Monday, March 27, 2017

வசந்த காலம் வந்தது!


கீதாம்மா தன் இனிய குரலில்...கதனகுதூகலம் ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

வசந்த காலம் வந்தது,

மனதில் மகிழ்வு தந்தது

மலர்களெல்லாம் உன் முகம் போல்

மலர்ந்து சிரிக்குது

ஒலிகளெல்லாம் உன் பெயரைக்

கானம் படிக்குது

(வசந்த)



சலசலவென சலசலவென ஓடும் நதியில்

கலகலவெனக் குலுங்கும் உனது சதங்கை கேட்குது

சடசடவென சடசடவென மழையில் நனைகையில்

பொழியும் உந்தன் அருளில் நனைதல் போலத் தோணுது

(வசந்த)



விரிந்து கிடக்கும் நீலவானை நிமிர்ந்து பார்க்கையில்

பரந்து விரிந்த உந்தன் உள்ளம் போலத் தோணுது

நீரையுண்ட மேகங்களின் கருமை காண்கையில்

கருணை வழியும் உந்தன் விழிகள் போலத் தோணுது

(வசந்த)



அலையடிக்கும் கருங்கடலின் கரங்கள் காண்கையில்

அரவணைக்கும் உந்தன் கரங்கள் போலத் தோணுது

பசுமையான பச்சைப் புல்லில் படுத்துப் புரள்கையில்

பாசமான உந்தன் மடியைப் போலத் தோணுது

(வசந்த)


---கவிநயா

Monday, March 20, 2017

விட்டு விடு! பற்றி விடு!


கீதாம்மா தன் இனிய குரலில்...தேஷ் ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

விட்டு விடு விட்டு விடு, பற்றுகளை விட்டு விடு
பற்றி விடு பற்றி விடு, பாதங்களைப் பற்றி விடு
(விட்டு விடு)

சின்னஞ்சிறு பூம்பாதம் சிந்தையிலே நிறுத்தி விட்டால்
வந்த வினை ஓடி விடும், இன்பம் வந்து கூடி விடும்
(விட்டு விடு)

பதமலரின் வாசமதை மனதினிலே மணக்க விடு
பாவையவள் தடம் பதித்து நினைவுக்குள்ளே நடக்க விடு
அம்மா என்றவளை அன்பு மீற அழைத்து விடு
அவளையன்றி கதியில்லை, உணர்ந்தவளைப் பணிந்து விடு
(விட்டு விடு)

 

--கவிநயா

Tuesday, March 14, 2017

பலப்பலவாய் அருள்வாள்!



கீதாம்மா தன் இனிய குரலில்...தர்மாவதி ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

மயிலையிலே வாழும் கற்பகமே

கயிலையினை ஆளும் அற்புதமே!

(மயிலையிலே)



திருமியச்சூரினிலே லலிதாம்பா

நெமிலியிலே இளைய பாலாம்பா

மாங்காட்டினிலே காமாக்ஷி

மதுரையில் மீன்விழியாள் மீனாக்ஷி

(மயிலையிலே)



தில்லைச் சிதம்பரத்தில் சிவகாமி

திருக்கடவூரினிலே அபிராமி

திருவேற்காட்டினிலே கருமாரி, அவளே

பலப்பலவாய் அருள்வாள் உருமாறி

(மயிலையிலே)


 --கவிநயா 

Monday, March 6, 2017

அழகி!



கீதாம்மா தன் இனிய குரலில்...அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். மிக்க நன்றி கீதாம்மா!

மணக்கும் மல்லி வாங்கி வந்தேன் மதுரை மீனாட்சி

உந்தன் கூந்தலிலே அது மணத்தால் கண்கொள்ளாக் காட்சி!

(மணக்கும்)


(உன்)விழியழகைப் பார்த்து பிரமன் மீன் படைத்தானோ, உந்தன்

நடையழகைப் பார்த்து அவன் மான் படைத்தானோ?

இல்லாத இடையைக் கண்டு கொடி படைத்தானோ, இல்லை

முறுவலிக்கும் இதழைக் கண்டு மலர் படைத்தானோ?



உன்னழகைக் கண்டு கண்டு சொக்கியவர் கோடி, நீயோ

சொக்கனவன் சுந்தரத்தில் சொக்கினாயே போடி!

(மணக்கும்)



கண்ணொளியைக் கண்டதனால் கதிரவன் வந்தான், அதில்

கருணையினைக் கண்டதனால் கருங்கடல் தந்தான்

கூந்தல் நிறம் கண்டதனால் மேகத்தைச் செய்தான், சின்னப்

பாதங்களைக் கண்ட பின்னே தாமரை செய்தான்



உன்னழகைக் கண்டு கண்டு சொக்கியவர் கோடி, நீயோ

சொக்கனவன் சுந்தரத்தில் சொக்கினாயே போடி!

(மணக்கும்)


--கவிநயா