Monday, November 28, 2011

ஏனிந்த மௌனமடி?


யாரிடம் சொல்லி அழ – எவர்
மடியினில் சென்று விழ?
தேம்பி யழ வேணும் – அதற்கு
தாயுன்றன் மடி வேணும்

பாரமும் மிகவாச்சு – போகும்
பாதையும் முரடாச்சு
தேகமும் களைச்சாச்சு – உன்னை
தேடி நான் சலிச்சாச்சு

ஏனிந்த மௌனமடி – ஏனோ
எனக்கிந்த துயரமடி
அடைக்கலம் தந்திடவே – உனக்கு
ஏனிந்த தயக்கமடி?


--கவிநயா

Friday, November 25, 2011

தாயே!தயைபுரிவாய்!

(ஓராண்டுமுன்  'சர்வம் நீயே' வலையில் பதிவிட்ட என் பாடலை
 'அம்மன் பாட்டு' அன்பர்களுக்காக இங்கு அளிக்கிறேன்)

1 ) இடர்நீக்கும் ஏகதந்தன் தாயே ! அபிராமி!
விடமுண்டகண்டனில் பாதியே சிவகாமி!
அடைக்கலம் நீயே அம்மா ! ஆதரி காமாட்சி!
மடமதியர் ஆனாலும் மனமிரங்கு மீனாக்ஷி!


2 ) குருகுகனின் தாயே! மலைமகளே ! மாயே!
கருவையும் காக்கும் கர்ப்பரக்ஷாம்பிகையே !
திருமால் சகோதரி ! மகேசன்மனோகரி!
அருள்புரிவாயம்மா! அகிலாண்டேஸ்வரி!


3 ) எள்ளி நகைத்திருந்தோம் இளமையின் இறுமாப்பில்;
துள்ளித்திரிந்தோமே உளத்திலுன்நினைப்பின்றி;
பள்ளத்திலே விழுந்தோம் பணம் தந்த போதையிலே;
தள்ளாமை தாக்கிடவும் தவிக்கிறோம் உனைத்தேடி!


4 ) "முற்போக்கர்" எனும்பேரில் தற்பெருமைபேசும்
அற்பர்களைத்திருத்தி அறவழி காட்டிடம்மா!
நிற்பதும் ,கற்பதும் ,சர்வமும் உன்னால் எனும்
சமர்ப்பணபுத்தி தந்து அருள்புரிவாயம்மா!


5 ) விஞ்ஞானம் எனும்பேரில் நாத்தீகத்தைப்பரப்பும்
அஞ்ஞானியர் அகந்தை அழிந்திடவேண்டுமம்மா!
மெய் ஞானம் அளித்தெம்மை ஆட்கொள்ளவேண்டுமம்மா!
இஞ்ஞாலம் எங்குமின்பம் பொங்கிடவேண்டுமம்மா!


6 )பிழைசெய்வோர் உன்படைப்பே, பொருத்தருள வேண்டுமம்மா!
பழையபடிமாறாமல் தடுத்தருள வேண்டுமம்மா!
அழைக்குமுன் எம்முள்ளே எழுந்தருள வேண்டுமம்மா!
நுழைவாசல் எமன் வரினும் உன்நினைப்பே வேண்டுமம்மா!


7 )சாரதே! சாமளே!சாகம்பரி! சிவானி!
பாரதி!பார்வதி! பரமேஸ்வரி! பவானி!
நாராயணி! நவகாளி! காத்யாயினி!
பூரணி! பவபயஹாரிணி!ஜகத்ஜனனி !


8 )கற்பகவல்லியே!கௌரி!காமேஸ்வரி!
சொற்பதங்கள் கடந்த சுந்தரி!சங்கரி!
கற்பனைக்கெட்டாத அத்புதரூபிணி! உன்
பொற்பதமன்றி புகலேது புவனேஸ்வரி ?


9 )சுத்தசித்தத்தினால் நித்தம் உனைநினைக்கும்
உத்தமபக்தருக்கு முக்திதரும் உமையே!
பித்தரில்பாதியே!சத்தியஜோதியே !
நித்யகல்யாணி !நின்பாதம் சரணமம்மா!

Monday, November 21, 2011

நீயே கதி!


பலமுறை உனைப் பணிந்தேன்
பதமலர் தனில் விழுந்தேன்
கதியென உனைப் பிடித்தேன் அம்மா
நதியென எனை நனைப்பாய் அம்மா!

பண்ணில் உனைத் தினம்
பாடி அழைக்கின்றேன்
காதில் விழ வில்லையோ?

மண்ணின் மாந்தரெல்லாம்
போற்றும் அன்னைக்கிந்தப்
பிள்ளையொரு தொல்லையோ?

விண்ணின் தேவருக்கு
அருள இரங்கிவந்தாய்
எனக்கு என்று அருள்வாய்?

கண்ணின் மணியுன்னைப்
போற்றித் துதிக்கின்றேன்
காக்க ஓடி வருவாய்

கல்லும் கரையுமிந்தப்
பெண்ணின் கவிகேட்டுன்
உள்ளம் கரைய வில்லையோ?

முள்ளை மலராக்கும்
தீயைப் பனியாக்கும்
பார்வை எனக் கில்லையோ?

உன்னை அன்றி ஒரு
நினைவு எனக்கில்லை
என்றன் அன்பை அறிவாய்

கண்ணில் வழிந்தோடும்
நீரைத் துடைத்திடவே
அன்னை நீயே வருவாய்!


--கவிநயா

Monday, November 14, 2011

அம்மா, அருள்வாய்!



அம்மா அருள்வாயே
மன அமைதி தருவாயே
சஞ்சலங்கள் ஏதுமின்றி
சந்ததமும் உன்னைப் பாட

(அம்மா)

அன்னை உனையே நாட வேண்டும்
கன்னல் தமிழால் பாட வேண்டும்
முன்னால் பின்னால் மிரட்டும் வினைகள்
தன்னால் பயந்து ஓட வேண்டும்

(அம்மா)

குற்றங் குறைகள் நிறைந்த பிள்ளை
குறுகி உன்னைப் பணியும் வேளை
கற்றை அன்பை நீதான் பொழிந்து
சற்றே மடியில் ஏந்த வேண்டும்

(அம்மா)

கனவிலேனும் உன்னைக் காண
காலடியில் கண்ணீர் வார்க்க
விழியில் வழியும் அன்பைப் பருக
வழியில் நிறைந்த முட்கள் தொலைய

(அம்மா)


--கவிநயா

Monday, November 7, 2011

கடை விழியாலே காத்தருள்வாய்!



சுப்பு தாத்தா ஹிந்தோளம் ராகத்தில் மிகப் பொருத்தமாக அமைத்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! 
மிக்க நன்றி தாத்தா!

கடை விழியாலே காத்தருள்வாய்
கடலினை விஞ்சிடும் கருணை பொங்கும் உன்றன்
கடை விழியாலே காத்தருள்வாய்

சுடலைப் பொடி பூசும் சிவனுடனே
மடல் அவிழ்ந்த மலர் போல் மகிழ்பவளே
(கடை)

விடை தனிலே வருவாய் பதியுடனே
முடி தனிலே ஒளிரும் மதியுடனே
சடை முடியோ னுடன் அருளிடவே
மடை யென அன்பு வெள்ளம் பெருகிடவே
(கடை)


--கவிநயா