Tuesday, April 28, 2020

வா வா!



காற்சதங்கை கிணுகிணுக்க கண்மணியே வாவா
பூம்பாதச் சிலம்பொலிக்க பூவிழியே வாவா
அம்மா என்றாசையுடன் அழைக்கின்றேன் வாவா
கண்ணே என்றரவணைக்க கற்பகமே வாவா

பட்டாடை சரசரக்க பைங்கிளியே வாவா
சிற்றாடை சிலுசிலுக்க சின்னப் பெண்ணாய் வாவா
முத்தாரம் மார்பசைய முத்துப் பெண்ணே வாவா
முத்தமிழால் அழைக்கின்றேன் முக்கண்ணியே வாவா

அன்னப் போல நடை நடந்து அஞ்சுகமே வாவா
சுவர்ணம் போல ஒளிரும் எழில் சுந்தரியே வாவா
இருள் அகற்றி ஒளி கூட்ட கதிரவனாய் வாவா
மருள் விரட்டி வழி காட்ட குரு வடிவாய் வாவா

உன்

பாதத்தூளி பட்டால் பல புவன்ங்கள் பூக்கும்
பாதத்தூளியின் மகிமை முத்தொழில் காக்கும்
பாதத்தூளி சிவனாரின் திரு நீறாகும்
பாதத்தூளியின் துளியால் இந்தப் பிறவியும் தீரும்



--கவிநயா

Monday, April 20, 2020

மூகாம்பிகே

கொல்லூரில் குடி கொண்ட மூகாம்பிகே
என்னுள்ளம் குடி கொள்ள வா அம்பிகே
(கொல்லூரில்)

முப்பெருந் தேவியரின் ஓருருவாக வந்தாய்
மூவரும் முனிவரும் தேவரும் போற்ற நின்றாய்
லிங்கத் திருமேனியிலே ஸ்வர்ண ரேகையாக வந்தாய்
இரண்டில்லை ஒன்றெனக் காட்டும்படியாக நின்றாய்
(கொல்லூரில்)

கலைகளின் நாயகி, காக்கின்ற தேவி நீ
காற்சதங்கை கொஞ்ச பின்னே வந்த வாணி நீ
சங்கரற் கருளிய சங்கரி நீ அம்மா
எங்களுக்கும் அருளிட மனம் வைத்து வா அம்மா
(கொல்லூரில்)


--கவிநயா

Tuesday, April 14, 2020

வா அம்மா!

அனைவருக்கும் இனிய சார்வரி புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டில் கொரோனாவால் ஏற்பட்ட துன்பம் நீங்கி உலகம் உய்ந்திட, அன்னையின் அருளை வேண்டுவோம் 🙏

அபிராமியாய்... சிவகாமியாய்...
அபிராமியாய்... சிவகாமியாய்...
மீனாக்ஷியாய்,  காமாக்ஷியாய்
வி சாலாக்ஷியாய், வெக்காளியாய்
கருணை மழை பொழியும் கருமாரியாய்

ஆங்காரியாய்... ஓங்காரியாய்...
அண்டங்கள் ஆக்கி வைத்த ஆதிசக்தியாய்
இளம் பாலையாய், எழில் கன்னியாய்
இடத்தினில் சிவனாரின் சரிபாதியாய்

புவனங்கள் யாவையும் பூத்துக் காக்கின்ற புவனேஸ்வரி
மூவரும் தேவரும் முனிவரும் வணங்கிடும் ராஜேஸ்வரி
ஜெகத்தினில் நிறைந்து இதயத்தில் உறைந்திடும் ஜெகதீஸ்வரி
உலகம் அனைத்தையும் உயிராய்க் காத்திடும் மாதேஸ்வரி

தேவரைக் காத்திட அசுரரை மாய்த்திட இரங்கி வந்த தாயே
தேடிடும் அடியவர் நாடிடும் அரும் பொருள் அன்பு அன்னை நீயே
பலப் பல ஊர்களில் பலவித நாமங்கள் கொண்டவள் நீயம்மா
அம்மா என்றுனை அழைத்திடும் கன்றின் குரலுக்கு வா அம்மா


--கவிநயா

Tuesday, April 7, 2020

ஓம் சக்தி - 2


(போன வாரத்தின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். அதே சந்தத்தில்...)
தன்ன னன்ன தன்ன னன்ன தன்ன னன்ன தனனன

தன்ன னன்ன தன்ன னன்ன தன்ன னன்ன தனனன

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி

காடு போன்ற வாழ்வில் வழி காட்டும் ஒளி நீயன்றோ
கண்களினால் கருணை செய்து துயர் துடைக்கும் தாயன்றோ
உன்புகழை நாளும் பாடும் நானும் உன்றன் சேயன்றோ
அன்புடனே அரவணைத்துக் காப்பதுன்றன் கடனன்றோ

தேவர்களும் முனிவர்களும் போற்றுகின்ற அரசியே
வேதங்களின் நாதமாக விளங்குகின்ற அன்னையே
மூவருக்கும் முதலாகி நின்ற ஆதி மூலமே
முன்நின்று காக்க வேணும் ஆதி பராசக்தியே

நாவு நைய உன்றன் நாமம் நாளும் நானும் நவின்றிட
நெஞ்சம் நைய உன்நினைவில் நாளும் ஆழ்ந்து வாழ்ந்திட
மெய் விதிர்த்துப் புளகம் கொண்டு விழியில் நீரும் மல்கிட
கை கொடுத்துக் காக்க வேணும் உயிர் கொடுத்த சக்தியே

மனிதனாகப் பிறப்பெடுக்கும் பேறு தந்த அன்னையே
புனிதனாக்கி உன்நிழலில் வைத்திடுவாய் என்னையே
இனியனாக்கி உன்புகழே பாடச் செய்வாய் அன்னையே
இலையெனாதிவ் வரமளித்துக் காத்திடுவாய் என்னையே

உன்னையன்றி தெய்வம் என்று வேறு ஒன்று இங்கில்லை
அன்னையன்றி அன்பு காட்ட பிள்ளைகட்கு ஆளில்லை
சொல்லி வைத்த தமிழில் ஒரு சொல்லையேனும் கேட்டு வா
அள்ளி வைத்த என்றன் அன்பை ஏற்றுக் கொள்ள விரைவில் வா

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி


--கவிநயா