Tuesday, August 31, 2021

ஒரு வரம் வேண்டும்

 


ஒரு வரம் தருவாய் தாயே

உனையே நினைந்துருக

உன் பதமே பணிய

(ஒரு)

 

மனிதப் பிறவியிதில்

புனிதவதி உன்னை

வணங்கிடும் பேறு தந்தாய்

புகழ்ந்திடப் பாடல் தந்தாய்

(ஒரு)

 

பிறந்து பிறந்து இந்த

உலகினில் உழன்றாலும்

மறந்திடாது உன்னைப்

பணிந்திடவே வேண்டும்

 

சோதனைகள் வந்தாலும்

வேதனையில் வெந்தாலும்

மாதரசி உன் முகமே

மனதினிலே வேண்டும்

(ஒரு)

 

--கவிநயா





Tuesday, August 24, 2021

வரலக்ஷ்மி தாயே


வரலக்ஷ்மி தாயே வரமருள்வாயே

வந்தெங்கள் மனை புகுந்து, வாழ வைப்பாயே

(வரலக்ஷ்மி)

 

பாற்கடலில் பிறந்தாய்

பகலவன்போல் ஒளிர்ந்தாய்

பங்கயத்தில் அமர்ந்தாய்

பரந்தாமனை அடைந்தாய்

(வரலக்ஷ்மி)

 

எட்டு வடிவங்கள் கொண்டு

நவ நிதி அளிப்பவளே

எட்டாத செயலனைத்தும்

எட்டும்படி செய்பவளே

 

செங்கமலத்தில் உறைவாய்

செய்யப் பட்டுடன் திகழ்வாய்

எங்கள் இல்லம் வந்திடுவாய்

மங்கலங்கள் தந்திடுவாய்

(வரலக்ஷ்மி)

 

--கவிநயா

Tuesday, August 17, 2021

உன்னருளால்...

உன்னருளாலே வாழுகின்றேன்

உன் நினைவன்றி எதை நாடுகின்றேன்?

உன் புகழை நிதம் பாடுகின்றேன்

உன் திருவடி மலர் சூட ஏங்குகின்றேன்

(உன்னருளாலே)

 

உள்ளத்திலே வருவாய்

எண்ணத்திலே நிறைவாய்

கள்ளமில்லாப் பிள்ளை

உள்ளந்தனைத் தருவாய்

(உன்னருளாலே)


சிந்தையில் உன் தோற்றம்

தந்திடும் ஒரு மாற்றம்

வந்தித்து உன்னிருதாள்

பணிவதுவே ஏற்றம்

(உன்னருளாலே)

  

 --கவிநயா

 

Tuesday, August 10, 2021

நீயே கதி

 

அம்மா உன்றன் நாமம் அன்றாடம் சொல்லி வர

அகிலம் எல்லாம் இன்ப மயமாகும், இந்த

உலகின் பிறவித் துன்ப மயல் தீரும்

 

சரணம் சரணம் என்று உன்பாதம் பற்றிக் கொள்ள

மரணம் இல்லா வாழ்வு எமைச் சேரும், அந்தக்

கரணம் புளகி உன்றன் புகழ் பாடும்

 

வேதனைகள் விரட்டி வர, சோதனைகள் சூழ்ந்து வர

பாதங்கள் கதியென்று வந்தேனம்மா, என்றன்

ஆதங்கம் தீர்த்து அருள் செய்வாயம்மா

 

அம்மா உன்னிடமின்றி வேறெங்கு சென்றிடுவேன்?

உன்னிடத்தில் சொல்லாமல் எவரிடத்தில் சொல்லிடுவேன்?

அறியாயோ உன் பிள்ளை உள்ளம் அம்மா, என்றன்

அறியாமை நீக்கி அருள் செய்வாயம்மா

 

காளி என நீலி என நின்றவளே தாயே

கடலெனவே கருணை செய்ய வந்தாயே நீயே

நீலி என சூலி என நின்றவளே தாயே

நிர்க் கதியாய் வந்தோர்க்கு நிழல் தருவாய் நீயே

 

 

--கவிநயா


Tuesday, August 3, 2021

எங்கள் முத்துமாரி

 

உலகமெல்லாம் உய்ய வேணும் எங்கள் முத்துமாரி

உன் பாதம் சரணடைந்தோம் எங்கள் முத்துமாரி

மாரியென அருள் பொழியும் எங்கள் முத்துமாரி

மங்காத செல்வமவள் எங்கள் முத்துமாரி

(உலகமெல்லாம்)

 

வேற்காட்டில் குடியிருப்பாள் எங்கள் முத்துமாரி

வேப்பமர வடிவானாள் எங்கள் முத்துமாரி

ஆடியிலே கூழ் படைத்தால் எங்கள் முத்துமாரி

ஓடி வந்து அருளிடுவாள் எங்கள் முத்துமாரி

(உலகமெல்லாம்)

 

மஞ்சளிலும் குடியிருப்பாள் எங்கள் முத்துமாரி

மங்கலங்கள் தந்திடுவாள் எங்கள் முத்துமாரி

கொஞ்சு தமிழ்ப் பாடலுக்கு எங்கள் முத்துமாரி

கொலுசொலிக்க வந்திடுவாள் எங்கள் முத்துமாரி

(உலகமெல்லாம்)

 

--கவிநயா