Monday, September 25, 2017

துர்க்கை!


சுப்பு தாத்தா வின் இனிய இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

துர்க்கை என்னும் நாமம் சொன்னால்

துன்பமெல்லாம் ஓடுமடி

துக்கமெல்லாம் தீருமடி, தன்னாலே, அந்த

சுவர்க்கம் வந்து சேருமடி முன்னாலே

(துர்க்கை)



சூலமேந்தி வருகையிலே

கோபங் கொண்ட காளியவள்

கோலவிழிப் பார்வையினால்

உலகைக் காக்கும் தாயுமவள்

(துர்க்கை)



ஞானியராய் இருந்தாலும்

மாயையிலே இழுத்திடுவாள்

மோகத்திலே வீழ்த்திடுவாள்

ஞானத்தையும் அளித்திடுவாள்



தீமை ஏழ்மை அச்சம் இவை

யாவற்றையும் அழித்திடுவாள்

தம்மை எண்ணித் தொழுபவர்க்கு

நன்மையெல்லாம் அளித்திடுவாள்

(துர்க்கை)


--கவிநயா 


Monday, September 18, 2017

உன்னை நம்பி...


சுப்பு தாத்தா வின் இசையில், ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!   இரட்டை விருந்து இம்முறையும்!


அம்மா உன்னை நம்பித்தானே

உலவுகிறேன் இவ்வுலகில்

உந்தன் பெண்ணாய் இருந்தும் கூட

உழலுவதேன் இவ்விதியில்?

(அம்மா)



ஆதிசக்தி நீ அனந்த ரூபிணி

அன்பின் வடிவாம் அன்னை நீ

மகா சக்தி நீ மந்த்ர ரூபிணி

மங்கலம் அளிக்கும் மங்கை நீ

(அம்மா)



உந்தன் நினைவில் வாழும் போதில்

உள்ளம் இலேசாய் ஆகுதம்மா

உந்தன் சக்தியைப் போற்றும் போதில்

என்னுள் சக்தி ஊறுதம்மா



பற்றிக் கொண்ட பதம் விட மாட்டேன், இனி

எட்டி உதைத்தாலும் போக மாட்டேன்

சுற்றிச் சுற்றியே வந்திடுவேன், உன்னைப்

போற்றிப் போற்றி தினம் பாடிடுவேன்
(அம்மா)


--கவிநயா 

Monday, September 11, 2017

சின்னக் கண்ணம்மா


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

சின்னச் சின்னக் கண்ணம்மா

சேதி என்ன சொல்லம்மா

வண்ண வண்ணக் கண்ணம்மா

வாய் திறந்தால் என்னம்மா?

(சின்ன)



தேவரெல்லாம் போற்றிடுவார்

தேவியுன்னை வாழ்த்திடுவார்

தென்றலேஉன் பாதங்களில்

தீபங்களை ஏற்றிடுவார்

(சின்ன)



பாலையென வந்தவளே

பாவங்களைப் போக்கிடுவாய்

சோலையென வந்துஎங்கள்

சோகங்களை நீக்கிடுவாய்

(சின்ன)



அசுரர்களை அழிக்க

ஆயுதம் ஏந்தி நின்றாய்

ஆனந்தத்தை அளிக்க

அன்னை வடிவாக வந்தாய்

(சின்ன)

--கவிநயா 

Sunday, September 10, 2017

பாரதியின் சக்தி துதி

Image result for BHARATHIYAR IMAGE

வையம் முழுதும் [பாரதியின் கவிதை ]

வையம் முழுதும் படைத்தளிக்கின்ற 
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்துகின்றோம் ;
செய்யும்வினைகள் அனைத்திலுமே வெற்றி 
சேர்ந்திட நல்லருள் செய்கவென்றே!

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற் 
புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம் ;
வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை 
மேன்மையுறச்செய்தல் வேண்டுமென்றே!

வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை 
மேவிடும் சக்தியை மேவுகின்றோம்;
ஏகநிலையில் இருக்கும் அமிர்தத்தை 
யாங்கள் அறிந்திட  வேண்டுமென்றே !

உயிரெனத் தோன்றி உணவுகொண்டே வளர்ந்
தோங்கிடும் சக்தியை ஒதுகின்றோம்;
பயிரினைக் காக்கும் மழையென எங்களை 
பாலித்து நித்தம் வளர்க்கவென்றே!

சித்தத்திலே  நின்று சேர்வதுணரும் 
சிவசக்தி தன்  புகழ் செப்புகின்றோம்;
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் 
எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே!

மாறுதலின்றி பராசக்தி தன் புகழ் 
வையமிசை நித்தம் பாடுகின்றோம்;
நூறுவயது புகழுடன் வாழ்ந்துயர் 
நோக்கங்கள் பெற்றிட வேண்டுமென்றே!

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி 
ஓம்சக்தி என்றுரை செய்திடுவோம்;
ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார் , சுடர் 
ஓண்மை கொண்டார்  , உயிர் வண்மை கொண்டார் .
 

Monday, September 4, 2017

அம்மா...அம்மா...


நாளும் உன்னை நினைத்து நினைத்து ஏங்குகின்றேனே
நாயகியே உன் புகழைப் பாடுகின்றேனே
(நாளும்)

செந்தமிழில் பல கவிதை புனையத் தந்தாயே
வெந்த மனதில் தென்றலாக வீச வந்தாயே
(நாளும்)

அடி மனதில் உன் நினைவே ஓடுகின்றதே
அழகழகாய் கோலம் பல போடுகின்றதே
பிடியிடையாள் உன்மேல் பிரியம் அதிகமாகுதே
கொடிய விதியும் என்னை விட்டு விலகி ஓடுதே
(நாளும்)


--கவிநயா