Monday, June 26, 2017

கடைக்கண் பார்ப்பாய்! கடையேனைக் காப்பாய்!



கீதாம்மா தன் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கற்றது எதுவும் கை கொடுக்க வில்லை

பெற்றதும் மற்றதும் வழி நடத்த வில்லை
சிற்றிடை மருங்கினில் செய்யப்பட்டு மின்னும்

பற்றெதும் அற்றவளே, பற்றினேன் உன் பதமே

(கற்றது)



காடே கதியென்று தவமிருப் போருண்டு

நீயே கதியென்று துதித்திருப் போருண்டு

வீடே கதியென்று பவவினையில் உழன்று

வீழ்ந்தேன் கடையேனைக் காப்பாய் நீயின்று

(கற்றது)



கற்றோரும் அறியா கருணைக் கடல் நீயே

மற்றோரின் தூய மனதில் எழுந் தீயே

பொற்றா மரைத்தாளில் பணிந்தேன் திருத் தாயே

வற்றாத அருட் சுனையே வருவாயே

(கற்றது)


--கவிநயா 

Monday, June 19, 2017

மௌனம் ஏன்?



கீதாம்மா தன் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

ஒரு வார்த்தை சொல்லாததேனோ?
திருவாய் மலர்ந்தெந்தன் மனம் குளிர இன்னும்

(ஒரு வார்த்தை)



என்னை அறிந்திருந்தும், உண்மை புரிந்திருந்தும்

உனையே சரணென்று அடைந்தேன் தெரிந்திருந்தும்

(ஒரு வார்த்தை)



மாந்தர்தம் வார்த்தையெல்லாம் மறைந்தே போகுதம்மா

காற்றோடு காற்றாக கரைந்தே போகுதம்மா

உந்தன் திருவாக்குக் கூட அதுபோல் ஆகுமென்றோ

மௌனம் காக்கின்றாய், முறுவல் பூக்கின்றாய்

(ஒரு வார்த்தை)


--கவிநயா

Tuesday, June 13, 2017

அடைக்கலம் நீயே!

உன்னை விட்டால் யாரெனக்கு உமையவளே, பூம்
பாதத்தில் நிழலெனக்கு தருபவளே
(உன்னை)

உன்னைத்தான் பாடுகிறேன்; உன்னருளைத் தேடுகிறேன்
உன்னைத்தினம் நாடுகிறேன், பாராயோ?
திருவாயால் ஒருவார்த்தை கூறாயோ?
(உன்னை)

பழவினையின் பாரம் உயிரை அழுத்துது
விழிவழி நீர்அதனைக் கரைத்திடத் துடிக்குது
சிறகில்லாப் பறவையாய் மனம்மிகத் தவிக்குது
உன்பதநிழலொன்றே அடைக்கலம் என்குது
(உன்னை)


--கவிநயா 

Monday, June 5, 2017

எப்போது தீரும்?



ஜோன்பூரி ராகத்தில் சுப்பு தாத்தாவின் குரலில், இசையில்,, உருக்கத்தில். மிக்க நன்றி தாத்தா!


கீதாம்மா தன் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

ஆதரித்தால் தீருமோ, சம்ஹரித்தால் போகுமோ?

ஆறாத துயரமென்னைத் துரத்துதம்மா நியாயமோ?

(ஆதரித்தால்)



உலகம் ஏழுமே பெற்ற அன்னை உன்னை

அண்டிச் சரணடைந்தேன் ஏனிந்தத் தாமதமோ?

(ஆதரித்தால்)



திருவடிகள் பற்றிக் கொண்டேன் திருக்கடவூர் அபிராமி!

திக்கற்றுத் தவிக்கின்றேன் வழிவிடுவாய் சிவகாமி!

மீன் விழியால் என் திசையில் பார்த்திடுவாய் மீனாட்சி!

எந்தை மனம் பறித்த கண்ணை என்மேல் பதிப்பாய் காமாட்சி!

(ஆதரித்தால்)


--கவிநயா