Monday, September 30, 2019

துர்கா துர்கா


அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!


துர்கா துர்கா என்று சொன்னால் துயரங்கள் தீரும்
தூய மனதில் அவள் வடிவம் தினந்தினம் தோன்றும்
(துர்கா)

துக்கங்களைத் தீர்க்கவென்றே தோற்றம் கொண்டவள், நம்
பக்கம் நின்று பாவங்களைப் போக்குகின்றவள்
(துர்கா)

சூலமேந்தி வருகையிலே காளியானவள், அந்த
நீலமேக வண்ணம் ஏற்று நீலியானவள்
பரசிவனின் தேகத்திலே பாதியானவள், தன்னைப்
பணியும் அன்பர் யாவருக்கும் தாயுமானவள்
(துர்கா)



--கவிநயா

Monday, September 23, 2019

அம்மா வருவாய்



நாவில் நிலைத்த உன் நாமம்
நாளும் அழைத்தேன் நானும்
கண்ணில் நிலைத்த உன் வதனம்
அதனைப் பண்ணில் விதைத்தேன் நிதமும்

உரவை நிறுத்தித் தடுத்தாய்
யமனை எட்டி உதைத்தாய்
ரதிக்கு மதனை அளித்தாய்
அருளைப் பாலாய்க் கொடுத்தாய்

நீ அறியாயததும் உண்டோ?
உன் கருணைக்கு எல்லை உண்டோ?
இருக்கையை விட்டு எழுவாய்
உடனே ஓடி வருவாய்

இன்னும் தாமதம் ஏனோ?
உனக்கிது பெருமை தானோ?
அம்மா விரைவாய் வருவாய்
உன் மடியில் ஓர் இடம் தருவாய்!


--கவிநயா



Monday, September 16, 2019

வழி காட்டுவாய்


வழி காட்டுவாய், உந்தன்
விழி காட்டுவாய்
கதி காட்டுவாய், எந்தன்
விதி ஓட்டுவாய்
(வழி)

உன்னை எந்தன் அன்னை என்றேன்
உள்ளத் தன்பை உனக்கே தந்தேன்
கண்ணாயிரம் கொண்ட என் தாயே
கண் திறக்கத் தாமதம் ஏனோ?
(வழி)

உந்தன் நாமம் சொன்னேனில்லை
உன்னை எண்ணித் துதித்தேனில்லை
யாகம், தியாகம் செய்தேனில்லை
தாய்க்கு சேவை செய்தேனில்லை

இருந்தும் உன்னை நாடுகின்றேன்
உன்னை எண்ணிப் பாடுகின்றேன்
உன்னை விட்டால் யாரெனெக்கு
அன்னை யன்றித் துணையெனக்கு
(வழி)


--கவிநயா

Tuesday, September 10, 2019

ஓம்கார ரூபிணீ



ஓம்கார ரூபிணீ ஆதிசிவ காமிநீ
(ஓம்)

அகலாமல் ஒரு பாகம் இருப்பவள் நீ, என்றும்
அசையாத சிவனாரை அசைப்பவள் நீ
(ஓம்)

கயிலை மலை மீதில் காந்த ரூபிணீ
மயிலாபுரி வாழும் கற்பகத் தேவிநீ
(ஓம்)

வாலையாய்... கன்னியாய்... அன்னையாய்...விளங்கும்
ஓம்கார ரூபிணீ ஆதிசிவ காமிநீ
(ஓம்)

கையில் கரும்பேந்தி இதழில் நகையேந்தும் ராஜராஜேஸ்வரி
கருணை விழியேந்தி கவலைகளைத் தீர்க்கும் ஸ்ரீதுர்கேஸ்வரி
அண்டங்கள் யாவையும் அரசாட்சி செய்யும் அகிலாண்டேஸ்வரி
அன்புடன் உயிர்களுக்(கு) உணவிடுகின்ற அன்னபூர்ணேஸ்வரி
(ஓம்)

காளியாய்...கமலையாய்...வாணியாய்...விளங்கும்
ஓம்கார ரூபிணீ ஆதிசிவ காமிநீ
(ஓம்)


--கவிநயா

Tuesday, September 3, 2019

ராஜேஸ்வரி!



ஸ்ரீராஜ ராஜேஸ்வரி, இந்த
ஜெகமாளும் புவனேஸ்வரி
(ஸ்ரீ)

கரும்பினைக் கையில் ஏந்தி
பாச அங்குசம் தாங்கி
ஸ்ரீசக்ர நாயகியாய் வீற்றிருப்பாள், அன்னை
ஸ்ரீலலிதாம்பிகை துணையிருப்பாள்
(ஸ்ரீ)

திங்களை முடிமேல் சூடியிருப்பாள்
பெண்மையின் ரத்தினமாக ஜொலிப்பாள்
கண்ணிமை போலே நம்மைக் காப்பாள்
அன்புத் தாயாய் அரவணைத்திருப்பாள்
(ஸ்ரீ)



---கவிநயா