Friday, September 30, 2011

பாராளும் பேரழகி !

         பாராளும் பேரழகி !  
(அன்னையின் கழல் முதல் குழல்வரை பொங்கும் அழகின் அலைகள்)


[kamakshi.jpg]

சங்கரனின் பத்தினியே!கட்டழகுக் களஞ்சியமே!
எங்கள்மனக்கோயிலிலே   கொலுவிருக்கும் அஞ்சுகமே
அம்மா!அபிராமி!உந்தன்  கழல் முதல் குழல் வரை பொங்கும்
அழகின் அலைகளைப் பாடி  பாதமலர்  பணிகின்றோம்.

                        [1]        உந்தன் திருப்பாதங்களாம் 
                                    செங்கமலமலர்களினை
                                    மொய்க்கும் கருவண்டுகளாய்த்
                                    தெரிவதெங்கள் தலைகளன்றோ!

                          [2]       வாழைத்தண்டொத்த உந்தன்
                                     கால்களினழகைப்போற்றி
                                     பாடிஉன்னைப் பணிகின்றோம்
                                    தாயே!நீ அருள் புரிவாய்.

                          [3]       பூரித்த பின்னழகை,
                                     இல்லாத இடையழகை
                                     பாடியுன்னைப் பணிகின்றோம்
                                     பேரருளைப் பொழிந்திடுவாய்.

                           [4]     தாய்மை எனும் தனியழகுன்  
                                    மேனியிலே  பொங்குதம்மா!
                                    ஜகத்ஜனனி!மங்களமெங்கும்
                                   பொங்கிடவே அருள் புரிவாய்.
                                    
                            [5]  பூங்கணைகளைத்தாங்கும்
                                  பூங்கரத்தின் பேரழகை
                                  பாடியுன்னைப் பணிகின்றோம்
                                  தூயவளே!அருள்புரிவாய்.

                            [6]     உந்தன் செந்தளிர்விறல்கள்
                                     'அபயம்' காட்டும் அழகை
                                     பாடியுன்னைப் பணிகின்றோம்
                                     அம்பிகையே!அருள்புரிவாய்.

                            [7]     குஞ்சுக்கிளியும்,கரும்புமுன்
                                     வேயுறு தோள்களிலே
                                     கொஞ்சுகின்ற அழகுதனைப்
                                      பாடியுன்னைப் பணிகின்றோம்.
                                              
                           [8]     திருத்தாலி நெளிந்திடுமுன்
                                    சங்குக்கழுத்தழகை
                                    பாடியுன்னைப் பணிகின்றோம்
                                   அன்னையே!அருள்புரிவாய்.

                          [9]      தண்ணொளி தவழுமுந்தன்
                                    பொன்வதனம் கண்ட நிலா
                                     முட்டாக்கு போட்டொளிய
                                     முகில் தேடி ஓடுதம்மா!

                         [10]     குங்குமப்பூவிதழில்
                                    புன்னகை கண்டதாலே     
                                    உண்டான போதையிலே
                                   உருண்டு பூமி சுழல்கிறதோ?  

                         [11]    முல்லைப்பூச்சரம்போலே
                                   ஒளிர்ந்திடுமுன் பல்லழகை
                                  பாடியுன்னைப் பணிகின்றோம்
                                  ஜகதம்பா!அருள்புரிவாய்.

                          [12]    நட்சத்திரமாய் மினுக்கும்
                                    மூக்குத்தி அணிந்த உந்தன்
                                   மூக்கழகைத்துதிபாடி
                                    பணிகின்றோம்.அருள்புரிவாய்

                        [13]     காதளவு நீண்ட உந்தன்
                                   கயற்கண்களில் பெருகும்
                                   கருணையின் பேரழகை
                                    பாடியுன்னைப் பணிகின்றோம்.

                      [14]       காமன் கை வில்போலே
                                   வளையமுந்தன் புருவங்களின்
                                    பேரழகைப் பாடுகின்றோம்
                                   சாம்பவியே!அருள்புரிவாய்.

                      [15]      பனையோலைத்   தாடங்கம்
                                  அணிந்த உன் செவியழகை
                                  பாடியுன்னைப் பணிகின்றோம்
                                  சுந்தரியே!அருள் புரிவாய்.

                      [16]      மதிநுதலில் ஒளிரும் உன்
                                  'நெற்றிப்பொட்டு'அழகுதனை
                                 பாடியுன்னைப் பணிகின்றோம்
                                  சங்கரியே!அருள் புரிவாய்

                       [17]   உந்தன் கருங்குழல் கண்டு
                                மழைமுகில் என்றே மயங்கி
                                வண்ணத்தோகை விரித்து மயில்
                                வட்டமிட்டு  ஆடுதம்மா!

                        [18]   முகிலிடை மின்னலென உன்
                                 முடியிடையே வகிடுதனில்
                                சிந்தூர  அழகு எங்கள்
                                 சிந்தை கொள்ளை கொண்டதம்மா

சங்கரனின் பத்தினியே!கட்டழகுக் களஞ்சியமே!
எங்கள்மனக்கோயிலிலே கொலுவிருக்கும் அஞ்சுகமே!
அம்மா!அபிராமி!உந்தன் கழல் முதல் குழல் வரை பொங்கும்
அழகின் அலைகளைப் பாடி பாதமலர் பணிகின்றோம்



Thursday, September 29, 2011

உன் பாதம் சரணம்!



சூலம் ஏந்திக்கொண்டு சூலியவள் நம்மை காத்து நிற்கிறாள்
சூழும் பகைதன்னை விரட்டித் துரத்திடவே பார்த்து நிற்கிறாள்
கால தேவனையும் அடக்கி ஆளுபவள் காளி தேவியே
ஞாலம் யாவையுமே போற்றிப் பணியுமவள் புகழைப் பாடியே!

சண்டி என்றாலும் அண்டி வருவோரைக் காத்து நிற்பவள்
கண்டைப் போலவே இனிக்கும் அன்புதனைக் கொடுத்து நிற்பவள்
தீமை அவளைக்கண்டால் தீயைக் கண்டதுபோல் தூர ஓடுமே
நாவை துருத்திவரும் நங்கை அவளைக்கண்டால் நடுங்கிச் சாகுமே!

அன்னை என்றுதன்னை அன்பு செய்வோரைக் காத்து நிற்பவள்
பிள்ளை இவனென்று அணைக்கும் அன்பினிலே கனிந்து நிற்பவள்
சக்தி உன்றன் திருப்பாதம் சரணென்ற எண்ணம் போதுமே
பக்தர் தமைக்காக்க சூலம் அரணென்று வந்து சேருமே!


--கவிநயா

Wednesday, September 28, 2011

அம்மா வரவேண்டும்!

செம்மாதுளைச்சிரிப்பு
செவ்விதழில் தவழ எங்கள்
பொம்மைக்கொலுவில் அமர்ந்து
பேரருள் பொழியவேண்டும்!

அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!

சொக்கனைச் சொக்கவைத்த
கண்ணழகி!மீனாக்ஷி!
இக்கணமே சாக்குபோக்கு
சொல்லாமல் வரவேண்டும்!

அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!

கொண்டவன் உண்ட நஞ்சை
உந்தன் கற்புத்திறத்தாலே
கண்டத்திலே தடுத்தவளே!
கற்பகமே!வரவேண்டும்!

அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!

பக்குவமாய் சுண்டல் செய்து
பாயசமும் படைக்கின்றோம்;
நெக்குருக நாங்கள் பாடும்
துதி கேட்க வரவேண்டும்!


அம்மா!நவராத்திரியில்
அழைக்கின்றோம் நாங்களுன்னை!
சிம்மவாகனமேறி
சீக்கிரமாய் வரவேண்டும்!

Tuesday, September 27, 2011

9ராத்திரி-01: "கொலு" இருக்க வருக!

அன்பர் அனைவருக்கும் இனிய நவராத்திரி (ஒன்பதிரா) வாழ்த்துக்கள்!

அன்னை எங்கும், என்றும், எப்போதும்...எல்லா இடத்தும் இருப்பவள் தான்!
நம் அம்மாவின் நினைவு அடிக்கடி இருந்தாலும்,
பிறந்த நாள்/மணநாள் போன்ற நாட்களில், பூங்கொத்தும், முத்து மாலையும், புடைவையும் குடுத்து அசத்துவதில்லையா?:)

அது போல், இன்று துவங்கி, ஒன்பது நாட்கள்...
முதல் நாளின் முதல் வேலையாக...
"கொலுவிருக்க வா" என்று அழைத்து,
உட்கார்த்தி வச்சி, விசிறி விட்டு, நம்ம கையால் காபி போட்டுத் தருவோம்!:)

சுசீலாம்மா-வின் தேன் பாகு குழையும் குரலிலே...அலைமகளே வருக! கொலுவிருக்க வருக!



கேட்டுக் கொண்டே வாசிக்க...

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி
பஞ்சுத் திரி போட்டு பசும் நெய் தனை ஊற்றி
குங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானும் இட்டு
பூமாலை சூட்டி வைத்து பூசிப்போம் உன்னை.....திருமகளே.....

திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!
(திருவிளக்கை)

வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமீகரம்
நெற்றியிலே திருசூர்ணம், நெஞ்சினிலே லட்சுமீகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம்
அட்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம்
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!!
அலைமகளே வருக, ஐச்வர்யம் தருக!!

மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அட்டலட்சுமி திருநாமம்!
அன்றாடம் பாடிடுவோம் அட்டலட்சுமி திருநாமம்!

சங்கு சக்ரதாரி நம'ஸ்'காரம்..
சகல வரம் தருவாய் நம'ஸ்'காரம்..
பத்மபீட தேவி நம'ஸ்'காரம்..
பக்தர் தமைக் காப்பாய் நம'ஸ்'காரம்..

Thursday, September 22, 2011

திரு அங்க மாலை - 2


நெஞ்சே நீ நினையாய்
வஞ்சமில்லா நெஞ்சினுக்கு தஞ்சம் அளிப்பவளை
செஞ்சடை யோனுடன் கொஞ்சிக் களிப்பவளை
நானிலமெல்லாம் காக்கும்
நாயகியை நிதமும்
நெஞ்சே நீ நினையாய் (6)

கையே நீ தொழுவாய்
கந்தமலர் தூவிஅவள் கஞ்சமலர்ப் பாதங்களை
விந்தையிலும் விந்தையான எந்தைஇடம் இருப்பவளை
காந்தமெனக் கவர்ந்திழுக்கும்
கன்னியவளை என்றும்
கையே நீ தொழுவாய் (7)

காலே வலம் வாராய்
கடலெனும் வாழ்விதிலே கரையெனவே ஒளிரும்
மடலவிழ்ந் தமலராய் மனதினில் மணத்திருக்கும்
கன்றென நமைக்காக்கும்
கற்பகத்தின் திருக்கோவில்
காலே வலம் வாராய் (8)

உடலே நீ பணியாய்
உம்பருக்கும் இம்பருக்கும் இகபர சுகமளிக்கும்
அங்கமொரு பங்கெனவே அரனுடன் பகிர்ந்திருக்கும்
உலகமெல்லாம் காக்கும்
உமையவளை தினமும்
உடலே நீ பணியாய் (9)

மனமே நீ உணராய்
மங்கை யவள் உறவன்றி உண்மை உற வெதுவுமில்லை
கங்கை முடி சூடியவன் பங்கை யன்றி புகலுமில்லை
அங்கையின் நெல்லிக்கனி
போலஅவள் அருமைதனை
மனமே நீ உணராய் (10)


--கவிநயா

(அடுத்த வாரம்னு சொல்லியிருந்தேன், ஆனா அடுத்த செவ்வாய் நவராத்திரி ஆரம்பிக்கறதால இப்பவே இட்டாச்சு :)

Monday, September 19, 2011

திரு அங்க மாலை - 1

திருநாவுக்கரசர் அப்பனுக்கு திரு அங்க மாலை பாடினார். அதை படிச்ச போது அம்மாவுக்கு பாடணும்னு எனக்கு ஆசை வந்தது. புலியைப் பார்த்து... அந்தக் கதைதான் இது. இருந்தாலும், அருள் கூர்ந்து பொறுமையுடன் வாசிக்கும்படி வேண்டுகிறேன்.


தலையே நீ வணங்காய்
திருமுடியில் எழில் பிறைமதி சூடிய
கருவிழியில் அருட் கடலினை ஏந்திய
தரணியெல்லாம் காக்கும்
தாயவள் திருப்பாதம்
தலையே நீ வணங்காய் (1)

கண்ணே நீ காணாய்
கருமையில் ஒளிர்பவள் கருணையில் அருள்பவள்
மறுமையை அறுப்பவள் மலரெனச் சிரிப்பவள்
கண்ணெனநமைக் காக்கும்
கண்மணியவள் வடிவம்
கண்ணே நீ காணாய் (2)

செவியே நீ கேளாய்
செய்யக் கலையுடுத்தி செங்கமலம்போ லொளிரும்
பையப் பணிந்தவர்க்கு பரிவுடனே அருளும்
சிந்தையெல்லாம் நிறைந்த
செய்யவள் திருப்புகழை
செவியே நீ கேளாய் (3)

மூக்கே நீ முரலாய்
முந்தைவினை யனைத்தும் முந்திவந்து விரட்டும்
பிள்ளைப்பிழை யனைத்தும் பேரருளால் பொறுக்கும்
முதலுக்கு முதலான
முக்கண்ணி யைப்போற்றி
மூக்கே நீ முரலாய் (4)

நாவே நீ கூறாய்
நஞ்சமு தாக்கிய வஞ்சியவள் புகழை
அஞ்சலென அன்பால் அரவணைக்கும் அழகை
நெஞ்சந்தனில் குடியேறி
நிலைத்தவள் திருநாமம்
நாவே நீ கூறாய் (5)


--கவிநயா

(இன்னும் இருக்கு. அது அடுத்த வாரம்...)

Monday, September 12, 2011

திருவடி சரணம்



அம்மா உன்திரு வடிசரணம்
அருள்கூர்ந் திங்கே நீவரணும்
மனதின் கவலை நீக்கிடணும்
மாதா நீதான் உதவிடணும்

உன்னடியே தொழுதிடப் பழகிடணும் - உன்
பெயரே நாவில் தவழ்ந்திடணும்
நாளும் உனையே போற்றிடணும் - உன்
பெருமை தனையே பாடிடணும்

உன்சொல் ஒன்றே கேட்டிடணும் - உன்
விருப்பம் போலே வாழ்ந்திடணும்
நீயே கதியென் றுணர்ந்திடணும் - உன்
காலடியில் நான் கிடந்திடணும்


--கவிநயா

Monday, September 5, 2011

எங்கே இருக்கிறாய்?


சுப்பு தாத்தா கானடா ராகத்தில் பாடியதைக் கேட்டு ரசியுங்கள். நன்றி தாத்தா!

எங்கேதான் இருக்கிறாய்?
எப்படித்தான் இருக்கிறாய்?
துயரத்தில் துவள்பவளை
எப்படித்தான் மறக்கிறாய்?

தொடு வானம் போலேநீ
தொலைவினிலே இருக்கிறாய்
நீரில் தெரியும் நிலவைப் போலே
என்னை அலைக்கழிக்கிறாய்!

வற்றாத விழியிரண்டை
வள்ளல் போலத் தந்துவிட்டாய்
பொற்றாமரை யினின்றும்
எழுந்து வர மறுக்கிறாய்!

இது என்ன நியாயமோ
இதுவே உந்தன் நீதியோ
பெற்ற பிள்ளை அழுதிருக்க
வீணை உனக்குத் தேவையோ?

கன்றை விட்டுப் பிறஉயிரை
கொஞ்சுகின்ற பசுவும் உண்டோ?
என்னை விட்டு சிங்கமதை
விரும்பும் உந்தன் எண்ணம்தான் என்ன?

உன்மாயை ஒன்றும் புரியவில்லை
வாழும் வழியும் தெரியவில்லை
என்று தான் வருவாயோ
என்னைக் கூட்டிச் செல்வதற்கு?

--கவிநயா