Tuesday, March 27, 2018

இதமானது!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

இதமானது, மிகச் சுகமானது
அம்மா உன் பத நிழலே நிலையானது
(இதமானது)

ஓடோடி வந்தேனம்மா
உன் மடியில் இளைப்பாற
தாயே நீ அருள்வாயம்மா
என் பிறவி கடைத்தேற
(இதமானது)

பற்றெல்லாம் விட்டு விடத்தான்
உன்னை இறுகப் பற்றி விடத்தான்
அலைபாயும் எந்தன் மனதை
அங்குசத்தால் அடக்கித் தருவாய்

பந்த பாசம் விட்டு விடத்தான்
உலக பந்தம் அற்று விடத்தான்
உன் கையின் பாசத்தாலே
என்னைக் கட்டி இழுத்துக் கொள்வாய்
(இதமானது)


--கவிநயா

Monday, March 19, 2018

ஜகதாம்பிகே!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அம்மா என் தாயே, அம்பிகே
அன்றாடம் உனைப் போற்ற, அருள் ஜகதாம்பிகே
(அம்மா)

திசையெல்லாம் உந்தன் திருமுகம் காணுதம்மா
இசையால் உனைப் பாட உள்ளம் களித்தாடுதம்மா
(அம்மா)

உன்னை நினைந்துருகல் எந்தன் தவமாகும்
உன்னை தினந்தொழுதல் எந்தன் வரமாகும்
உந்தன் அருளாலென் உலகம் இயங்குதம்மா
உன்னைக் கணங்கூட மறவா தருளம்மா
(அம்மா)


--கவிநயா

Monday, March 12, 2018

அபிராமி !




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கடவூரில் அபிராமி வடிவானாய்
கடையேனுக்கும் அருளும் அற்புதத் தாயானாய்
(திருக் கடவூரில்)

அமிர்தகடேஸ்வரரின் அருகிருப்பாய்
அமிர்தமென அருள் மழையைப் பொழிந்திருப்பாய்
(திருக் கடவூரில்)

நதி போல என்னுள்ளம் அலைகிறதே
கடலுன்னைச் சேர மனம் விழைகிறதே
பட்டருக்காய் வந்த முழு மதியே, உன்னைப்
பற்றிக் கொண்டேன் என்றென்றும் எனக்கு நீயே கதியே
(திருக்கடவூரில்)


--கவிநயா

Monday, March 5, 2018

வா லலிதாம்பா!



சுப்பு தாத்தா வின் உருக்கமான இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

திருமியச்சூரில் திகழ்ந்திடும் தேவி ஸ்ரீ லலிதாம்பிகையே
வினைகளில் ஊறி வெந்திடும் எம்மைக் கா லலிதாம்பிகையே
(திருமியச்சூரில்)

ஸ்ரீசக்ரந்தன்னில் அமர்ந்திடும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையே
சின்மய வடிவே சிந்தையில் அமர வா லலிதாம்பிகையே
(திருமியச்சூரில்)

அலைமகள் கலைமகள் இருவரும் போற்றிடும் ஸ்ரீ  லலிதாம்பிகையே
அலைந்திடும் மனதின் அஞ்ஞானம் அகற்றிட வா லலிதாம்பிகையே
தேவரும் மூவரும் யாவரும் வணங்கிடும் ஸ்ரீ லலிதாம்பிகையே
தேடிடும் அன்பரின் இதயத்தில் வாழ்ந்திட வா லலிதாம்பிகையே
(திருமியச்சூரில்)


--கவிநயா