Tuesday, September 29, 2020

அழைத்தால் தான் வருவாயா?

 

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே" மெட்டில்...


அழைத்தால்தான் வருவாயோ சொல்வாய் அம்மா, நான்

அழைக்காமலே அருகில் வருவாய் அம்மா

 

உன்னையன்றி ... வேறு ஒன்றை

நாடாமல் நானிருக்க அருள்வாய் அம்மா

(அழைத்தால்)

 

உலகத்திலே பிறந்து உனை மறந்தே தான் திரிந்து

உழன்றே நான் படும் பாடு அறிவாயம்மா

கலயத்திலே இட்ட சோறாக நீ வந்து

தீராத பசி தன்னைத் தீர்ப்பாயம்மா

 

அடித்தாலும் அணைத்தாலும், அழுதாலும் சிரித்தாலும்

உனையன்றி கதியொன்று கிடையாதம்மா

இன்பங்கள் துன்பங்கள் என்றேதும் இங்கில்லை

பேரின்பம் உன் பாதம் ஒன்றே அம்மா

அதை நீயே ... தருவாயே

(அழைத்தால்)


--கவிநயா


Monday, September 21, 2020

என் நற்பயன்

கற்பனையில் காணுகின்றேன் உன்றன் முகத்தை, என்றன்

நற்பயனே இதுவும் அம்மா, உன்றன் விருப்பே

(கற்பனையில்)

 

வட்ட முகம் வந்து நிற்கும் என்றன் நெஞ்சிலே, அது

வட்ட நிலா போல ஒளி வீசும் மனதிலே

காடு போல இருண்டிருக்கும் உலக வாழ்விலே

கதிரைப் போல வழி காட்டும் உன்றன் விழிகளே

(கற்பனையில்)

 

காதணியின் அசைவு தென்றல் காற்று ஆனதோ

செவ்விதழின் விரிவு செக்கர் வானம் ஆனதோ

அம்மா உன் கருங்கூந்தல் மேகம் ஆனதோ

உன்னருளே வானம் பொழியும் மழையும் ஆனதோ

(கற்பனையில்)


--கவிநயா




Tuesday, September 15, 2020

இமயத்தில் இருப்பவளே!

 


இமயத்தில் இருப்பவளே என்றன்

இதயத்தில் வருவாயே

சமயத்தில் காப்பவளே என்னிடம்

சடுதியில் வருவாயே

 

உலகத்தில் ஓர்துணையும் இன்றி

உழலுகின் றேனம்மா

நிகளத்தின் பிடியினிலே சிக்கிவ்

சுழலுகின் றேனம்மா

 

இருப்பது மெய்யானால் அம்மா

இக்கணம் வருவாயே

மறுப்பெது மில்லாமல் உன்றன்

தரிசனம் தருவாயே


--கவிநயா


Monday, September 7, 2020

நதியோடு...

 

நதியோடு ஜதி போட்டு

நாட்டியத்தில் நடை போட்டு

கொடியிடையாள் உன்னை நானும்

கொஞ்சிப் பாட வந்தேனம்மா

(நதியோடு)

 

குக்குக்கூ குயிலொன்று

கூவி ராகம் சொல்லித் தர

மீனாள் கைப் பைங்கிளி வந்து

பைந்தமிழில் பாடித் தர

(நதியோடு)

 

நந்தி தேவன் மத்தளம் கொட்ட

கலைவாணி வீணை மீட்ட

கோபாலன் குழலின் ஓசை

காற்றினிலே மிதந்து வர

 

முனிவரெல்லாம் மறைகள் ஓத

கணங்களெல்லாம் நடனம் ஆட

தேவரெல்லாம் பணியும் உன்றன்

தங்கப் பாதம் தஞ்சம் அடைந்தேன்

(நதியோடு)


--கவிநயா


Tuesday, September 1, 2020

சேற்றில் செந்தாமரை

 


உள்ளச் சேற்றினிலே ஊன்றி நிற்பவளே

உள்ளொளிரும் ஒளியே, உமையவளே

(உள்ளச்)

 

கள்ளமில்லா உள்ளம் தந்திடு தாயே

செந்தமிழால் உன்னைப் புகழ்ந்திட அருள்வாயே

(உள்ளச்)

 

பள்ளந்தனை நோக்கி ஓடிடும் நதி போல

உள்ளம் உன்னை நோக்கி ஓடிவர வேணும்

திசையறி கருவி என்றும் வட திசை காட்டுதல் போல்

என் மனம் என்றும் உன் திசை காட்டிட வேணும்

(உள்ளச்)


--கவிநயா