Monday, April 24, 2017

கலைகளின் ராணி!


கீதாம்மா தன் இனிய குரலில்...மோஹனம் ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

கலைகளின் ராணி கலைவாணி, வெள்ளைக்
கமலத்திலே இருந்து அருள் வேணி
(கலைகளின்)

நாத வடிவானவளே நா மகளே, உந்தன்
பாதங்களை அன்றி வேறு ஏது புகலே?
(கலைகளின்)

வெள்ளை மலரில் ஒரு வெள்ளி நிலவே, எந்தன்
உள்ள மடுவில் உறையும் கொள்ளை எழிலே
அறியாமை தன்னை அழித்திடுவாய், உண்மை
அறிந்திடவே ஆற்றல் அளித்திடுவாய்
(கலைகளின்)


--கவிநயா


Monday, April 17, 2017

திரு மயிலை



கீதாம்மா தன் இனிய குரலில்...ஹம்ஸநாதம் ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

அழகு நிறைந்த மயிலே
ஆடி யாடி வாயேன்
உன்னழகில் மயங்கியதால்
உலகில் வந்தாள் தாயே
(அழகு)

அன்றொரு நாள் கயிலையிலே பாடம் நடந்தது, ஒரு
மயிலின் அழகால் அன்னை மனதில் சலனம் வந்தது
கண்ட எந்தை சிவனின் விழிகள் இரண்டும் சிவந்தது, அன்னை
புவியில் பிறவி எடுத்திடவே சாபம் பிறந்தது
(அழகு)

அன்னையவள் உன்னுருவில் புவியில் உதித்தாள்
ஒரு மனதாய்ப் பதியை நினைந்து நாளும் துதித்தாள்
மனங் குளிர்ந்த ஈஸ்வரனைக் கடிமணம் புரிந்தாள்
கயிலையின் மறுவடிவாய்த் திரு மயிலையை அமைத்தாள்
(அழகு)


--கவிநயா


Monday, April 10, 2017

வேண்டும்!




கீதாம்மா தன் இனிய குரலில்...மிக்க நன்றி கீதாம்மா!

ஒரு வரம் தர வேண்டும்
நினைவினில் வர வேண்டும்
நினைவுக்குள் நிலையாக
நீ அமர்ந்திட வேண்டும்

நாவினில் உன் நாமம்
தினம் தவழ்ந்திட வேண்டும்
சுகம் உந்தன் பதமென்று
மனம் உணர்ந்திடல் வேண்டும்

கனி முகம் என் நெஞ்சில்
களி மிகத் தர வேண்டும்
விழி யிரண்டின் ஓரம்
வழிகின்ற நீர் வேண்டும்

அன் பனைத்தும் உனக்காய்
அள்ளி யள்ளித் தர வேண்டும்
வாழ்வே உந்தன் சேவையாக
வாழும் மன நிலை வேண்டும்


--கவிநயா

Monday, April 3, 2017

எண்ணத்தில் இனிப்பவள்


கீதாம்மா தன் இனிய குரலில்...சந்த்ரகௌன்ஸ் ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

கண்ணுக்குள் மணியாக உன்னை வைத்தேன், அம்மா
கவிதைக்குள் கருவாக பாடி வைத்தேன்
(கண்ணுக்குள்)

கிண்ணத்தில் மது போலே எண்ணத்தில் இனிப்பவளே!
அன்னத்தின் வடிவழகே, ஆயிரம் நிலவழகே!
(கண்ணுக்குள்)

வினையின் பயனாலே விதி வலையில் விழுந்தேன்
கதி நீயே என்று கண்ட பின்னே தெளிந்தேன்
பதமே சதமென்று காலடிகள் தொழுதேன்
உனதருளை வேண்டி தினந் தினமும் அழுதேன்
(கண்ணுக்குள்)



--கவிநயா