Monday, June 25, 2018

உன்னை விட்டால் எவருண்டு?



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

என் விழியில் நீர் வழிந்தால்
உன் மடியில் தான் விழுவேன்
உன்னை விட்டால் எவரெனக்கு உமையவளே, உன்
துணை இருந்தால் பிழைத்திருப்பேன் உலகினிலே
(என் விழியில்)

எத்தனையோ துன்பம் உண்டு
ஏதேதோ துயரம் உண்டு
அத்தனையும் தள்ளி வைத்தேன் தாயே, உன்னை
அண்டி வந்தேன், அருள வேண்டும் நீயே
(என் விழியில்)

உன் வதனம் மனதில் வைத்தேன்
உன் பெயரை நாவில் வைத்தேன்
தினந் தினமும் உன்னை எண்ணித் தானே, இந்த
உலகினிலே உலவுகிறேன் நானே
(என் விழியில்)


--கவிநயா

Monday, June 18, 2018

'உ'(ன்) பாடல்



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

உன்னதத் தமிழாலே
உன்புகழ் பாடுகின்றேன்
உத்தமியே உமையே
உயிர் நீயே
(உன்னத)

உரவினை உண்ட கண்டன்
உடனிருக்கும் துணையே
உறவென உன்னைக் கொண்டேன்
உடனிருப்பாய் உமையே
(உன்னத)

உலகினிலே சிறந்த
உயர்ந்த பிறவி தந்தாய்
உள்ளத்தில் உன்னை வைத்து
உன்னும் பெரும் பேறும் தந்தாய்

உழலும் வினை அகற்ற
உந்தன் திரு நாமம் தந்தாய்
உள்ளொளியாய் ஒளிர்ந்து
உற்ற துணையாய் வந்தாய்
(உன்னத)


--கவிநயா

Tuesday, June 12, 2018

காளி!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கருமை நிறக் காளியம்மா
கருத்தில் உன் முகம்
வருத்தமெல்லாம் தீர்க்கும் உந்தன்
கருணைப் பொன் மனம்
(கருமை)

சிவந்திருக்கும் விழிகளிலே
அருளது பொங்கும்
மழையெனவே பொழியும் அன்பில்
உயிரது நனையும்
(கருமை)

அச்சமூட்டும் தோற்றம் நீயும் கொண்ட போதிலும்
அச்சமேதும் தோன்றவில்லை அன்னை உன்னிடம்
பட்சம் கொண்டு பிள்ளையிடம் வந்திடு தாயே, எங்கள்
பக்கம் நின்று அரவணைத்துக் காத்திடு வாயே
(கருமை)


--கவிநயா

Monday, June 4, 2018

தேவரும் முனிவரும்


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

தேவரும் முனிவரும் போற்றிடுவார்
தேவியுன் பதங்களைப் பணிந்திடுவார்
(தேவரும்)

அன்னையுன் அருமையை அவரறிவார், உன்
அடியவர்க்(கு) அவரும் அருளிடுவார்
(தேவரும்)

ஈரேழு புவனங்கள் படைத்தவளே, எம்மை
ஈன்ற தாயெனவே காப்பவளே
பாரெங்கும் உனது ஆட்சியம்மா, கண்கள்
பார்க்குமிடமெல்லாம் உந்தன் காட்சியம்மா
(தேவரும்)


--கவிநயா