Monday, January 28, 2019

அழகி!



கமலங்கள் உந்தன் எழில் கண்டு மயங்கும்
அன்னங்கள் உந்தன் நடை கண்டு தயங்கும்
கதிரவன் உந்தன் ஒளி கண்டு ஒளிவான்
சந்திரனும் உந்தன் தண்மையில் குளிர்வான்
(கமலங்கள்)

உலகினைக் காப்பவளே உன்னிரு விழியால்
உனைத் தினம் பாடுகிறேன் என் தமிழ்மொழியால்
பவ வினைகளைக் களைவாய் பார்வதி தாயே
சிவை சிவை என்று வந்தேன் என் துணை நீயே
(கமலங்கள்)

சிறுபிள்ளை என்னிடம் உனக்கென்ன வழக்கு
ஒரு முறை பார்ப்பதிலே உனக்கென்ன கணக்கு
என்னிடம் ஏன்தானோ உனக்கின்னும் பிணக்கு
உன்னடி சேர்ந்திடவே வழி விடுவாய் எனக்கு
(கமலங்கள்)



--கவிநயா


Monday, January 21, 2019

அருள் வேண்டி...



உன்னை எண்ணும் போதில் எந்தன் உள்ளம் துள்ளுதே
உன்னைப் போற்றிப் பாடச் சொல்லித் தமிழும் சொல்லுதே
உன்னை எண்ணும் போதில் உள்ளக் கமலம் மலருதே
உந்தன் பாதம் தன்னில் வைத்துக் கண்டு மகிழுதே
(உன்னை)

உறவுகளில் நிலையான உறவு நீயம்மா
உயிர்களெல்லாம் பிள்ளையாகக் காக்கும் தாயம்மா
சித்தத்திலே சிரித்தாடும் தெய்வம் நீயம்மா, அந்தப்
பித்தனோடு எம்மை என்றும் காக்கும் தாயம்மா
(உன்னை)

உன்னை அன்றித் துணையும் இல்லை உள்ளம் உணருதே
உந்தன் பாதம் சரணமென்று தினமும் புகலுதே
பற்றை விட்டு உன்னைப் பற்ற உள்ளம் விழையுதே
உன்னை மட்டும் பற்றி உந்தன் அருளை வேண்டுதே
(உன்னை)


--கவிநயா

Tuesday, January 15, 2019

சஞ்சலம் தீர்ப்பாய்!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவைர் இல்லத்திலும் பால் போலவே பொங்கட்டும்!



மனதின் சஞ்சலம் தீர்ப்பாய் அம்மா
மடியினில் ஏந்தி காப்பாய் அம்மா
(மனதின்)

எந்தையின் இடப்புறம் நிலைத்திட்டாய் அம்மா
என்னையும் ஒருபொருளாய் நினைப்பாயோ அம்மா?
பண்ணெடுத்துப் பாடும் பிள்ளையெனைப் பார்க்க
கண்ணெடுத்தால் போதும், கவலையெல்லாம் தீரும்
(மனதின்)

பலமுறை அழைத்து விட்டேன், பாராமுகம் ஏனோ?
சிலையென நீ இருந்தால், அது தருமந் தானோ?
மலையென உனைத்தானே நம்புகிறேன் தாயே
வலையினில் அகப்பட்டேன் மீட்டிடுவாய் நீயே
(மனதின்)


--கவிநயா



Monday, January 7, 2019

தயவுடன் காப்பாய்



உன்னடி பணிந்திட உமையே அருள்வாய்
உன் புகழே பாட வரம் நீ தருவாய்
(உன்னடி)

சிவனில் ஓர் பாதி
அகிலத்தின் ஆதி
பரமேஸ்வரி நீயே
பரிவுடன் காப்பாயே
(உன்னடி)

பகலவனின் ஒளியே
பனி பொழியும் மதியே
இகபர சுகம் யாவும்
இசைவுடனே அளியேன்
(உன்னடி)

தினந் தினமும் உனையே
நினைந்துருகும் பணியே
தந்திடுவாய் தாயே
தயவுடன் காப்பாயே
(உன்னடி)



--கவிநயா