Monday, May 30, 2016

ஆதிசக்தி மகமாயி!


 தர்பாரி கானடா ராகத்தில், சுப்பு தாத்தாவின் குரலில்... மிக்க நன்றி தாத்தா!


அன்பு கொண்டு காப்பவளே
ஆதிசக்தி மகமாயி!
துன்பங் கண்டு கலங்குமெனக்குத்
துணையிருக்க வருவாய் நீ!
(அன்பு கொண்டு)

தேவையென்று சொன்னால்தான்
தேவதையே வருவாயோ?
தேவைகளை அறியாயோ
வேதனைகள் மறியாயோ?
(அன்பு கொண்டு)

ஆயிரம் பிழைகள் செய்தாலும்
அன்னை நீயன்றோ?
பாயிரம் பாடி வாழ்த்திடும் பிள்ளையைப்
பொறுப்பதுன் கடனன்றோ?

அம்மா என்று கதறிடும் கன்றை
வெறுத்திடும் பசு உண்டோ?
துரத்திடும் துன்பத்தின் துயரத்தைப் போக்க
உனையின்றி எவருமுண்டோ?
(அன்பு கொண்டு)


--கவிநயா


Monday, May 23, 2016

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி!



சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!
 

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
ஜெகமாளும் புவனேஸ்வரி
(ஸ்ரீ)

ஓமென்னும் நாதத்தில் ஓங்கார ரூபத்தில்
ஸ்ரீ சக்ர சிம்ஹாச னேச்வரி
ஒலிக்கின்ற வேதத்தில் எழில் பூத்த கோலத்தில்
ஸ்ரீ லலி தாபர மேஸ்வரி
(ஸ்ரீ)

கரும்புடன் மலர்கள் கைகளில் ஏந்தி
கருணை பொழியும் கருமுகிலே
விரும்பும் அடியவர் தொழுதிட அவர்வழித்
துணையென வருகின்ற அருள் நிதியே

பிறவிப் பிணியினைப் போக்கிடும் தாயே
சரணென வந்தேன் காத்திடுவாயே
பிறைமதி சூடியின் ப்ரியநா யகியே
குறை மதியேன்எனை யும்ஆதரியேன்
(ஸ்ரீ)





-கவிநயா


Monday, May 16, 2016

காஞ்சி நகர்க் காமாட்சி!



சுப்பு தாத்தா மனமுருகிப் பாடித் தந்ததைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிக்க நன்றி தாத்தா!


காஞ்சி நகர்க் காமாட்சி கவலையெல்லாம் தீர்த்திடுவாள்
காலடியில் விழுந்து விட்டால் கண்ணிமை போல் காத்திடுவாள்

வாஞ்சை மிகு காமாட்சி வருத்தமெல்லாம் தீர்த்திடுவாள்
வஞ்சியவள் அஞ்சலென்று அன்பு தந்து காத்திடுவாள்

பிஞ்சுப் பிள்ளை நெஞ்சத்திலே தேடி வந்து குடியிருப்பாள்
வஞ்சம் கொண்ட நெஞ்சத்திலே தங்க மிகத் தயங்கிடுவாள்

தேவர்களும் மூவர்களும் வணங்குகின்ற தாயவளாம்
கோபந்தன்னை விட்டு விட்டு சாந்த ரூபி யானவளாம்

அன்னையென்ற ரூபம் கொண்டு அகிலம் காக்க வந்தவளாம்
பிள்ளைகளை ஏந்திக் கொள்ள அமர்ந்த கோலம் கொண்டவளாம்

கருப்பு வில்லைக் கையில் கொண்ட காம கோடி தேவியளாம்
திருச்சக்கர நாயகியாம் அள்ளித் தரும் அம்பிகையாம்



--கவிநயா







Monday, May 9, 2016

திருநாள் என்றோ?

என்னுயிரே உன்னைச் சேரும் திருநாள் என்றோ?
உயிரில்லா உடலாய் நான் இருப்பதும் நன்றோ?
கருவிழியே உன்னைச் சேரும் திருநாள் என்றோ?
ஒளியில்லா விழியாய் நான் இருப்பதும் நன்றோ?

உன்னை எண்ணி நாளும்… உருகுகிறேன் நானும்…
கன்னத்திலே கண்ணீரும் போடுதம்மா கோலம்…
அறியாயோ எனை அலைக்கும் வேதனைகள் யாவும்…
பரியாயோ பெற்றெடுத்த தாயன்றோ நீயும்?

கானல் நீரின் மூலம் எந்தன் தாகம் தீருமோ?
கற்பனையில் உன்னைக் கண்டால் ஏக்கம் தணியுமோ?
மாயை கண்ணை மறைக்கும் போது மயக்கம் நீங்குமோ?
மங்கை உந்தன் அருளில்லாமல் தெளிவும் பிறக்குமோ?


--கவிநயா 



Monday, May 2, 2016

திருமுகம் நெஞ்சில்...

திருமுகம் நெஞ்சில் ஒளிவிடும் நேரம்
வருந்துயர் யாவும் பயங்கொண்டு ஓடும்
(திருமுகம்)

கனிந்து கனிந்துருகி மனமுன்னை நாடும்
குழைந்து குழைந்து உந்தன் பாதமே தேடும்
(திருமுகம்)

சிவபத்தினி உந்தன் நாமங்கள் கூறும்
உமைஉந்தன் திருப்புகழ் தினந்தினம் பாடும்
இருவினை களையும் கருவிழி பொழியும்
கருணையில் அமிழ்ந்து ஆனந்தம் காணும்
(திருமுகம்)




--கவிநயா