Tuesday, August 27, 2019

துர்க்கை அம்மா!



துர்க்கை அம்மா துர்க்கை அம்மா
துக்கமெல்லாம் தீர்க்க வேணும் துர்க்கை அம்மா
(துர்க்கை)

பக்கம் வந்து நிற்க வேணும் துர்க்கை அம்மா
பரிவுடனே பார்க்க வேணும் துர்க்கை அம்மா
(துர்க்கை)

மாய இருள் அகற்றிடவே வேணும் அம்மா
ஞான ஒளி தந்திடவே வருவாய் அம்மா
காலமெல்லாம் உன்நினைவே வேணும் அம்மா, உன்
காலடியே கதியென்றேன் அருள்வாய் அம்மா
(துர்க்கை)


--கவிநயா

Monday, August 19, 2019

ஒவ்வொரு நிமிடமும்...


ஒவ்வொரு நிமிடமும் உனதடி பணிய
உதவிடுவாய் மரகதமே
ஒவ்வொரு பொருளிலும் உன்முகம் காண
அருள்புரிவாய் அனுதினமே
(ஒவ்வொரு)

ஆதியும் அந்தமும் நீயென்றாலும்
அன்னையும் நீயன்றோ?
பாதியாய் பரமனில் ஆகிநின்றாலும்
பரிபவள் நீயன்றோ?
(ஒவ்வொரு)

துயரங்கள் என்னைத் தொடர்ந்திடும்போதுன்
இணையடி துணையாகும்
அயர்ச்சியில் உள்ளம் தளர்ந்திடும்போதுன்
பெயரெந்தன் துணையாகும்

உன்னை எண்ணாத பொழுதுகள் எல்லாம்
வீண் பொழுதாகும் அம்மா
உன்னை எண்ணி தினம் வாழ்ந்தால் அதுவே
பேரின்பம் ஆகும் அம்மா
(ஒவ்வொரு)


--கவிநயா

Monday, August 12, 2019

உன்னை நாடுகின்றேன்



உன் பாத கமலங்கள் நாடுகின்றேன்
என் சென்னி மீதில் அவை சூடிடுவாய்
(உன்)

பழ வினையாலே வாடுகின்றேன்
பட்சமுடன் பதம் தருவாய், பாடுகின்றேன்
(உன்)

உன் பாதத் தூளியினால்
            பிரமன் உலகை ஆக்க
ஒரு தூளி தானெடுத்து
            விஷ்ணு அதனைக் காக்க
திருவடித் துகளாலே ருத்திரன்
            அழித்தல் செய்ய
ஒரு துளி தருவாயே உலகினில்
            நானும் உய்ய
(உன்)

--கவிநயா



Monday, August 5, 2019

உன் பெயர்



உன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்கும், அதைச்
சொல்லிச் சொல்லி எந்தனுள்ளம் களிக்கும்
(உன் பெயரை)

கரும்பெனும் உன் பெயரில்
இரும்பு உள்ளம் உருகும்
விழிகளின் பொழிவினிலே
வினைகளெல்லாம் அழியும்
(உன் பெயரை)

பருவத்தில் வரும் மழைபோல்
தருணத்தில் அருள் தாயே
கருணையின் மறு உருவே
விரைவினில் வருவாயே
(உன் பெயரை)

நாவினில் உன் நாமம்
நினைவினில் உன்னுருவம்
கவிதையில் நீ பொருளாய்
தினந் தினமும் அருள்வாய்
(உன் பெயரை)


--கவிநயா