Tuesday, September 29, 2009

அன்னையே அருந்துணையே!



அன்னையே அருந்துணையே
அகில மாளும் நாயகியே
தங்கமே தத்துவமே
தத்து வத்தின் வித்தகமே

(அன்னையே)

தேவி உன்னைத் துதித்திடவே
பேதை என்ன பேறு செய்தேனோ
தேவி உன்னை வணங்கிடவே
தேடி இந்தப் பிறவி கொண்டேனோ

(அன்னையே)

உந்தன் தூரப் பார்வையிலேனும்
என்னைச் சின்னத் துகளாய்க் கொள்வாய்
என்றும் என்னை உன்மல ரடியில்
நிரந்தரமாய்ச் சேர்த்துக் கொள்வாய்!

(அன்னையே)


--கவிநயா

பலப்பல நாட்களில் முதல் முறையாக செவ்வாயன்று பதிவிட முடியவில்லை. மன்னிச்சுக்கோ அம்மா.

Saturday, September 26, 2009

"கண்ட களிப்பா"

"கண்ட களிப்பா"


கண்டவர் பின்னலையாமல் கண்ணெதிரே கண்டுகொண்டேன்
கொண்டவள் இவளென்றே குவலயத்தில் நான்கண்டேன்
வண்டார்குழலி வண்ணக் கண்ணுடையாள் என்னவளைச்
செண்டார் நாயகியை என்னுள்ளே நான் கண்டுகொண்டேன்!1

கண்டேன் கண்ணெதிரே கனகமணி மகுடம்கண்டேன்
கொண்டேன் இருகைசேர்த்தவளை என்னெஞ்சுள் கொண்டேன்
அண்டம் அனைத்துக்கும் ஆதியான அன்னையிவள் கருணையினால்
பண்டைவினையின் பயனெல்லாம் சிறந்திடவே கண்டேன்!2

கண்டமுகச் சிரிப்பினிலே மனம்நிறையக் கண்டேன்
கொண்டமலர்ச்சரவாசம் நெஞ்சினிக்கக் கொண்டேன்
கொண்டைநிறைக் கூந்தலுடைக் கார்மேகக் கண்மணியை
அண்டமெல்லாம் காப்பவளை என்னுள்ளே கண்டுகொண்டேன்!3

கண்டேன் திருமுகத்தின் ஒளிநிறைக்கக் கண்டேன்
கெண்டைமீனின் துள்ளலாடும் கருவிழிகள் கண்டேன்
தண்டையணி சதங்கைகொஞ்சும் பட்டுமலர்ப்பாதம்
கொண்டவளை நாடியென் நெஞ்சினுள்ளே கொண்டேன்!4

கண்டேன் கருத்தினிலே நிறைந்தவளைக் கண்டுகொண்டேன்
அண்டபகி ரண்டமெலாம் அவளடியில் பணியக் கண்டேன்
கண்டமதில் பொலிகின்ற பொற்றாலிமின்னக் கண்டேன்
கண்டவளை வணங்கியே நெஞ்சினிக்கக் கொண்டேன்!5

கண்டதிரு மேனியிலே காஞ்சிப்பட்டு மின்னக்கண்டேன்
கெண்டைக்கால்களிலே பொன்கொலுசு ஒளிரக் கண்டேன்
செண்டுமலர்த் தாங்கிவரும் கார்மேகக் கூந்தல் கண்டேன்
கண்டவளின் தாள்பணிந்து என்னுள்ளே கொண்டேன்!6

கண்டேன் பொன்னாரம் கழுத்தினிலே மின்னக்கண்டேன்
தண்டுவடப் பொன்னாரப் பதக்கம் மின்னக் கண்டேன்
மொண்டார் பொய்கையென அருள்சுரக்கும் விழிகண்டேன்
கண்டவளைக் கைதொழுது கண்ணாரக் கண்டுகொண்டேன்!7

கண்டவளின் கருணையிலே கண்ணீர் மல்கக் கண்டேன்
மண்டலங்கள் மயங்கவைக்கும் மகத்தான எழில் கண்டேன்
விண்டுரைக்க வொண்ணாத அருள்சுரக்கும் அழகு கண்டேன்
எண்டைவினைதீர்க்க வந்தவளை என்னுள்ளேநான் கொண்டேன்!8

கண்டவரும் விண்டிடாத கவினழகைக் கண்ணாரக் கண்டேன்
கண்டதிலே மகிழ்ந்திடவே கருத்தினிலே எந்நாளும் கொண்டேன்
கொண்டதெலாம் உணர்ந்திடவே மனம்கரையக் கண்டேன்
திண்டாடும் துயரெல்லாம் தீயினால் தூசாகக் கண்டேன்! 9

கண்டதிங்கே சொல்லிடவே குருவருளைத் தேடிக் கண்டேன்
கண்டதிலே ஒன்றியவர் கைபிடித்து நடத்தக் கண்டேன்
கொண்டதெலாம் சிறந்திடவே அமைதியகம் மிகக்கண்டேன்
கண்ட களிப்பாவிற்குக் காரணியாய்த் தாயைக் கொண்டேன்! [10]

****************************

Friday, September 25, 2009

"நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!"

"நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!"

அன்னையிவள் அருகில்வந்து ஆதரவாய்ப் பார்த்தாள்
என்னையிரு கைகளிலே மழலையெனச் சேர்த்தாள்
தன்னுடனே வைத்திருந்து தன்னுருவைக் காட்டி
முன்னையொரு வினைப்பயனாய் வந்தென்னில் கலந்தாள்

அழகென்னும் ஓர் தெய்வம் மேலிருந்து இறங்கி
அருகென்னில் வந்திருந்து அருட்கரத்தைக் காட்டி
திருவுருவச் சிறப்பெல்லாம் தனித்தனியே காட்டி
முறுவலுடன் மகிழ்த்தியதைநான் என்னவெனச் சொல்ல!

நவநவமாய்த் தினம் பிறந்து அல்லலுறும் என்னை
நவக்கோலம் காட்டியவள் நானுயரச் செய்தாள்
தவமிருந்தும் கிடைக்காத தாயவளின் கருணை
நவராத்ரியில் கிட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

குளிர்நிலவாய் வந்தென்றன் குறையெல்லாம் தீர்த்தாள்
பிறைநிலவாய்க் காட்சிதந்து பேரறிவில் நின்றாள்
வளர்நிலவாய் வந்தவளென் வாழ்வுயரச் செய்தாள்
முழுநிலவாய்ப் பொலிந்ததைநான் என்னவெனச் சொல்ல!

உலகோரை வாழவைக்க அன்னைகொண்ட தோற்றம்
உலகாளும் மாயவளின் ஒன்பதுவகைத் தோற்றம்
உலகெல்லாம் கொண்டாடும் நவதுர்கா தோற்றம்
எனக்காகத் தந்ததைநான் என்னவெனச் சொல்ல!

மலைமகளோ அலைமகளோ கலைமகளோ என்றே
மனதினிலே நானெண்ணி இருந்தநிலை எல்லாம்
ஒருநொடியில் தகர்த்தெறிந்து துர்கையுருக்காட்டி
ஆட்கொண்ட திறத்தினைநான் என்னவெனச் சொல்ல!

ஹிமவானின் மகளாக, தவமிருந்த கோலமாக
மணிநிலவின் ஒளியாக, அண்டம்காக்கும் அன்னையாக
கந்தனவன் தாயாக, குலமாதா காத்யாயனியாய்
ஆறுகோலம் காட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

காலத்தை நடுங்கச் செய்யும் காலதாத்ரி ரூபமாக
சீலத்தைக் காட்டிவரும் மஹாகௌரித் தாயாக
அட்டமஹாசித்திதரும் சித்தாத்ரி அன்னையாக
நவகோலம் காட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

எதிரில் வந்து நின்றவளின் எழிட்கோலம் கண்டேன்
கதிரொளியாய் வந்தென்னில் கலந்தவளைக் கொண்டேன்
இனியவளே கதியென்னும் இன்பநிலைக் கொண்டேன்
கனிவான அருள்முகத்தின் கருணையிலே கலந்தேன்!

அன்னையுன்றன் அருட்கோலம் நெஞ்சினிலே வைத்து
நீயின்றிக் கதியில்லை எனமிகவும் கதறி
அனுதினமும் நின்னளருளைத் தந்திடவே வேண்டுமெனும்
ஒருவரம்நீ அருளிடுவாய் உலகாளும் துர்க்கே!

நவதுர்கை அன்னையரின் தாளிணையைப் போற்றி
அவரருளே வேண்டுமென நாள்தோறும் வேண்டி

அடியார்கள் அனைவருக்கும் நல்லருள் நீ செய்திடவே

நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!

*****************
ஜெயதேவி துர்க்கே! ஜெயதேவி துர்க்கே! ஜெயதேவி துர்க்கே!

காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா!


1996 ஆம் வருடம். வேலை கிடைத்து சென்னைக்கு வந்த நேரம். முதன்முதலாக திருமயிலைக்குச் சென்று கற்பகவல்லியின் பொற்பதங்கள் பணியும் வாய்ப்பு. மதுரை வழக்கம் போல் கோவிலுக்குள் நுழைந்தவுடன் நேரே அம்மன் சன்னிதிக்குள் நுழைந்தேன். மதுரையில் கொஞ்சம் உள்ளே சென்றால் தான் மரகதவல்லியைத் தரிசிக்க இயலும். இங்கோ சன்னிதி வாசலில் கால் வைத்தவுடனேயே பளீரென்று கற்பகவல்லியின் திருவுருவ தரிசனம். நேரில் அவள் நின்று சிரிப்பதைப் போல் ஒளி வீசும் காட்சி. ஒரு நிமிடம் திகைத்து சன்னிதி வாசற்படியிலேயே நின்று விட்டேன். சுதாரித்து உள்ளே சென்று அவளைத் தரிசித்து அந்தத் திகைப்பு மாறாமலேயே கபாலிநாதனைக் காணச் சென்றேன்.

அதன் பின் பல முறை கற்பகத்தைத் தரிசிக்கச் சென்றாலும் அன்று முதன்முதலில் கிடைத்த காட்சி கிடைக்கவில்லை. அடுத்த முறை செல்லும் போதாவது அன்னை அருளுகிறாளோ பார்ப்போம்.

காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா
கல்யாணியே கற்பகமே அற்புத (காட்சி)

மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திடக் கனிவுடன்
மன்றிலே நின்று ஆடும் அம்பலவாணருடன் (காட்சி)

அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயே
ஆனந்த மாமலையில் தேமதுரக் கனியே
மங்கலக் குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையே
மரகத மயில் உருவத் தேவியே தவத்திரு (காட்சி)




பாடியவர்: சுசீலா
மின் தொகுப்பு: தெய்வீக இசை மலர்

ஓம் ஓம் ஓம் !


சிம்ம வாஹினி காந்த ரூபிணி சத்ய ஜோதிநீ
ஓம் ஓம் ஓம்!
சண்டி காளி நீ கமல வாசினி கர்ம நாசினி
ஓம் ஓம் ஓம்!

நெற்றிக் கண்ணிலே நெருப்பை உமிழ்ந்தபடி
நீலியாக வந்து நின்றவளே!
பற்றிக் கொண்டவரின் துயரம் போக்கவே
சூலமேந்தி பகை வென்றவளே!

பகைவர் நடுங்கவே பதினெண் கரங்களில்
படைக்கலம் தாங்கி வந்தவளே!
உலகம் உய்யவே ஊழிக்காற்று போல்
உக்கிர வேகம் கொண்டவளே!

கொடிய அசுரரைக் குத்தி கிழித்து அவர்
உதிரம் உறிஞ்சியே களிப்பவளே!
பணியும் அடியவர் பாவந் தொலையவே
கனிந்த அன்பினை அளிப்பவளே!

அணிகள் ஜொலித்திருக்க சிலம்பும் ஒலித்திருக்க
அரனுடன் திருநடம் இடுபவளே!
கணங்கள் சூழ்ந்திருக்க நிதமும் புகழ்ந்திருக்க
கயிலை நாதனுடன் திகழ்பவளே!

உள்ளம்ஒன்றி தினம் உந்தன் நாமந்தனை
ஓதும் அன்பினிலே மகிழ்பவளே!
வெள்ளம் போலப்பொங்கி பெருகும் கருணையினால்
விரைந்து ஓடிவந்து அருள்பவளே!

துக்கம் அகற்றவே துர்க்கை வடிவிலே
தோற்றம் கொண்டுவந்த தூயவளே!
பக்கம்நின் றெம்மைக் காக்க வேண்டியே
பாதம் பணிகின்றோம் பூமகளே!!


--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரலில் - நன்றி தாத்தா!

Wednesday, September 23, 2009

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!


கலையாத கனவுகளின் நினைவான நிலவொளியே

அலையாடும் நெஞ்சிற்கு ஆறுதலாய் வருபவளே

மலையரசி பெற்றெடுத்த மாதவத்தின் பெரும்பயனே

குலையாத பேரெழிலின் அழியாத நித்தியமே

வலையாடும் வேல்விழியால் வண்ணத்தை இறைப்பவளே

நிலையாக என்நெஞ்சில் நின்றாடும் சுந்தரியே

சிலையாக நின்றென்னைச் சித்தம் குலையச் செய்பவளே

கலையாவும் பயிலவைக்கும் கருத்தான துர்க்கையளே ! 1


உனையெண்ணிப் பாடிவரும் அடியவரின் துயர் தீர்ப்பாய்

உனையன்றி வேறில்லை என்பவரை உயர்த்திடுவாய்

உன்னருளால் இயங்குகிறேன் உலகாளும் தூயவளே

உன்பெருமை பாடுகிறேன் உத்தமியே சுந்தரியே

உன்கண்ணின் ஒளியாலே என்வாழ்வு சிறக்குதம்மா

உன்கைகள் அணைப்பாலே என்மேனி சிலிர்க்குதம்மா

உன்னைப்போல் ஓர்தெய்வம் உலகினில்நான் கண்டதில்லை

உண்மையிது சொல்லிவைத்தேன் உண்மையே நீதானம்மா! 2


ஏனென்று கேளாமல் என்னுள்ளே நீ புகுந்தாய்

தானாக வந்தென்னில் தணியாத சுகம் தந்தாய்

ஊனாடும் உயிரெல்லாம் நிறைந்தங்கே ஒளிசெய்தாய்

மீனாடும் கண்ணாலே மனதினிலே நிறைந்துவிட்டாய்

தேனூறும் சொல்லாலே தித்திக்கும் தமிழ்தந்தாய்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியானாய்

நானாக நானில்லை என்னுமோர் நிலைதந்தாய்

பூணாரம் பூண்டவளே பொன்மகளே துர்க்கையம்மா! 3


மலையமான் மகளாகி மறையோனுக்காய்த் தவமிருந்தாய்

கலையாத பக்தியுடன் ஊசிமுனைத் தவமிருந்தாய்

தலையாடும் கிழவனாகச் சிவன்வரவே நீசிரித்தாய்

பிழையான மொழிபேசும் விருத்தனையே நீசினந்தாய்

பிறழாத பணிவுடனே பணிவிடைநீ செய்திருந்தாய்

அழகான தன் தோற்றம் சிவன்காட்ட நீமகிழ்ந்தாய்

மனங்கொண்ட மணவாளன் மனம்மகிழ மணமுடித்தாய்

எனையாளும் தாய்நீயே என்றென்றும் எனைக்காப்பாய்! 4


பாற்கடலில் நீயுதித்துப் பரந்தாமன் மனையானாய்

ஆர்ப்பரிக்கும் அலைகடலில் அழகே நீ நிதியானாய்

மாலவனின் மார்பினிலே குடியிருக்கும் மங்கையானாய்

சூலம் ஏந்தியேநீ மஹிஷசுர மர்த்தினியானாய்

விஷ்ணு மாயையாய்நீ மாலினைத் துயிலெழுப்பினாய்

மதுகைடப வதம்செய்த மனோஹரியும் நீயம்மா

வணங்கிவரும் அடியவரின் மனதுறையும் பொருள் நீயே

நனியனேன் என்னையும் காப்பதுவுன் கடனம்மா! 5


சொல்விளக்கும்பொருளானாய் சொல்விளக்கமே நீயானாய்

பல்லோரும் போற்றிடவே பார்புகழும் உருவானாய்

கல்லார்க்கும் கற்றார்க்கும் காட்டு மறைப்பொருளானாய்

எல்லாமும் நீயாகி மஹா ஸரஸ்வதியாய்த் திகழ்ந்தாய்

பல்வினைக்கும் சொந்தமானக் கொடியவரை வதம் செய்தாய்

வல்வினையால் வருந்துவோரின் துன்பமெல்லாம் நீ துடைத்தாய்

கல்விக்கே அதிபதியாய் கலைமகளெனும் பேர்பெற்றாய்

சொல்லாலே துதிக்கின்றேன் தூயவளே காத்திடம்மா! 6


ஏழுலகும் போற்றுகின்ற எங்கள்குல நாயகியே

ஏழ்கடலும் வற்றச்செய்யும் ஹூங்காரம் கொண்டவளே

ஏழுதலை நாகமுன்றன் முடிமேலே ஆடுதம்மா

ஏழுசுரம் பாடிவரும் இன்னிசையின் நாயகியே

ஏழ்முனிவர் கைதொழுதுன் அடிபோற்றி வந்தாரம்மா

ஏழேழு பிறவிக்கும் என்றன் துணையானவளே

ஏழ்நிலையில் வீற்றிருந்து யோகியர்க்கு அருள்பவளே

ஏழையெனைக் காத்திடவே எழுந்தோடி வாருமம்மா! 7


எட்டுத்திக்கும் புகழ்மணக்கும் ஏகாம்பரி நாரணியே

எட்டாக்கனியாக எங்கிருந்தோ அருள்பவளே

எட்டியுன்னைக் கண்டிடவோ எனக்குள்ளே தெரிபவளே

எட்டிரண்டு கைகள் கொண்ட எனையாளும் துர்க்கையளே

எட்டிவரும் துன்பங்கள் எனைவருத்தச் செய்யாதே

எட்டாத இன்பங்கள் எனக்கிங்கே இனிவேண்டாம்

எட்டியுன்றன் கால்பிடித்தேன் எனையேற்றுக் கொள்ளம்மா

தட்டாதிப் பாலகனைப் பரிந்தேற்றுக் கொள்ளம்மா! 8


நவமணியே! நவநிதியே! நல்லோரின் துணை நீயே!

நவாவரண நாயகியே! நினைத்தபோது வந்திடுவாய்!

நவயோக சுந்தரியே! நாடுமன்பர் நலம்சேர்ப்பாய்!

நவகோண நாயகியே! நாளுமின்பம் கூட்டிடுவாய்!

நவநவமாய்ப் பொலிபவளே! நெஞ்சினிலே நீயிருப்பாய்!

நவதுர்கை நாயகியே! நோய்பிறப்பு தீர்த்திடுவாய்!

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!

நவராத்ரியில் நினைப்பணிந்தேன்! நல்வரம்நீ தருவாயம்மா! 9

*************************************


Tuesday, September 22, 2009

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே! அம்மா ஊஞ்சல் ஆடுகவே!

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா ஊஞ்சல் ஆடுகவே
ஆதிபராசக்தி ஆடுகவே
அன்பரின் இதயத்தில் ஆடுகவே

ஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டு
ஆசையெனும் மலர் மெத்தையிட்டு
ஆடிட உன்னையே அழைத்து நின்றோம்
அம்மையே ஊஞ்சல் ஆடுகவே (ஆடுக)



காசிபெருநகர்க்கதிபதியே
காஞ்சியிலே வளர் தவநிதியே
காஞ்சனமாலை திருமகளே
காசினி சிறக்கவே ஆடுகவே (ஆடுக)

நல்லதும் தீயதும் நீ ஆனாய்
இல்லதும் உள்ளதும் நீ ஆனாய்
நாதமும் கீதமும் நீ ஆனாய்
நானிலம் போற்றிட ஆடுகவே (ஆடுக)

Saturday, September 19, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 9&10

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 9&10

1&2 3 ,4,&5 6,7&8


நவநாயகியரின் நிறைவு அம்சமாய் விளங்கும் அன்னையின் தரிசனம் இங்கே! அனைத்துக்கும் ஆதிகாரணி துர்க்கை என்பதால் அவளது பெயரை நான்காம் அடியிலும், அம்சத்தின் பெயரை இறுதி அடியிலும் வைத்தேன். முதல் நான்கு அடிகளில் அன்னையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும், அடுத்த நான்கு அடிகளில் அவளது தோற்றமும் சொல்லப்பட்டிருக்கின்றன. யாவினும் நலம் சூழ்க!


9. ஸித்திதாத்ரி தேவி:



சுந்தரி சங்கரி சுலப சந்தோஷிணி சுரமுனி பணிந்திடும் சூலியளே

அசுரரை மாய்த்து ஆணவம் தொலைத்து அடியரைக் காத்திடும் அன்னையளே


அணிமா,மஹிமா,கரிமா,லகிமா,ப்ரபத்தி,ப்ரகாம்யா,ஈசித்வ, விசித்வா ஆனவளே


அட்டமாசித்தியை சிவனில் பாதியாய்ச் சேர்ந்தே வழங்கிடும்
துர்க்கையளே!

ஸித்திதாத்ரி எனப் பெருமைபெற்றிடும் பேரெழில் கொண்ட தேவியளே


தாமரைமலர்மேல் சிம்மத்தில் அமர்ந்து அருள்மழைபொழியும் புண்ணியளே


சங்கொடு சக்கரம் கதையும் கமலமும் கைகளில் தாங்கிடும் சதுர்புஜளே


நவநாயகியரில் ஒன்பதாம்நாளின்று
ஸித்திதாத்ரிதேவி தாள் பணிந்தேன்! [9]


ஸ்ரீ மஹா துர்கா!:

நவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு

நவநவமாய்ப் பல இன்பங்கள் அளித்து நாளும் நன்மையே புரிபவளே


நவநாயகியாய் நானிலம் தழைத்திட நல்லருள் புரிந்திட வந்தவளே


நவசக்தி ரூபமாய் நல்லோரைக் காத்து நாதரூபமான
துர்க்கையளே!

நவரசம் ததும்பிடும் நன்முகம் கொண்டிங்கு நாளும் என்னுடன் நிற்பவளே

நவரத்ன ஜோதியாய் நெஞ்சினில் நிறுத்திடும் அடியவருயர்ந்திடச் செய்பவளே


நவராத்திரியில் கொலுவினிலமர்ந்து நன்மைகள் புரிந்திட வருபவளே


நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே
துர்க்கையின் தாள் பணிந்தேன்!
[10]



நாயகியை மனதில்வைத்துப் போற்றிவரும் இம்மாலையில்

சொற்குற்றம் பொருட்குற்றம் அத்தனையும் நீ பொறுத்து

நாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வழங்கிடவே

அன்னையுன்றன் அடிபணிந்தேன் தாழ்ந்து.


நவநாயகியர் நற்றமிழ்மாலை நிறைவுற்றது
.

பொங்கும் மங்களம் எங்கினும் தங்குக!


ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! *****************************************************************

[அன்னையைப் பற்றி எழுதவேண்டும் என்னும் ஆர்வம் ஒன்று மட்டுமே இதன் பின்னணி! இலக்கணப் பிழைகள் இருக்கக்கூடும். ஆர்வலர்கள் பொறுத்தருள்க!]

பின்னிணைப்பு:

என்ன காரணமெனத் தெரியவில்லை இந்த நவநாயகியர் எனக்கருள் செய்ய வந்தது! இந்தப் பதிவை இட்டு முடித்தபின், என் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க துர்கை பற்றிய எதையோ தேடப்போய், என் கண்ணில் இது பட்டது. என்னவெனத் தெரியாமலேயே, பார்க்க ஆரம்பித்ததும் என்னையறியாமல் ஒரு பரவசம்! என்னவென்று நீங்களும் பாருங்களேன்! நான்கே நிமிடங்கள்தான் இது!

ஜெய் தேவி துர்கா!

http://www.youtube.com/watch?v=AXx6vBKEnCk&feature=channel_page



பொங்கும் மங்களம் எங்கினும் தங்குக!


ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா!

*****************************************************************



"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 6,7& 8

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 6,7& 8

1&2 3,4 & 5

இன்று அடுத்து மூன்று நாயகியரின் தரிசனம்! அடுத்தடுத்து இடுவதன் காரணம், அனைவரும் சீக்கிரமே முழு மாலையயும் அன்னைக்கு அணிவித்து மகிழவே!

6. காத்யாயனி மாதா:

மாயாவுலகினில் மக்களைக் காத்திட மகிழ்வுடன் அருளிடும் மலைமகளே

ஓயாவுலகினில் நீயே இரங்கி மகளாய்ப் பிறந்திட வந்தவளே

தாயே தனக்கு மகளாய் வந்திடத் தவம்புரிந்தவர்க்கு அருளியவளே

காத்யாயனர்க்கு மகளாய்ப் பிறந்து காட்டினில் வாழ்ந்திட்ட துர்க்கையளே!

காத்யாயனியாய் மஹிஷனை அழித்திடக் கருணைகொண்டிட்ட வனமகளே

வாளும் கமலமும் இடக்கரம் தாங்கி சிம்மத்தில் அமர்ந்திடும் சூலியளே

அபயமும் அருளும் வலக்கரம் தாங்கி மூவரும் போற்றப்போர் புரிந்தவளே!

நவநாயகியரில் ஆறாம்நாளின்று காத்யாயனியின் தாள் பணிந்தேன்! [6]



7. காலராத்ரி மாதா:


கோரபயங்கரி கரியநிறத்தினி கண்டவர்நடுங்கிடும் காளியளே

தலைவிரிகோலமாய்க் கழுதையிலேறிக் கொடியரை விரட்டிடும் சூலியளே

கண்களைப் பறித்திடும் மின்னொளிவிளங்கிடும் மாலையைக்கழுத்தினில் அணிந்தவளே

விண்ணுயர்நின்று வீணரைச் சாய்த்திட வேகமாய் வந்திடும் துர்க்கையளே!

காலராத்ரியெனும் பெயரினைக் கொண்டு காலத்தை வென்றிட்ட மாயவளே

முட்கதை, கத்தியை இடக்கைகள் கொண்டு அருளும் அபயமும் அளிப்பவளே

வெளிவிடும் மூச்சினில் தீச்சுவாலையுடன் கழுதையில் வலம்வரும் முக்கண்ணளே

நவநாயகியரில் ஏழாம்நாளின்று மஹாகாலராத்ரி தாள் பணிந்தேன்! [7]



8. மஹாகௌரி மாதா:


சிவனைச்சேர்ந்திடச் சீரியதவம்செய்து ஊசிமுனையினில் நின்றவளே

தவத்தினில் மகிழ்ந்திட்ட சிவனைக் கண்டு களிப்புடன் சென்றே அணைத்தவளே

சிவனே நடுங்கிடும் கரியவுருவினை மேனியில்கொண்டு எழுந்தவளே

கங்கையின் புனிதம் கருநிறம்கரைத்திட பூரணவொளியான துர்க்கையளே!

எருதுமேலமர்ந்து சூலம் டமரு கைகளிலேந்தி வெண்ணிற ஆடை உடுத்தவளே

என்றுமிளமையாய் எட்டுவயதினளாய் இன்னல்கள் தீர்த்திடும் தூயவளே

அசுரரை அழித்திட அனைவர்க்கும் அருளிய அஷ்டமஹாதேவி துர்க்கையளே

நவநாயகியரில் எட்டாம்நாளின்று மஹாகௌரிமாதா தாள் பணிந்தேன்! [8]


***********************

[நவநாயகியர் உலா நாளை நிறைவுறும்!]

ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா!

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 3, 4 & 5

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 3, 4 & 5

[1&2]

இந்த நவநாயகியரைப் பற்றிய குறிப்புகள் அன்பர்கள் கேட்டிருக்கிறார்கள். காசியில் இவர்கள் அனைவருக்கும் தனித்தனியே ஆலயங்கள் இருக்கின்றன என இந்த வரைபடம் சொல்கிறது. மேலும் கோவா அருகில் ரேடி என்னும் ஸ்தலத்தில் நவதுர்கா அன்னைக்கான ஒரு புராதன ஆலயம் இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் அமைந்த ஆலயம் எனக் குறிப்பு கூறுகிறது. இதற்கான வலைத்தளத்தில் பல உபயோகமான தகவல்கள் இருக்கின்றன.
இப்போது அடுத்த மூன்று நாயகியரைத் தரிசிக்கலாம். பாடலைக் கவனித்தால், அந்த அன்னையின் அம்சங்கள் அதில் சொல்லப்பட்டிருப்பதைக்
காணலாம்.

3.சந்த்ரகண்டா மாதா:



கொடுமைகள் புரி
ந்த அரக்கரைவென்றிட அமரர்கள் துதிக்க மகிழ்ந்தவளே

மாயையின் ஆணையால் மாதுயில் கொண்ட மாதவனை அன்று எழுப்பியவளே

மதுகை டபவதம் செய்திடவெண்ணி மஹா மாயையாய்த் திகழ்ந்தவளே

மன்னுயிர் போற்றிட விண்ணவர் வாழ்த்திட வெற்றியைக் கொடுத்திட்ட துர்க்கையளே!


மணிபோல் விளங்கும் சந்திரவடிவை நுதலில்கொண்ட சந்திரகண்டாஅன்னையளே


வில்லும் அம்பும் சூலமும் வாளும் கதையும் ஐங்கரம்கொண்ட தசக்கரளே


ஜெபமாலை
யுடன் தாமரை கமண்டலம் முக்கரம்கொண்டு அபயமும் அருளும் முக்கண்ணளே

நவநாயகியரில் மூன்றாம்நாளின்று சந்திரகண்டாமாதா தாள் பணிந்தேன்! [3]



4. கூஷ்மாண்டா தேவி:

காரிருள்சூழ்ந்த அண்டத்துள்ளிருந்து பேரருள் கொண்ட திருமகளே

அண்டத்தைப் பிளந்து பிண்டத்தை அளித்து உலகினைப் படைத்திட்டப் பரம்பொருளே


பொன்னிறமேனியில் துலங்கிடும் முகவருள் கொண்டெனைக் காக்கும் தூயவளே


அண்டசராசரம் அனைத்துக்கும்காரணி ஆகியகோள
மாம் துர்க்கையளே!

கூஷ்மாண்டா எனும் பெயரினைக் கொண்டு சிம்மத்தின் மீது அமர்பவளே


வில்லும் அம்பும் கதையும் சக்ரமும் நான்குகைகளினில் கொண்டவளே


கமலமும் மாலையும் கமண்டலமும்கொண்டு அமிர்தகலசம் கொள்ளும் அஷ்டபுஜளே


நவநாயகியரில் நான்காம்நாளின்று கூஷ்மாண்டாவின் தாள் பணிந்தேன்! [4]



5. ஸ்கந்த மாதா:

பக்திசெய்தேவர் துயர்தீர்த்திடவே பரமனைவேண்டிடச் செய்தவளே

சிவனி
ன் தீப்பொறி ஆறையும் ஆற்றினில் ஒன்றாய்ச் சேர்த்திட்ட தாயவளே

அன்புடன் அணைத்து அறுமுகனையொரு முருகனாய்க் கொண்ட உமையவளே


வீணரை வென்றிட சேயினைப்பணித்து வேலினைத்தந்திட்ட துர்க்கையளே!


ஸ்கந்தமாதாவெனச் சிம்மத்திலமர்ந்து குமரனைமடியினில் கொண்டவளே


மேல்வலக்கையினில் குமரனைக் கொண்டு மேலிடக்கையினால் அருள்பவளே


மற்றிருகைகளில் தாமலைமலரினைத் தாங்கியே அருள்தரும் சதுர்புஜளே


நவநாயகியரில் ஐந்தாம்நாளின்று ஸ்கந்தமாதாவின் தாள் பணிந்தேன்! [5]
*************************

[நவநாயகியர் உலா இன்னும் வரும்!]

ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா! ஜெய்தேவி துர்கா!

Friday, September 18, 2009

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" - 1&2

"நவநாயகியர் நற்றமிழ்மாலை" 1&2

நவராத்ரியில் பொதுவாக நாமனைவரும் துர்கா, லக்ஷ்மி ஸரஸ்வதி எனும் முப்பெரும் தேவியரை வணங்குதல் மரபு. இவர்கள் மூவரும் முறையே சிவன், திருமால், பிரம்மா எனும் முக்கடவுளரின் சக்தியாக விளங்குவர். அருள்மிகக் கொண்ட லோகமாதா, தன் கருணையினால் இந்த தேவியரின் உள்ளிருந்து இயக்க இன்னும் மூன்று சக்திகள் பிறந்தன. இவையே நவராத்ரி நாயகியர் எனத் துதிக்கப்படும் சக்தியின் ஒன்பது அம்சங்கள். ஸ்ரீ மஹா துர்க்கையின் ஒன்பது அம்சங்களான இந்த நவராத்ரி நாயகியரின் குணச்சிறப்புகளைப் போற்றித் துதிக்கும் விதமாக இந்த 'நவநாயகியர் நற்றமிழ்மாலை' என்னும் துதிப்பாடலை இங்கு அளிக்கிறேன். மங்களமான இந்த நவராத்திரி நன்நாளில் இதனைதினந்தோறும் படித்து அவளருள் பெற அனைவரையும் வேண்டுகிறேன்.

எதை எழுதுவது எனத் திகைத்திருந்த வேளையில் தனது இந்த அம்சங்களை எனக்குக் காட்டியருளிய என் தாயின் கருணையைப் போற்றி, அவள் திருக்கமலங்களில் இதனைச் சமர்ப்பிக்கின்றேன். இவற்றுள் ஒரு அம்சம் ஸ்கந்த மாதா என்பது என் மனதுக்கு இனிமையாயிருந்தது!
ஒருநாள்விட்டு ஒருநாளாய் இந்தப் பதிவுகள் வரும். அந்தந்த நாட்களுக்கு உரிய தேவியைத் துதித்து அருள்பெற அழைக்கிறேன்! முருகனருள் முன்னிற்க, யாவினும் நலம் சூழ்க!


"நவநாயகியர் நற்றமிழ்மாலை"

'காப்பு'
மங்களஞ்சேர் நவநாயகி மன்னுபுகழ் பாடிடவே
பொங்குதமிழ்ச்சொல்லெடுத்துப் புகழ்மாலை சூட்டிடவே
தங்குதடை ஏதுமின்றிப் புகழ்பரதம் எழுதிட்ட
ஐங்கரனே நின்னடியே காப்பு.

1. ஷைலபுத்ரி தேவி:

சுகுண மனோஹரி சுந்தரன் நாயகி சீவனைக் காத்திடும் தேவியளே
புவனங்கள் யாவையும் படைத்திடச் சிவனைத் தேடியே கலந்திடும் உமையவளே
மோஹனப்புன்னகை வீசிடும் முகத்தினில் மூக்குத்தி ஜொலித்திடத் திகழ்பவளே
வாவென அழைத்திடும் பக்தரைக் கண்டிடப் பாகென உருகிடும் துர்க்கையளே!
ஹிமவான் மகளாய் மலையினில் பிறந்து ஷைலபுத்ரியென அருள்பவளே
சிவனை அடைந்திடக் கடுந்தவம்செய்து சிவமும் அசைந்திடச் செய்தவளே
மூலாதாரத்தில் உன்னிடும் பக்தரை மேலேகொண்டு செல்பவளே
நவநாயகியரில் முதல்நாளின்று மஹாஷைலபுத்ரி தாள் பணிந்தேன்! [1]

2. ப்ரஹ்மசாரிணி மாதா:பிரமனின்மகனாம் தக்ஷனின்மகளாய்ச் சிவனை மணம்செய்து கொண்டவளே
சிவனைமதியாச் சிறுமதியோனைச் சீற்றம்பொங்கிடப் பார்த்தவளே
சொல்மதிகேளா தக்ஷனைச் சபித்துத் தீயினில் மறைந்த தூயவளே
ஹிமவான் மகளாய் மலைமடி தவழ்ந்த பேரெழில்கொண்ட துர்க்கையளே!
பிரஹ்மசாரிணியாய்க் கடுந்தவம்புரிந்து சிவனை அசைத்திட்ட தாயவளே
ஸ்வாதிஷ்ட்டானத்தில் இருந்திடும் அடியவர் வேண்டியநல்கும் மாயவளே
தைரியம்,வீரம் அறிவினில்தெளிவு அனைத்துக்கும் நீயே காரணியே
நவநாயகியரில் இரண்டாம்நாளின்று ப்ரஹ்மச்சாரிணியின் தாள் பணிந்தேன்! [2]

********************
[நவநாயகியர் உலா தொடரும்]

Monday, September 14, 2009

புரியவில்லை...

அம்மா என் துயரம்
எப்போது முடிந்திடுமோ - இல்லை
முடியாத இரவாகி
விடியாமல் போய்விடுமோ?

விதி என்னும் நீர்ச்சுழிக்குள்
வசமாக அகப்பட்டேன்
ஒன்று முடிந்த பின்னும் நான்
மற்றொன்றில் உழலுகிறேன்

காட்டாற்றில் அகப்பட்டு
கதியற்றுச் செல்லுகிறேன் - உன்
மாயத்தின் கைப்பிடிக்குள்
மயங்கிச் சுழலுகிறேன்

சுழல் விட்டு வெளிவந்தால்
நீ வருவாய் என்கின்றார்
இது என்ன நியாயமோ
எனக்குப் புரியவில்லை

மூழ்காமல் காத்திடுதல்
உந்தன் பொறுப்பில்லையோ
கைகொடுத்துக் கரைசேர்க்கும்
கருணை உனக்கில்லையோ??


--கவிநயா

Monday, September 7, 2009

காத்தருள்வாய் அம்மா!

முன்னை வினையும் இம்மை வினையும்
மத்தாய் என்னைக் கடைகிறதே
வெண்ணெய் என நீ திரண்டு வந்து
என்னைக் காத்து அருள்வாயே

பொம்மையைப் பார்த்து அன்னையை மறந்த
பிள்ளை யாக ஆனேனே
மாயை விலக்கி மருளை நீக்கி
என்னைக் காத்து அருள்வாயே

அறியாத சிறு பிள்ளை நானே
தவறுகள் பலவும் செய்தேனே
அறியாமை எனும் இருளை நீக்கி
என்னைக் காத்து அருள்வாயே

உள்ளே உறையும் உன்னை மறந்து
உயிர் நோக அலைகின்றேனே
உந்தன் உண்மை உணர வைத்து
என்னைக் காத்து அருள்வாயே!


--கவிநயா