Monday, May 25, 2015

அம்மா...


சுப்பு தாத்தா காவடிச் சிந்து மெட்டில் அனுபவித்துப் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



அம்மா உந்தன் திருமுகமே

எந்தன் நெஞ்சில் நீந்திடுமே

அம்மா உன் திருநாமம்

நாவில் நடனம் ஆடிடுமே

(அம்மா)



உன்னை எண்ணும் ஓர் நொடியில்

துன்பம் யாவும் மறந்திடுமே

உந்தன் கருணைக் கண் பட்டால்

வினைகள் எல்லாம் தொலைந்திடுமே

(அம்மா)



அம்மா உந்தன் பெருமைகளை

அடியவள் சிறிதும் அறியேனே

ஆனால் நீ என் தாய் என்னும்

உண்மை மட்டும் அறிவேனே



அம்மா எந்தன் குரல் கேட்டு

ஒரு நாள் ஓடி வந்திடுவாய்

அன்பால் உந்தன் பதநிழலில்

இடமும் எனக்குத் தந்திடுவாய்

(அம்மா)


-கவிநயா

Monday, May 18, 2015

தோளிலொரு பச்சைக்கிளி


தர்பாரி கானடா ராகத்தில் சுப்பு தாத்தா இனிமையாகப் பாடியதை நீங்களும் கேட்டு ரசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



தோளிலொரு பச்சைக் கிளி தொத்தியிருக்கும், அவள்
துவண்ட இடை வளைந்து நெளிந்து குழைந்திருக்கும்
சொக்கன் முகம் கண்ட விழி சொக்கியிருக்கும், அவள்
பக்கம் வந்தால் வினைகளெல்லாம் விலகி நிற்கும்
(தோளிலொரு)

வைகை நதி ஓடுகின்ற மதுரை நகரிலே, எழில்
மங்கை மீனாள் அவதரித்தாள் கருணையினாலே
திசைகளெல்லாம் வென்று வந்தாள் வீரத்தினாலே, அந்தத்
திகம்பரனை வென்று வந்தாள் இதயத்தினாலே
(தோளிலொரு)

பக்தரெல்லாம் பணிந்திடுவார் பக்தியினாலே, அந்த
பக்தரை அவள் காத்திடுவாள் பார்வையினாலே
பித்துக் கொண்டு பாதங்களைப் பற்றிக் கொண்டாலே, நமைச்
சற்றும் வில காதிருப்பாள் பிரியத்தினாலே
(தோளிலொரு)


--கவிநயா

Tuesday, May 12, 2015

அபிராமி!அருள்வாய் நீ!


அபிராமி!அருள்வாய் நீ!
(மகிஷாசுரமர்த்தினி ஸ்லோக மெட்டில் பாடலாம் .)


இடர்களைநீக்கித் தடங்கல் தகர்க்குங்
கடவுளாம் கணபதியின் தாயே!
விடமுண்டகண்டனின் இடப்பாகந்தனில்
இடம்பிடித்தமர்ந்த மகாமாயே!
கருவையுங்காக்கும் கர்ப்பரக்ஷாம்பிகே ,
குருகுக ஜனனி ,காத்யாயினி,
திருக்கடவூர் அமர் அன்னை அபிராமி,
கருணையோடிங் கெழுந்தருள்வாய்நீ !

முராரிசகோதரி,புராரிமனோகரி,
பரமேஸ்வரி,பவதாரிணி!
பர்வதராஜகுமாரி,கௌரி,
சர்வேச்வரி,சுகதாயினி!
சாரதே,சாமளே ,சாம்பவி,ஷாலினி,
சாகம்பரி,திருசூலினி!
நாராயணி,நவதுர்க்கே,நீலி,
பேரருள் பொழிந்திட வருவாய் நீ!

Monday, May 4, 2015

அன்னையைத் துதிப்போம்




அன்னையைத் துதிப்போம் 


ஜெய ஓம் திருக்கடவூர் அபிராமி!
ஜெய ஓம் சங்கரனின்  சிவகாமி !
 ஸ்ரீசக்ர ராஜ சிம்மாஸநேச்வரி!
ஜெய ஓம் ஜெகத்ஜனனி ! ஜெகதீஸ்வரி! 



பக்தியில் பட்டர் பிதற்றிய சொல்லை
சத்தியமாக்கிட  தாயவள்  கழற்றியே
வீசிஎறிந்த செவியணி வானில் 
மாசில் முழுமதியானதை நினைப்போம் .
ஜெய ஓம் திருக்கடவூர் அபிராமி!
ஜெய ஓம் சங்கரனின்  சிவகாமி !
 ஸ்ரீசக்ர ராஜ சிம்மாஸநேச்வரி!
ஜெய ஓம் ஜெகத்ஜனனி !ஜெகதீஸ்வரி! 



தத்துவம் எதிலும் அடங்கா அத்புத 
 சத்தியம் அவளென அனுபவித்தறிவோம் .
 பக்தர்க்குத்திருவருள்   பாலித்திடும்  பரா 
  சக்தியாம் அவளை சரணடைந்திடுவோம் .



ஜெய ஓம் திருக்கடவூர் அபிராமி!
ஜெய ஓம் சங்கரனின்  சிவகாமி !
 ஸ்ரீசக்ர ராஜ சிம்மாஸநேச்வரி!
ஜெய ஓம் ஜெகத்ஜனனி !ஜெகதீஸ்வரி! 

அன்னையின் பொன்னடி அனுதினம் பணிவோம்;
இன்னலும்  இன்பமயமாவதை  உணர்வோம்
தூயமனத்தால்  தாயினைத்தொழுவோம்
தீயுமே தென்றலாய் வீசுவதுணர்வோம்.
ஜெய ஓம் திருக்கடவூர் அபிராமி!
ஜெய ஓம் சங்கரனின்  சிவகாமி !
 ஸ்ரீசக்ர ராஜ சிம்மாஸநேச்வரி!
ஜெய ஓம் ஜெகத்ஜனனி !ஜெகதீஸ்வரி!