Monday, May 28, 2018

கண்மணி உமையே!


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கண்மணி உமையே கருத்தினில் உனையே
இருத்திட அருள்வாய் விருப்புடன் வருவாய்
(கண்மணி)

சிரசினை பதத்தினில் வைத்தேன் தாயே
பரிவுடன் பத மலர் தருவாய் நீயே
(கண்மணி)

உனையெந்தன் துணையென மனதினில் கொண்டேன்
நினைவிலுன் திருமுகம் தினந்தினம் கண்டேன்
பிறைமதி சூடிய இறையுடன் வருவாய்
விடையினில் அவனுடன் அருளள்ளித் தருவாய்
(கண்மணி)


--கவிநயா

Monday, May 21, 2018

துர்கா லக்ஷ்மி சரஸ்வதி




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

துர்கா லக்ஷ்மி சரஸ்வதி
            ஆதி சக்தியின் ரூபங்கள்
வீரம் செல்வம் கல்வி யாவும்
            வழங்கும் அன்னையின் வடிவங்கள்

அம்மா அம்மா என்றே நாம்
            அன்புடன் அழைத்தால் வருவாளே
அல்லல் எல்லாம் களைவாளே
            அருளை அள்ளித் தருவாளே

நான்முகனுடனே நா மகளாய்
            ஸ்ரீஹரியுடனே அலை மகளாய்
சிவனுடன் அவளே மலை மகளாய்
            அருளும் அன்னை அவள்தானே 


--கவிநயா

Monday, May 14, 2018

இன்பமும் துன்பமும் ஒன்றாகும்





கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

இன்பமும் துன்பமும் ஒன்றாகும்
  அன்னை நீ மனம் வைத்தால் 
    அனைத்தும் நன்றாகும்
(இன்பமும்)

உன் நினைவொன்றே என் 
  நினைவாய் ஆன பின்னே
உன் பதமொன்றே என்
  நிழலாய் ஆன பின்னே
உன் விருப்பொன்றே என்
  விருப்பாய் ஆன பின்னே
உன் பணியொன்றே என்
  பணியாய் ஆன பின்னே
(இன்பமும்)

கனவெனும் வாழ்வினிலே
  நிஜமாய் நீ வந்தாய்
கவிதையின் வாக்கினிலே
  கருவாய் நீ வந்தாய்
மனமெனும் காட்டினிலே
  ஒளியாய் நீ வந்தாய்
அன்பெனும் வடிவாகி
  அருளை அள்ளித் தந்தாய்
(இன்பமும்)


--கவிநயா


Monday, May 7, 2018

அவள் பதமே தஞ்சம்


சுப்பு தாத்தா வின் இசையில்... குரலில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலிலும்... மிக்க நன்றி கீதாம்மா!

பரகதிக்குத் துணை பரா சக்தி, அவள்
பாதங்களே நமக்கு மகா சக்தி
(பர)

சிறு இதழ் நெளிவினில் குறு நகை தவழ்ந்திடும்
கருவிழிப் பார்வையில் பழ வினை கரைந்திடும்
நிலவெழில் முகத்தினில் கதிரொளி ஒளிர்ந்திடும்
சிவையவள் அருளினில் வரு வினை அகன்றிடும்
(பர)

அவள் பெயரைச் சொல்ல அகமது சுகம் பெறும்
அவள் புகழைப் பாட மனமது மகிழ்வுறும்
அவள் நினைவே தவம், அவள் பெயரே பலம்
அவள் அருளே இன்பம், அவள் பதமே தஞ்சம்
(பர)


--கவிநயா