Tuesday, May 31, 2022

காத்திருக்கிறேன்

 

வாசற் கதவைத் திறந்து வைத்தேன் வந்து பாரம்மா, பூ

வாசம் என்றன் உள்ளத்திலே வீச வையம்மா

(வாசல்)

 

பாசம் வைத்து நானழைத்தேன் காதில் விழலையோ?

நேசம் வைத்து நீவர எந் நேரம் ஆகுமோ?

(வாசல்)

 

துணிவு வேண்டும் அம்மா உலகின் துயரம் தாங்கவே

பணிவு வேண்டும் உன்றன் மலர்ப் பாதம் பணியவே

கனிவு வேண்டும் உயிர்களிடத்தில் அன்பைப் பொழியவே

இவை அனைத்தும் வேண்டும் உனக்குப் பிடித்த பிள்ளையாகவே

(வாசல்)

 

--கவிநயா



Tuesday, May 24, 2022

தஞ்சம் நீயே

தஞ்சம் என்று வந்தேன் அம்மா

அஞ்சேல் என்று சொல்வாய்

கஞ்சம் உன்றன் பாதம் என்றன்

நெஞ்சின் மீதில் வைப்பாய்

(தஞ்சம்)

 

வா எனவே அழைத்த பின்னும்

வாராயோ தாயே

தா எனவே கேட்ட பின்னும்

தாராயோ நீயே

(தஞ்சம்)

 

உலகம் உனக்கு விளையாட்டு

உயிர்களெல்லாம் பொம்மை

கலங்கச் செய்யும் உலகமிது

எனக்கிதுவே உண்மை

 

கரம் கொடுத்துக் கரை சேர்க்க

வரவேண்டும் தாயே

சிரம் மீதில் பதம் சூடும்

வரம்வேண்டும் தாயேன்

(தஞ்சம்)

 

--கவிநயா



 

Monday, May 16, 2022

துணை நீயே

துணை நீயே என் தாயே, துயரங்கள் துரத்தி விட

இதயத்திலே இருந்து, இன்னொளி காட்டி விட

(துணை)

 

பாதங்கள் பற்றிக் கொண்டேன், பார்வையைத் திருப்பி விடு

வேதனை தீர்த்து விடு, வினைகளை விரட்டி விடு

(துணை)

 

அடர்ந்த காடெனினும், கதிரொளி புகுந்து விடும்

இருள் சூழ் மனமெனினும், உனதருள் ஊடுருவும்

எனக்கிங்கு வழி காட்டு, விழிவழி ஒளி காட்டு

உலகினில் உனையன்றி எனெக்கென எவருண்டு?

(துணை)

 

--கவிநயா



 

Monday, May 9, 2022

அருள் என்று கிடைக்கும்?

 

அருள் கிடைக்கும் நாள் எதுவோ, அம்பிகையே?

இருள் நீங்கி ஒளி துலங்க, வா உமையே

(அருள்)

 

நெஞ்சம் தடுமாறச் செய்யும் சஞ்சலங்கள் நீங்கிடவும்

வஞ்சமனம் கொண்டிருக்கும் சம்ஸயங்கள் தீர்ந்திடவும்

(அருள்)

 

உன்றன் பத மலர்களிலே அன்புமிகக் கொண்டிடவும்

உன்னடியை முழு மனதாய் நம்பி நிதம் தொழுதிடவும்

உன்றன் உள உகப்பேதான் என்னுகப்பாய் ஆகிடவும்

என்றும் உன்றன் கரம் பிடித்து உன்றன் வழி நடந்திடவும்

(அருள்)

 

--கவிநயா



Tuesday, May 3, 2022

கல்லான என் மனதில்...


கல்லான என் மனதில் கனிவோடு அமர்ந்திடுவாய்

புல்லான என் ஜீவன் பொலியச் செய்வாய்

(கல்லான)

 

உன் நாமம் ஒன்றே நான் நாளும் பழகிடவும்

உன் பேரைக் கேட்டவுடன் உள்ளம் உருகிடவும்

(கல்லான)

 

பொன்னான பூம்பாதம் தலைமேல் வலிய வைத்து

கண்ணாலே வல் வினைகள் கழலச் செய்வாய்

நஞ்சுண்ட கண்டத்தான் இடப்பாகம் இருப்பவளே

அஞ்சல் என்றெனக் கென்று அருளிச் செய்வாய்

(கல்லான)

 

--கவிநயா