பாள்
மாய வடிவாயிருப்பாள்
ஞான வடிவாயிருப்பாள்!

இருள்நிறக் காளியவள்
அருள்பொழி மாரியவள்
அசுரரை அழிக்கும் அவள்
அன்பு மிகு அன்னை யவள்!


--கவிநயா

Monday, March 10, 2014

மங்கல மீனாட்சி



நீலாம்பரியில் சுப்பு தாத்தா உருகியிருப்பதை நீங்களும் கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!



சுப்பு தாத்தா ஷண்முகப்ரியா ராகத்தில் அனுபவித்துப் பாடியிருப்பதையும் கேட்டு மகிழுங்கள்!
 
 
மனமெல்லாம் மலர்ந்தவளே மங்கல மீனாட்சி
நினைவெல்லாம் நிறைந்தவளே தந்திடு அருட்காட்சி!
(மனமெல்லாம்)

சொக்கனின் மனங்கவர்ந்த சுந்தரியே சௌந்தரியே
மக்கள்தமைக் காக்கவென்றே மதுரை வந்த மாமணியே!
(மனமெல்லாம்)

கதம்ப வனத்தினிலே குடியிருக்கும் பூங்குயிலே
என்மன வனத்தினிலும் வாழ்ந்திருக்க வாமயிலே
பச்சைப்பசுங் கிளியிடத்தில் கொஞ்சிப் பேசும் பைங்கிளியே
இச்சை கொண்டேன், என்னிடமும் கொஞ்சம் பேச வாஎழிலே!
(மனமெல்லாம்)


--கவிநயா

Monday, March 3, 2014

அன்னைக்கொரு அந்தாதி - 5




காப்பு

உன்னை, உறுவினை தன்னைக் களைந்திடும் ஐங்கரனை
கன்னல் மொழிபகர் வள்ளிக் குறமகள் சண்முகனை
மன்னும் இறையொளி தன்னில் மிளிர்ந்திடும் சத்குருவை
முன்னே அடிபணிந் தன்னை மலரடி போற்றுவனே!


நூல்


உன்னும் அடியவர்க் கென்றும் அருளிடும் உத்தமியே
மன்னும் மறைபுகழ் மங்கை எனத்திகழ் மாதவியே
இன்னல் பலப்பல என்னைத் தொடரினும் ஈஸ்வரியே
உன்னை அனுதினம் உள்ளம் உருகிட ஏத்துவனே! (1)

ஏத்தும் உளந்தனில் பூத்துப் பொலிந்திடும் ஏந்திழையே
பூத்திவ் வுலகினைக் காத்துக் கரந்திடும் பூவிழியே
கூத்தன் நடமிடப் பார்த்துக் களித்திடும் பைங்கிளியே
சாத்தும் நறுமலர் ஏற்றுன் அருள்கொடு சங்கரியே! (2)

சங்கில் சுதியுடன் ஓமென் றொலித்திடும் சங்கவியே
அங்கம் பரனிடம் பங்காய் அளித்திட்ட அம்பிகையே
சிங்கந் தனிலொரு வேங்கை எனவரும் சூலினியே
மங்கா விளக்கென எங்கும் விளங்கிடும் மாலினியே! (3)

மார்பில் மணம்மிகும் மாலை துலங்கிடும் மங்கலையே
போர்வில் எனப்புரு வங்கள் விளங்கிடும் பூங்கொடியே
தார்கொள் மலர்களைச் சூழ்வண் டெனவிழி கொண்டவளே
பார்வந் தடிதொழத் தான்வந் தருளிடும் பைங்கிளியே! (4)

பையப் பதம்பணிந் துன்றன் பெயரினைப் பார்வதியே
மையல் தொலைந்திடத் துய்ய உளமுடன் மந்திரமாய்த்
தையல் அடிநிழல் தங்கும் தவப்பயன் வேண்டுமென
வையம் தொழுதிடும் பொய்யில் மறைவழி வாழ்த்துவனே! (5)

வாழ்த்தும் அடியவர் போற்றிப் பணிந்திடும் வான்மதியே
வீழ்த்தும் வினையினை ஓட்டிப் புகல்கொடு வைஷ்ணவியே
சூழ்த்த நறுமலர் சாற்றிப் பதமலர் சென்னியினால்
தாழ்த்திப் பணிந்துனை வாழ்த்தும் பணிகொடு அம்பிகையே! (6)

அம்மை யுனையுளம் ஒன்றித் தொழுதிட அத்தனவன்
செம்மை நிறமுடன் உன்றன் வலப்புறம் சேர்ந்தொளிர
எம்மை வருத்திடும் வெம்மை மிகுதுயர் போக்கிடவே
இம்மை இடர்கெட வந்துன் அருள்தர வேண்டுமம்மா! (7)

வேண்டிக் கொடுவினை தோண்டித் துவண்டிடும் நாளிதிலே
ஆண்டிற் பலகழிந் தேகிக் கரைந்திடும் போழ்தினிலே
மாண்டிப் புவியிதை நீங்கும் பொழுதினில் நீவரவே
யாண்டும் உனதருள் வேண்டித் திருவடி ஏத்துவனே! (8)

ஏற்றித் தொழுதிடச் சேற்றில் மலரெனப் பூப்பவளே
போற்றிப் பணிந்திட வாட்டும் கொடுவினை தீய்ப்பவளே
ஆற்றிக் கடுந்துயர் மாற்றிப் பெருஞ்சுகம் தந்தவளே
காற்றில் இசையெனப் பாட்டில் பொருளென வந்தவளே! (9)

வந்து புதுமலர் தந்து பணிந்துனைப் போற்றிடவும்
அந்தி நிறத்தவன் எந்தை யுடனுனை ஏற்றிடவும்
சிந்துக் கவியினில் சிந்தை மகிழ்ந்திட வாழ்த்திடவும்
வந்தித் தனுதினம் முந்திப் பணிவது(ம்) உன்பதமே! (10)




நூற்பயன்


அன்னை சிவைதனை வண்ணத் திருப்பதம் கொண்டவளை
பின்னைப் பிறவியை முன்னே அறுத்திடும் முன்னவளைச்
சின்னஞ் சிறுமல ரன்ன குறுநகை செய்பவளை
உன்னித் தொழுதிட மின்னல் எனத்துயர் நீங்கிடுமே!





--கவிநயா

(நிறைவுற்றது)