Monday, February 22, 2010

அவசியம் நீ வர வேணும்!



பாடிப் பாடித் துதிச்சிருக்கேன்
பாசத் தோட காத்திருக்கேன்
பாவி எனக் கருள் புரிய
பைங்கிளிக்கு மனசு வல்ல

தேடித் தேடித் தவிச்சிருக்கேன்
தேவி ஒன்னத் துதிச்சிருக்கேன்
ஓடி வந்து அருள் புரிய
ஒனக்கு இன்னும் மனசு வல்ல

கருண நெறஞ்ச மனம்
கல்லாகிப் போனதென்ன?
வருந்தி அழைச்ச பின்னும்
வாராம இருக்கதென்ன?

நம்பித்தான் காத்திருக்கேன்
நாயகியே வர வேணும்
வம்பேதும் பண்ணாம
வண்ண மயில் வர வேணும்

அன்பு மீறக் கூப்பிடுறேன்
ஆசையாக வர வேணும்
அம்மான்னு கூப்பிடுறேன்
அவசியம் நீ வர வேணும்


--கவிநயா

Monday, February 15, 2010

தடம் பார்த்து...


தடம் பார்த்து நடை நடந்து உன்னைத் தேடி வந்தேன்
இடம் பார்த்து ஏவல் செய்ய உன்னை நாடி வந்தேன்

(தடம்)

எங்கே எங்கே நீயென எண்ணம் போல அலைந்தேன்
இங்கே இங்கே எனஉன்னைக் கண்டு கொண்டால் மகிழ்வேன்

(தடம்)

விடமுண்ட கண்டனவன் இடமிருக்கும் கிளியே
குடங்கொண்ட விளக்கினைப்போல் உள்ளொளிரும் ஒளியே

வலங்கொண்டு உன்னைதினம் வணங்குகின்றேன் உமையே
மனங்கொண்டு நினைவில்நின்று வாழவைப்பாய் எமையே

(தடம்)


-கவிநயா

Monday, February 8, 2010

ஆதியும் நீயே! அந்தமும் நீயே!



ஆதியும் நீயே அந்தமும் நீயே
ஆதி அந்தம் இல்லா சோதியும் நீயே
பாதியும் மீதியும் ஆனவள் நீயே
நாதி இல்லா உயிர்க்கு நலம் தரும் தாயே!

அன்னையும் நீயே கன்னியும் நீயே
அகில மெல்லாம் ஆளும் அரசியும் நீயே
பாலையும் வாலையும் ஆனவள் நீயே - அதி
காலை எழில் நிற கற்பகத் தாயே!

பொருளும் நீயே போகமும் நீயே
மருள் நீக்கி அருள் தெருளும் நீயே
இருளும் ஒளியும் ஆனவள் நீயே
அன்புருவே அழகே என்னுயிர்த் தாயே!!

--கவிநயா

சுப்புத்தாத்தாவின் குரலில், இசையில்... நன்றி தாத்தா.



அர்த்தநாரீஸ்வரர் படத்துக்கு நன்றி: http://farm1.static.flickr.com/177/398376556_0804b23684.jpg

Monday, February 1, 2010

சுடராய் ஒளியாய் இருப்பவளே!


சுடராய் ஒளியாய் இருப்பவளே
சடுதியில் என்னிடம் வந்திடுவாய்

மழையாய் முகிலாய் இருப்பவளே
மனம் வைத்து என்னிடம் வந்திடுவாய்

வானாய் வளியாய் இருப்பவளே
விரைந்திங்கு என்னிடம் வந்திடுவாய்

நிலமாய் நீராய் இருப்பவளே
நீ உடன் என்னிடம் வந்திடுவாய்

அனுதினம் உன்னைப் பாடுகின்றேன்
அம்மா உன்னருள் நாடுகின்றேன்

உன்பதம் பணிந்தேன் ஏற்றுக் கொள்வாய்
உன்நிழலில் ஓரிடம் எனக்களிப்பாய்


-கவிநயா