Monday, June 29, 2015

அன்பால் அபிஷேகம்

அன்பாலே அபிஷேகம் செய்தேனம்மா
அருளாலே அதை ஏற்று மகிழ்வாயம்மா
உன்பாலே மனம் வைத்தேன் அறிவாயம்மா
என்பாலே உளமிரங்கி வருவாயம்மா
(அன்பாலே)

பாலாபி ஷேகங்கள் பாலாம் பிகை உனக்கே
பால் வெள்ளை உள்ளம் தந்து அருள்வாய் நீ அதற்கே
தேனாபி ஷேகங்கள் தேவி உன் திரு வடிக்கே
தேடி அழைப்ப வர்க்கு தாளிணை தருவதற்கே
(அன்பாலே)

பஞ்சாமிர் தபிஷேகம் பாவை உன் பதங்களுக்கே
பக்தர்தமை பத்திரமாய் காத்திடுவாய் நீ அதற்கே
மஞ்சளால் அபிஷேகம் மங்களாம் பிகை உனக்கே
மங்கல மதிவதனம் கண்டு கண்டு மகிழ்வதற்கே
(அன்பாலே)


--கவிநயா 

 

Monday, June 22, 2015

அவ கதையைக் கேளு!

தேரு ஏறி பவனி வரும் பொண்ணு பாரு, அவ
அழகைக் காண கோடிக் கண்ணு வேணும் கேளு
வில்லும் அம்பும் ஏந்திப் போன வீரம் பாரு, அங்கே
சொல்லும் மறந்து நின்ன அவ கதையைக் கேளு!
(தேரு)

தவமிருந்த தாய்க்கு மகளாகப் பொறந்தா, அவ
தமிழ் வளந்த மதுரையில தானும் வளந்தா
திசையெல்லாம் படையெடுத்து வெற்றி யடைஞ்சா
சிவனை வெல்லக் கைலாயம் பொறப்பட்டுப் போனா!
(தேரு)

கண்ட கண்ணு இமைக்ககூட மறந்து போனதாம்
வில்லும் அம்பும் தானா நழுவிக் கீழ விழுந்ததாம்
சண்டை போடப் போன பொண்ணு சரணமடைஞ்சிட்டா
வெக்கம் மீறச் சொக்கனுக்குச் சொந்தமாயிட்டா!
(தேரு)


--கவிநயா

 

Monday, June 15, 2015

மனமெல்லாம்...


மணிரங் ராகத்தில் சுப்பு தாத்தா மனமுருகி அனுபவித்துப் பாடியிருக்கிறார். மிக்க நன்றி தாத்தா!



மனமெல்லாம் உன்பதமே நடனமிட வேண்டும்

சிலம்பொலியே சிந்தையெல்லாம் நிறைந்திட வேண்டும்

மென்னடிகள் மெல்ல வைத்து நீ வர வேண்டும், உன்

பொன்னடிகள் தரும் சுகம் நான் உணர்ந்திட வேண்டும்
(மனமெல்லாம்)



காலினில் பொற் சிலம்பு கல் கல் என ஒலிக்கும்

மெட்டி ஒலி மெட்டமைத்து அதனுடன் சிந்து படிக்கும்

கைவளைகள் தாம் கலந்து தாளங்கள் இசைத்திருக்கும்

காதணிகள் உடன் இசைந்து கருத்துடன் ரசித்திருக்கும்
(மனமெல்லாம்)



ஏழுலகமும் உன்னை இமையாமல் பார்த்திருக்க

எட்டும் திசைகளெல்லாம் ஏற்றி உன்னைப் போற்றி நிற்க

சிவனுடன் நடனமிடும் சிவகாமியே தாயே, என்

சித்தத்திலும் வந்திருந்து நடம் புரிவாய் நீயே!
(மனமெல்லாம்)


--கவிநயா

Monday, June 8, 2015

மற(று)க்காமல் வர வேண்டும்!


த்விஜவந்தி ராகத்தின் சாயலில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியது. சுப்பு தாத்தாவிற்கு 73 வயது நிறைவடைகிறதாம். அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா!



விடையேறி வர வேண்டும்

சிவனோடு வர வேண்டும்

உடம்போடு உயிர் உறவு

அறும் முன்னே வர வேண்டும்!



உள்ளத்தில் வர வேண்டும்

உன்நினைவைத் தர வேண்டும்

ஊனுருக உன் புகழைத்

தினம் பாடும் வரம் வேண்டும்!



கரும்பினிய என் தேவி

காப்பாற்ற வர வேண்டும்

கறுத்திட்ட கண்டனுடன்

கடிதேகி வர வேண்டும்!



குருவாகி வர வேண்டும்

குறை தீர்க்க வர வேண்டும்

மறை போற்றும் மாதவியே

மறு(ற)க்காமல் வர வேண்டும்!


--கவிநயா 

Monday, June 1, 2015

வர வேண்டும் அம்மா!



மிகப் பொருத்தமாக காம்போஜியில் மெட்டமைத்திருக்கிறார் சுப்பு தாத்தா, வழக்கம் போல்! மிக்க நன்றி தாத்தா!



வர வேண்டும், அம்மா வர வேண்டும்

வண்ணத் தமிழ் இசைக்கிசைந்து வர வேண்டும்



முத்து மணிச் சிலம்பொலிக்க

முத்து நகை இதழ் விரிக்க

பட்டிடையில் சரசரக்க

பார்த்தவரெல்லாங் களிக்க

(வர வேண்டும்)



கை வளைகள் கலகலக்க

கார்குழலோ காற்றளக்க

கருவிழிகள் திசையளக்க

கண்டவரெல்லாங் களிக்க

(வர வேண்டும்)



மணியாரம் மார்பசைய

மேகலையோ இடையசைய

மேலாடை காற்றசைய

மயிலென நீ அசைந்தசைந்து

(வர வேண்டும்)



மெட்டி ஒலி சிணுங்கி வர

மின்னலிடை ஒசிந்து வர

கன்னம்ரெண்டுஞ் சிவந்து வர

கண்டவரெல்லாங் களிக்க

(வர வேண்டும்)


--கவிநயா