Monday, February 28, 2011

திருவடி மலரினை...


திருவடி மலரினை மனவண்டு சுற்றும்
மறுபடி மறுபடி மலரடி பற்றும்
அவளடி எழிலினில் மயங்கிடும் சித்தம்
இணையடி நிழலினை நாடிடும் நித்தம்

கிண்கிணிச் சலங்கைகள் எங்கெங்கும் ஒலிக்கும்
பொன்மணி பாதங்கள் பூக்களைப் பழிக்கும்
வெண்பிஞ்சுப் பதங்களை வேதங்கள் துதிக்கும்
தண்மலர் திருவடி நெஞ்சினில் இனிக்கும்

பொன்னடி போற்றிட பைங்கிளி வருவாய்
கண்மணியே என்றன் கருத்தினில் நிறைவாய்
உன்புகழ் பாடிட திருவருள் புரிவாய்
ஒவ்வொரு நொடியுமென் உள்ளத்தில் உறைவாய்


--கவிநயா

Thursday, February 24, 2011

தாயே, உன் பையன்...


ஆற்று வெள்ளம், நாளை வரத்
தோற்றுதே குறி - அம்மா
கண்ணில் வெள்ளம், நித்தம் வரக்
குறி சொல்வாயோ?

தாயி என்று, கால் பிடித்துக்
கெஞ்சும் பிள்ளையை - இன்று
நோக வைத்து, நொங்க வைத்து
நடம் புரிவாயோ?
--------------------------------------

பிறந்த வீட்டில், பட்டாம் பூச்சி
போலப் பறந்தேன் - என்னைப்
பிடித்து வந்துன், பிள்ளை வீட்டில்
வளர்த்த ஈஸ்வரி...

குன்றில் உந்தன் பிள்ளை யவன்
கோவித்துக் கொண்டால் - மனம்
கொஞ்சமும் இரங்கான் இதைச்
சொல்ல வில்லையே!
--------------------------------------

மக மாயி உன்னை நம்பி வந்த
பெண்ணைப் பாரடி!
குக தாயி எந்தன் கண் துடைக்க
கை வரல்லையோ?

அரங்க நகர் அப்பன் அங்குச்
சோறு ஊட்டுவான் - இங்கே
இரங்க யாரும் எனக்கில்லை
அஞ்சொல் நாயகீ!
------------------------------------

ஆதி மூலம், என்றே அன்று
ஆனை பிளிற - அப்பா
ஓடி வந்தார், அங்குச் சொல்ல
மனம் வரல்லையே!

ஏது பிழை செய்திடினும்
இந்த வீட்டிலே - அம்மா
பக்கத் துணை நீ ஒருத்தி
நீ ஒருத்தியே!
-------------------------------

ஆதி சக்தி வீட்டில் எந்தன்
நாதி கிடக்கும் - என்
மீதி உயிர் மீது அவன்
பார்வை பிறக்கும்!

கந்தன் மனக் கல் உருகும்
காலம் வரைக்கும் - உன்
தோளே கதி, தாளே கதி
தோகை மயிலே! - அம்மா....

தோளே கதி, தாளே கதி...
கற்பகாம்பிகே!!!

Monday, February 21, 2011

உன்னை நினைந்து...


உன்னை நினைந்து உருகும் உள்ளத்தில்
குடியிருப்பாய் அம்மா
தன்னை மறந்து தாய் உன்னைப் பாடிட
அருள் புரிவாய் அம்மா

மின்னற் கொடிபோல் வடிவழகுடைய
அன்னைஉன் பெருமைகளை
கன்னல் மொழியாம் தமிழினில் பாட
அருளிடுவாய் அம்மா

உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில்
நீயும் உறைந்தாயே
உழலும் உயிர்களை உய்வித்திடவே
கருணை வைத்தாயே

என்சிற் றறிவுக்கு சிறிதும் எட்டாத
பரம்பொருளே உமையே
சிற்றெறும்பானாலும் அருள் தருவாய் உன்
கருணைக் கிணைஇலையே

விதிக்கிடைப் பட்டு வலிபல பெற்று
வாடுகின்றேன் அம்மா
உன்விழிக்கடைப் பார்வை என்மேல் பட்டால்
வாழ்ந்திடுவேன் அம்மா

ஆயிரம் கண்களில் கருணைக் கடலை
ஏந்தி நிற்கும் அம்மா
அந்தக்கருணையில் ஒருதுளி என்திசை தெறித்திட
ஏங்குகிறேன் அம்மா

உன்திருவடியில் ஒருதுகளாய் நான்
கிடந்திட வேண்டும் அம்மா
உன்மலரடிகளை மறவா மல்நான்
இருந்திட வேண்டும் அம்மா


--கவிநயா

Friday, February 18, 2011

மீனாக்ஷி நீ ஆதரி!


காத்யாயனி கதம்ப வனவாசினி கடைக்கண் பாரம்மா..
எனை பார்த்தலும் பாரமா? இக்ஷனமே..

சோதனை தாளேன் கோவிந்தன் சோதரி
மீனாக்ஷி நீ ஆதரி.. இக்ஷணமே..

தஞ்சம் எனவந்து கெஞ்சும் பஞ்சைக்கு
கஞ்சப் பூம்பதத்தின் கொஞ்சும் பொன்கொலுசு
அஞ்சேல் அஞ்சேல் என செஞ்சொல்லை கூறாதா?
நெஞ்சின் சஞ்சலம் தீராதா? இக்ஷணமே..

--சங்கர்

பி.கு.: பார்த்தோன்னே தெரிஞ்சிருக்குமே என் பாட்டு இல்லைன்னு? :) அவ்ளோ சூப்பரா இருக்கு, அவள் மேலான சங்கரின் முதல் பாடல்! அவர் பூர்வி கல்யாணி ராகத்தில் அமைச்சிருக்காராம். அவர் அனுப்பின பிறகு அதையும் சேர்த்துடுவோம் -- கவிநயா

சுப்பு தாத்தா தோடி ராகத்தில் விருத்தமாக அமைத்திருக்கும் அழகைக் கேட்டு மகிழுங்கள்!

Monday, February 14, 2011

சொல்லனைத்தும் இனிக்குது!


சொல்லனைத்தும் இனிக்குதடி சுந்தரியே
உன்னைச் சொல்லிச் சொல்லிப் பாடப் பாட சுந்தரியே
கள்ளெடுத்துக் குடித்ததுபோல் சுந்தரியே
ஒரு களிமயக்கம் வருகுதடி சுந்தரியே

தெள்ளுதமிழ் சொல்லெடுத்து
தேவியுன்னை பாடிடுவேன்
துள்ளும்இசைச் சரம்தொடுத்து
நாளுமுன்னை வாழ்த்திடுவேன்

கண்ணிமைக்குள் உன்னை வைத்து
கண்மணியே போற்றிடுவேன் - நீ
கண்ணெடுத்து பார்த்து விட்டால்
விண்ணைஎட்டிப் பிடித்திடுவேன்

--கவிநயா

Monday, February 7, 2011

திருவடி நிழலில் ஒரு இடம் தருவாய்!


திருவடி நிழலில் ஒருஇடம் தருவாய் அம்மா ஸ்ரீசக்தி
தினம் உன்னைப்பாட வரமொன்று தருவாய் அம்மா சிவசக்தி

மனதினில் உன்றன் நினைவொன்றே வேண்டும் அம்மா ஸ்ரீசக்தி
மாயையி னின்றும் விடுதலை வேண்டும் அம்மா சிவசக்தி

ஐம்புலன் தன்னை அடக்கிட வேண்டும் அம்மா ஸ்ரீசக்தி
அனைத்திலும் உனையே கண்டிட வேண்டும் அம்மா சிவசக்தி

கலங்கிடும் உள்ளம் களிப்புற வேண்டும் அம்மா ஸ்ரீசக்தி
கலங்கரை விளக்காய் நீவர வேண்டும் அம்மா சிவசக்தி

கனிவாய் வருவாய் கடலாய் அருள்வாய் அம்மா ஸ்ரீசக்தி
உடனே வருவாய் உயிருள் நிறைவாய் அம்மா சிவசக்தி


--கவிநயா

சுப்பு தாத்தா, காம்போதியில் பாடியிருக்கார்... நன்றி தாத்தா!