Monday, December 30, 2013

புத்தாண்டு வேண்டுதல்!


சுப்பு தாத்தாவின் குரலிலும் இசையிலும் இந்த வேண்டுதலைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


நாளும் பொழுதும் நவில்வேன் அம்மா உந்தன் திருநாமம் - நவ
கோள்கள் வணங்கும் நாயகியே, பணிந்தேன் பொற்பாதம்
வேதம் பாடும் தாயுன்னை இந்தப் பேதையும் பாடுகிறேன்
பேதம் இன்றிக் காப்பவளே உன் பாதம் பற்றிக் கொண்டேன்!

நிலவாய் நீராய் நெருப்பாய் வளியாய் வெளியாய் இருப்பவளே
தலமாய் வந்தென் உள்ளம் புகுந்து நிலையாய் நிற்பவளே
மாயா மயக்கம் தந்து அதையே தீயாய் எரிப்பவளே
தாயாய் வந்து சேயாம் எம்மைக் காக்கும் தூயவளே!

உண்ணும் உணவும் பருகும் நீரும் உந்தன் அருளாலே
எண்ணும் மனமும் பண்ணும் செயலும் உந்தன் அருளாலே
சொல்லும் பொருளும் சொல்லின் புனைவும் உந்தன் அருளாலே
அல்லும் பகலும் கல்லும் கனியும் உந்தன் அருளாலே!

அம்மா உன்மேல் பண்ணும் கவியும் உந்தன் அருளாலே
எந்தன் மனதில் நீயிருப்பதுவும் உந்தன் அருளாலே
நினைவால் வாக்கால் செயலால் உன்னைத் துதிக்க அருள்வாயே
நிலையில்லாயென் புத்தியில் நீயே நிலைக்க வருவாயே!

உன்னை என்றும் மறவாத, உள்ளம் தந்திட வேண்டும்
ஒவ்வொரு நொடியும் என்நாவில் உன்நாமம் தவழ்ந்திட வேண்டும்
இன்பம் துன்பம் எல்லாமே, ஒன்றாய்க் கொண்டிட வேண்டும்
உண்மை இன்பம் நீயே என்றே இன்றே உணர்ந்திட வேண்டும்!


--கவிநயா

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
அனைவருக்கும் அன்னையின் அருள் பெருகிச் சிறக்கட்டும்!



Wednesday, December 25, 2013

அன்னையவள் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள்!



அன்னையவள் அமர்ந்திருக்கும் அழகைப் பாருங்கள், அவள்
அதரங்களில் மலர்ந்திருக்கும் முறுவல் பாருங்கள்
அவள்புகழை அனுதினமும் பாடிப் பாருங்கள், நம்மை
அண்டிவரும் துன்பம் திரும்பி ஓடும் பாருங்கள்!

அவள் பெயரைச் சொல்லச் சொல்ல இதயம் மலர்ந்திடும், மலர்ந்த
இதயத்திலே இருக்க அவள் மனமும் விழைந்திடும்
மணம் வீசும் நாமம் அவள் மனதை மலர்த்திடும், நல்ல
குணம் தந்து நமது பிறவிப் பிணியைப் போக்கிடும்!

அவள் புகழைப் பாடும் இன்பம் ஒன்று போதுமே, நித்தம்
அவள் நினைவை நாட நாட இன்பம் கூடுமே
மிச்சமெல்லாம் துச்சமென தூர ஓடுமே, செல்லப்
பிச்சியவள் இச்சை போல உயிரும் வாழுமே!


--கவிநயா

பி.கு. முதல் முறையாக செவ்வாய் அன்று இட வேண்டியது தள்ளிப் போய் விட்டது. திங்கள் இரவு அவசர அலுவலக வேலை வந்ததில் மறந்தே விட்டது. மன்னித்துக் கொள் அம்மா :(



Monday, December 16, 2013

மனதில் உன்னை நிரப்பி வைத்தேன்!


சுப்பு தாத்தாவின் குரலில், இசையில்... நீங்களும் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



மனதில் உன்னை நிரப்பி வைத்தேன்,
            நனவில் வருவாயோ?
கனவில் கூடக் கவிதை சொன்னேன்,
            காட்சி தருவாயோ?
நினைவை உனக்காய் நிறுத்தி வைத்தேன்,
            நிஜமாய் வருவாயோ?
இதமாய் வந்தென் இதயம் அமர்ந்து
            இன்பம் தருவாயோ?

பலப்பல காலம் பாடம் படித்தும்
            புத்தியில் ஏறவில்லை
துயரம் எத்தனை அனுபவித்தாலும்
மயக்கம் தீரவில்லை
நல்லது இதுவென்று மதி சொன்னாலும்
            மனமோ கேட்பதில்லை
நாளும் உனையே நினைத்திருந்தாலும்
            ‘நான்’ இன்னும் போகவில்லை

கோபம் தாபம் தீர்த்து விடு, மனக்
            கவலைகள் தம்மைத் துரத்தி விடு
தீபத் தாயே வந் தென்றன்
            இருளை இன்றே விரட்டி விடு
பாதம் பற்றிக் கொண்டு விட்டேன்
            வினைகளை எட்டி உதைத்து விடு
வாதம் ஏதும் செய்யாது
            வந்தெனக் கின்பம் தந்து விடு


--கவிநயா

Monday, December 9, 2013

சிந்தையெல்லாம் நீயே!


உந்தனையே பாடிடவே வரமருள்வாயே
சந்ததமும் உனைப் பணிய அருள்புரிவாயே, அம்மா
(உந்தனையே)

சிந்தையெல்லாம் நீயே, அதில்
விந்தையென்ன தாயே?
சொந்தமெல்லாம் நீயே, என
ஆகி விட்டேன் நானே
(உந்தனையே)

ஆதி அந்தம் இல்லாத அன்புத் தாயடி, சிவன்
பாதி அங்கம் பங்கு கொண்ட மங்கை நீயடி
ஜோதி வடிவான மலை தெய்வம் தானடி, அந்த
ஜோதியுள்ளே ஜோதியான இன்பம் நீயடி
(உந்தனையே)

சேதி சொல்லத் தூது செல்லத் தோழி ஏதடி, எந்தன்
வேதனையைப் பாட்டில் சொன்னேன் கொஞ்சம் கேளடி
வாதம் கீதம் செய்யவில்லை வம்பு ஏனடி, உந்தன்
பாதம் பற்றிக் கொண்டு விட்டேன் திரும்பிப் பாரடி
(உந்தனையே)


--கவிநயா
 

Monday, December 2, 2013

மௌனம் ஏனடி?


சுப்பு தாத்தா தர்பாரி கானடா ராகத்தில் மிக உருக்கமாகப் பாடி அழ வைத்து விட்டார்... மிக்க நன்றி தாத்தா!

 


கவலையெல்லாம் உன்னிடத்தில் தந்து விட்டேன் அம்மா
காப்பாற்றும் பொறுப்பு இனி உன்னிடத்தில் அம்மா
மலையைக் கூட மடுவாக்கும் மாசக்தி அம்மா, என்
கவலையெல்லாம் கடுகாக்கிக் காத்திடுவாய் அம்மா!

கண்ணீரால் பாதங்களைக் கழுவினேனடி, அதைப்
பன்னீராய்க் கொண்டு மனம் குளிருவாயடி
செந்தீயில் வெந்தாலும் உன்னைத்தானடி, குளிர்
சந்தனமாய்க் கொண்டிருக்கேன் என்னைப் பாரடி!

கன்றின் குரல் கேட்காத பசுவும் ஏதடி, நீயும்
எந்தன் குரல் கேட்காமல் இருப்பதேனடி?
அன்பு மிகும் அன்னையென்றால் மௌனம் ஏனடி, என்
அன்பில் ஏதும் குறையுமுண்டோ நீயும் கூறடி!


--கவிநயா

Monday, November 25, 2013

பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 4


பைரவி, முகாரி இரண்டிலுமாக சுப்பு தாத்தா அருமையாகப் பாடித் தந்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


இருளினை நீக்கி ஒளிதரும் வடிவே
சிறுமதி யேனுக்கும் அருளிடும் உருவே
குரு வடிவாகி வந்தருள் திருவே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (13)

கருநிறம் கொண்ட காளியின் வடிவே
மருளினை நீக்கித் தெருள் தரும் உருவே
குரு வடிவாகி வந்தருள் திருவே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (14)

வறுமையை நீக்கி அருளிடும் வடிவே
பெருநிதி* யந்தனைத் தந்திடும் உருவே
குரு வடிவாகி வந்தருள் திருவே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (15)

அம்மா என்றே அழுதேன் அனையே*
அன்பால் என்றும் தொழுதேன் உனையே
கண்ணால் கொஞ்சம் பாராய் எனையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (16)


*அனையே == அன்னையே – கவிச் சுவைக்காக மருவியது.
*பெருநிதியம் == பிறவாப் பெருநிதி


--கவிநயா

(நிறைவுற்றது)

Monday, November 18, 2013

பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 3


சுப்பு தாத்தா அடானாவில் அருமையாகப் பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

 
மலமொரு மூன்றினைக் களைவாய் வனிதே
தலமென உளந்தனில் உறைவாய் இனிதே
கலமெனைக் கருணையால் நிறைப்பாய் கனிந்தே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (9)

காமம் அனைத்தும் களைவாய் கனியே
மோகம் அனைத்தும் முறிப்பாய் முனையே*
வேகம் வந்தெமைக் காப்பாய் இமையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (10)

முகத்தினில் குறுநகை தரித்திடும் எழிலே
அகத்தினில் மலரென மணத்திடும் அழகே
இகபர சுகமெனக் கொண்டேன் உனையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (11)

முதலும் முடிவும் நடுவும் நீயே
நலமும் திறமும் சுகமும் நீயே
உயிரும் உறவும் உடலும் நீயே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (12)




*முனையே == முன்னையே - கவிச் சுவைக்காக மருவியது.


--கவிநயா

(தொடரும்)