Thursday, June 28, 2012

அகல் ஒளிதீபமாகுமா ?

அகல் ஒளிதீபமாகுமா ?
(சர்வம் நீயே வலையில் உள்ள என் பாடலை இங்கு அளிக்கிறேன)


அகமெனும் அகலிலே எண்ணமெனும் எண்ணையில்


பக்தித்திரி தோய்த்து இட்டேன் ;


அகலுக்கு ஒளி சேர்க்க அன்னையே! உன்னிடம்


அறிவுத்தீ வேண்டி நின்றேன்;


வேண்டியதை வழங்கிட ஞானத்தீயாக நீ


திரியினை நெருங்கி நின்றாய்;


தீ தீண்டினுந்திரி பற்றாத காரணம்


புரியாது புலம்பலானேன்;


பூரண முயற்சியுடன் ஆராய்ந்தபின் அதன்


காரணம் கண்டுகொண்டேன்!






கலியுகக் கடையிலே மலிவாய்க் கிடைத்திடும்


கலப்பட எண்ணை இது!


'நான்'',"எனது" என்றெந்தன் அஹங்காரத்தால் வந்த


அஞ்ஞான அழுக்குகளும் ,


' ஏன்?'என்ற ஆராய்ச்சியானபின் எஞ்சிய


விஞ்ஞான விட்டைகளும்,


கலந்து கெடுத்துவிட்ட கண்ணராவி எண்ணையிதில்


திரியினைத் தோய்த்து இட்டால்,


தீயாய் நீ திரியருகில் வரினும் என் உள்ளகல்


ஒளிதீபமாவதேது?






'நான்' செத்து 'ஏன்?'போன பின்னரே இவ்வகல்


ஒளிருமென்றுணர்ந்தேன் தாயே!



Monday, June 25, 2012

எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும்...


சுப்பு தாத்தா சாவேரியில் மிகப் பொருத்தமாகப் பாடித் தந்திருக்கிறார், கேட்டு மகிழுங்கள்! மிகவும் நன்றி தாத்தா!!


எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும்...
உன்னையே அண்டிட வேணும்
பக்தியுடன் உன்னை பணிந்திட வேணும் - உள
சுத்தியுடன் உன்னை நினைந்திட வேணும்
முத்தமிழால் உன்னை பாடிட வேணும் - என்
சித்தமெல்லாம் உன்னை நாடிட வேணும்
பித்தென உன்பதம் பற்றிட வேணும்
சொத்தென உனைநிதம் போற்றிட வேணும்
மொத்தமாய் என்னை நான் தந்திடவே வேணும்
உத்தமி உனதன்பை உணர்ந்திடவே வேணும்!


--கவிநயா

Monday, June 18, 2012

சொக்கன் நாயகி!


சுப்பு தாத்தா இரண்டு ராகங்களில் பாடி இருக்கார்!
சங்காரபரணம் - இங்கே
ஆனந்த பைரவி - இங்கே
மிக்க நன்றி தாத்தா!! உங்களுக்கு எது பிடிக்குது?


சோகமெல்லாம் தீர்ப்பவளே சொக்கன் நாயகி – உன்னை
சொந்தமென்று கொண்ட பின்னே சொர்க்கம் ஏனடி?
மோகமெல்லாம் தீர்ப்பவளே மோக நாசினி – என்றன்
மோகம்நீயாய் ஆனபின்னே சோகம் ஏதடி?

பற்றுமிகக் கொண்டுவிட்டேன் உன்னிடத்திலே – உன்றன்
பாதம்பற்றிக் கொண்டுவிட்டேன் இருகரத்திலே
சற்றுநீயும் பார்த்து விட்டால் உன்பயத்திலே - எமைச்
சுற்றும்வினை விலகுமடி ஒருகணத்திலே!

கடம்பவன வாசினியே காத்திட வேணும் – உன்னை
காலமெல்லாம் நேசிக்ககண் பார்த்திட வேணும்
தொடங்கிவிட்ட வேகமென்றும் தொடர்ந்திட வேணும் - அதற்கு
தேவதையே நீதானே அருளிட வேணும்!


--கவிநயா

Monday, June 11, 2012

நினைவில் உலவும் நிலவே!



ஹிந்தோளம் ராகத்தில் சுப்பு தாத்தா பாடியது, இதோ! மிக்க நன்றி தாத்தா!


நினைவில் உலவும் நிலவே என்றன்
நேரில் வாராயோ?
மனதில் பொங்கும் ஏக்கந் தன்னை
அம்மா அறியாயோ?

பகலும் இரவும் போலே என்றன்
உள்ளம் மாறுதம்மா
சுழலும் மாயை தன்னில் சிக்கி
தானும் உழலுதம்மா

என்றன் மனதை சீராக்கி அதில்
நீயே நிலைத்திட வேண்டும்
என்றன் நினைவை நேராக்கி அதில்
நீயே நிறைந்திட வேண்டும்

என்றன் மனதில் பொங்கும் அன்பு
எல்லாம் உனக்குத் தான்!
உன்றன் அன்பின் மழையில் நனையும்
உரிமை எனக்குத் தான்!


--கவிநயா 


Monday, June 4, 2012

வேண்டும்!





சுப்பு தாத்தா பாடித் தந்தது இங்கே... நன்றி தாத்தா!


நினைந்து நினைந்து ருகும்
மனமொன்று வேண்டும்
கசிந்து கசிந்து கண்ணீர்
பெருகிடல் வேண்டும்
பணிந்து பணிந்து உன்னை
வணங்கிடல் வேண்டும்
கனிந்து கனிந்துன் அன்பில்
கரைந்திட வேண்டும்

மகிழ்ந்து மகிழ்ந்து உன்னை
            புகழ்ந்திடல் வேண்டும்
நெகிழ்ந்துன் நினைவில் நெஞ்சம்
            ஆழ்ந்திடல் வேண்டும்
விழைந்து விழைந்துன் பதம்
            வீழ்ந்திடல் வேண்டும்
குழைந்து குழைந்துன் அன்பில்
            கனிந்திடல் வேண்டும்

அலைந்து திரியும் மனம்
            அடங்கிட வேண்டும்
தொலைந்த குழந்தை உள்ளம்
            திரும்பிட வேண்டும்
கலைந்த கனவு மீண்டும்
            மலர்ந்திடல் வேண்டும்
மலர்ந்து மலர்ந்துன் அன்பில்
            கலந்திடல் வேண்டும்!


--கவிநயா