Monday, April 30, 2018

பரம தயாபரியே


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

சித்தத்திலே வைத்துப் போற்றுகின்றேன்
சிவையே, உமையே, சிவன் துணையே, உன்னை
(சித்தத்திலே)

சித்திர அழகே சத்திய வடிவே
மத்துறு வாழ்வினில் வளர் முழு மதியே
பித்தனின் இடம் கொண்ட பிச்சினியே, எம்மை
பத்திரமாய்க் காக்கும் பரம தயாபரியே
(சித்தத்திலே)

வித்தையெல்லாம் தரும் கலைமகள் நீயே
வினைகளெல்லாம் தீர்க்கும் கணபதி தாயே
முத்தெழில் திருமகளாம் அலைமகளும் நீயே
முத்தமிழ் முருகனுக்கு சக்திவேல் தந்தாயே
(சித்தத்திலே)


--கவிநயா

Tuesday, April 24, 2018

புதுக்கோட்டையில் புவனேஸ்வரி




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

பதமலர் போற்றுகின்றேன் புவனேஸ்வரி, உந்தன்
பாதங்களே கதியெனக்கு ஜெகதீஸ்வரி
(பதமலர்)

அன்பு வடிவாய் நின்றாய் மதுரையிலே
அருள் வடுவாய் அமர்ந்தாய் காஞ்சியிலே
முக்தி தர மனம் வைத்தாய் காசியிலே
புவனேஸ்வரி யானாய் புதுக்கோட்டையிலே
(பதமலர்)

இகபர சுகத்தினிலே உழலுகின்றேன், உந்தன்
காலடி நிழல் தந்து காத்திடுவாய்
அபயம் அபயம் என்று ஓடி வந்தேன், எனக்கு
அடைக்கலம் உனையன்றி எவர் தருவார்?
(பதமலர்)


--கவிநயா

Monday, April 16, 2018

அகிலாண்டேஸ்வரி




சுப்பு தாத்தா வின் இசையில்... குரலில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலிலும்... மிக்க நன்றி கீதாம்மா!

அகிலாண்டேஸ்வரி, ஆதிசிவன் நாயகி
அன்னை அன்ன பூரணி, வீர சிம்ம வாஹினி
(அகிலாண்டேஸ்வரி)

சுந்தர முகத்தழகி, செந்தூர நிறத்தழகி
முத்தெழில் நகையழகி, மோகன வடிவழகி
(அகிலாண்டேஸ்வரி)

சிவனுடன் ஒன்றானாய், சிவசக்தி என்றானாய்
பரசிவன் துணையானாய், அருள்தரும் இணையானாய்
தில்லை சிவகாமிநீ, வாமி அபிராமிநீ
அண்டமாளும் ராணிநீ, அன்புசெய்யும் தாயும்நீ
(அகிலாண்டேஸ்வரி)


--கவிநயா

Tuesday, April 10, 2018

கண்ணெடுத்துப் பார்த்தால்...



சுப்பு தாத்தா வின் இசையில்... குரலில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில், இன்னொரு ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!


விந்தையிலும் விந்தை உந்தன் திருவருளே, அதைக்
கண்டு கொண்டால் கையில் வரும் விழுப் பொருளே
(விந்தை)

எந்தை சிவன் இடமிருக்கும் உமையவளே, எனக்கு
எல்லாம் நீயே என்றுணர்ந்தேன் இமையவளே
(விந்தை)

சிந்தையிலே ஆடும் உந்தன் முக கமலம், அதைக்
கண்டு எண்ண வண்டு பாடும் தமிழ் அமுதம்
பண்ணெடுத்து உன்னைப் பாட, களிப்பாகும், நீ
கண்ணெடுத்துப் பார்த்தால் சென்மம் கடைத்தேறும்
(விந்தை)

--கவிநயா

Monday, April 2, 2018

பத கமலத்தில் நில்.



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

பத கமலத்தில் நில் மனமே
உலகப் பதரை விட்டுச் செல் மனமே
(பத கமலத்தில்)

அன்னையின் அடி பணிந்தால்
வல்வினைகள் ஓடும்
அவளைத் தினம் நினைந்தால்
ஆனந்தம் உன்னைத் தேடும்
(பத கமலத்தில்)

அது இது எது எனும்
ஆசைகளை விட்டு விடு
பக்தியின் மேல் ஆசை வைத்து
பாதங்களைப் பற்றி விடு

செய்யும் செயல் அத்தனையும்
அவளுக்காய்ச் செய்து விடு
சுவாசிக்கும் காற்றில் அவள்
பெயரை நிறுத்தி விடு
(பத கமலத்தில்)


--கவிநயா