Monday, August 24, 2020

உன் மணம்

 

மனமெல்லாம் அம்மா உன் மணம் வீசுதே

உளமெல்லாம் உன் புகழைத் தினம் பேசுதே

(மனமெல்லாம்)

 

நிலவெனும் உன் வதனம் நினைவினில் உலவிடும்

கருவிழிக் கருணையில் மனம் தினம் நனைந்திடும்

(மனமெல்லாம்)

 

வருவதும் போவதும் இல்லாமல் போகட்டும்

இன்பமும் துன்பமும் ஒன்றென ஆகட்டும்

நானெனும் அகங்காரம் உள்ளம் விட் டோடட்டும்

இருப்பதும் நிலைப்பதும் உன்நினை வாகட்டும்

(மனமெல்லாம்)


--கவிநயா


Monday, August 17, 2020

வேண்டும்!

 

பற்று மிக வேண்டும், உன்றன்

பாதத்திலே வேண்டும்

பாசம் மிக வேண்டும், உன்றன்

நேசத்திலே வேண்டும்

 

சொந்தம் மிக வேண்டும், நீயென்

அன்னையென வேண்டும்

பந்தம் மிக வேண்டும், நானுன்

பிள்ளையென வேண்டும்

 

செல்வம் மிக வேண்டும், உன்றன்

பக்தியிலே வேண்டும்

கல்வி மிக வேண்டும், உன்றன் நாமம்

கற்பதிலே வேண்டும்

 

இன்பம் மிக வேண்டும், உன்னை

எண்ணுவதில் வேண்டும்

துன்பம் மிக வேண்டும், உன்னை

எண்ணா விட்டால் வேண்டும்

 

கண்ணீர் மிக வேண்டும், உன்னைக்

காணா விட்டால் வேண்டும்

பேரானந்தம் வேண்டும், உன்னைக்

காண்பதிலே வேண்டும்


--கவிநயா


Tuesday, August 11, 2020

அழகு முகம்

 

அழகு முகம் காண ஆவல் கொண்டேன்

பழகு தழிழ்ப் பாடல் பாடி வந்தேன்

பாற்கடல் மாதவன் சோதரியே

பரமசிவனின் ப்ரிய பார்வதியே

(அழகு)

 

சங்கரி சௌந்தரி நிரந்தரியே

சதுர்முகியே எழில் சியாமளையே

சந்ததமுன் புகழ் பாடுகின்றேன்

சிந்தையிலே வந் தெழுந்தருள்வாய்

(அழகு)

 

நாயகி நான்முகி நாரணி நீயே

நான்மறை போற்றும் நன்மணி நீயே

ஆதி அந்தம் இல்லா ஜோதியும் நீயே

அகிலத்தைக் காத்திடும் அன்புத் தாயே

(அழகு)


--கவிநயா



Monday, August 3, 2020

அருகில் வா அம்மா


அன்புத் தாயே அருகினில் வாயேன்

உன்னை எண்ணி நாளும் உருகிடும் நிலை தாயேன்

(அன்புத்)

 

வான் பொழியும் மழை வையத்தை நனைப்பது போல்

உனதருள் மழையாலே என் இதயம் நனைக்க

(அன்புத்)

 

அழகிய திருவதனம் முழுமதி யெனத் துலங்க

அஞ்சேல் அஞ்சேலென்று அபயக் கரம் விளங்க

தந்தேன் நிழலென்று தண்டை யொலி முழங்க

சென்றேன் சென்றேனென்று வல்வினைகள் மலங்க

(அன்புத்)


--கவிநயா