Friday, January 31, 2014

ஆறுதல் கூறம்மா !


ஆறுதல் கூறம்மா !

குறைமதியை  மலராகச் 
திருச்சிரத்தில்  தரித்தவளே!
குறைமதியேன்  குறைதனை நீ  தீராயோ?
மறலிவருங்காலும் மனம் 
'உனைக்காணல் உறுதி' என்றே 

அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?
அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?


பிறைசூடும்  பித்தனையே
பதியாக வரித்தவளே!
திரைநீக்கித் திருக்காட்சி  தாராயோ ?
முறையற்றுத்  தரிகெட்டுத் 
திரிந்தாடும்  என் மனத்தின் 
மருள் மாய்க்கும் மருந்தாய்  நீ மாறாயோ 
அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?



கறைக்கண்டன்  காயத்திலே
சரிபாதி பறித்தவளே !
நிறைகருணைக்  கண்ணாலே பாராயோ?
 முறையீடு முடிந்ததம்மா  ,
அ(ரு)ம்புமலர்க் கரத்தவளே !
விரைந்தென்னை  ஆட்கொள்ள வாராயோ?
அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?














Monday, January 27, 2014

உனதருளால் ஆகாததும் உண்டோ?



சுப்பு தாத்தா மனமுருகிப் பாடியிருப்பதைக் கேட்டு நாமும் உருகுவோம்... மிக்க நன்றி தாத்தா!


குருவருளால் ஆகாததும் உண்டோ? உன்
திருவருளால் ஆகாததும் உண்டோ?
(குருவருளால்)

உனதருளால் எனை நனைக்க வேண்டும், உன்
திருவடி என் தலை பதிக்க வேண்டும்
(குருவருளால்)

வழி தவறிய பறவை என நான் தவிக்கிறேன்
வழி காட்ட உன்னை வேண்டிப் பரி தவிக்கிறேன்
அருள் பெருகும் எழில் விழியால் என்னைப் பாரம்மா
இருள் நீக்கி வழி காட்டி வலி தீரம்மா!
(குருவருளால்)


--கவிநயா

Monday, January 20, 2014

சின்னக் கருங்குயில் கூவாயோ?



குயில்களை எல்லாம் கூட்டி வந்து கூவவிட்டு, சுப்பு தாத்தா பாடியிருப்பதை நீங்களும் கேட்டு ரசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



சின்னக் கருங்குயில் கூவாயோ?
சிந்தை மகிழ்ந்திட கூவாயோ?
வண்ண மலர்ப் பாதம் கொண்ட எழில்அன்னை
வந்திடுவாள் என்றே கூவாயோ?

கன்னங் கருங்குயில் கூவாயோ?
காற்றும் களித்திட கூவாயோ?
கன்றின் குரல் கேட்ட ஆவினைப் போலன்னை
வந்திடுவாள் என்றே கூவாயோ?

செல்லக் கருங்குயில் கூவாயோ?
சேதி ஒன்றுசொல்ல கூவாயோ?
வாதை யினைத் தீர்க்க வாஞ்சையுடன் அன்னை
வந்திடுவாள் என்றே கூவாயோ?

அம்மா என்றுநீயும் கூவாயோ?
ஆசை மிகுந்திடக் கூவாயோ?
அன்பே வடிவாக கொண்ட அன்னை இன்றே
வந்திடுவாள் என்றே கூவாயோ?


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0806nkn_nature.php

Monday, January 13, 2014

காமினியே, ஜகன் மோகினியே!

அனைவருக்கும் மனம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

முன்பு ஒரு முறை நித்யஸ்ரீ அவர்கள் பாடிய ஜனனி ஜனனி என்னும் பாடலின் சுட்டியை சுப்பு தாத்தா அனுப்பியிருந்தார். மிகவும் பிடித்த அந்தப் பாடலின் மெட்டிலேயே எழுதியது... நீங்களும் பாடிப் பார்த்து, பதிவு செய்து எனக்கும் அனுப்புங்களேன்...



சக்தி சக்தி சக்தி
சிம்மவாஹினி மாலினி சூலினியே
சக்தி சக்தி சக்தி
புவிபூத்ததைக் காத்துப் பின்கரந்தவளே
சக்தி சக்தி சக்தி

லீலை பலபுரியும் லலிதாம்பா
காலைப் பிடித்தோமே... காத்தே அருள்வாயே…அம்மா

(சக்தி சக்தி சக்தி)

கயிலை நாதனுடன் கலந்து மகிழ்பவளே காமினியே ஜகன் மோகினியே
மயிலை நகரதனில் தோகை மயிலாகி நாதனை வணங்கினையே

காமேச்வரி தாயே… காத்தருள்வாய் நீயே…
சிதம்பர நாதனின் நாயகியே! சர..ணம் சர..ணம் சரணம் அம்மா!

(சக்தி சக்தி சக்தி)


--கவிநயா

Monday, January 6, 2014

உதிரமெல்லம் ஓடுகின்ற உமையவளே!

உதிரமெல்லாம் ஓடுகின்ற உமையவளே, என்
அதரத்திலுன் பெயரை வைத்தேன் இமையவளே
இமயத்திலே பிறந்து வந்த மலைமகளே, உன்னை
இதயத்திலே இருத்தி வைத்தேன் இனியவளே!

வேலெடுத்து நின்ற பிள்ளை வேலவனாம், உன்
காவலுக்கு நின்ற பிள்ளை கணபதியாம்
பால் கொடுத்த செல்லப் பிள்ளை சம்பந்தனாம், நீ
உயிர் கொடுத்த அன்புப் பிள்ளை மன்மதனாம்!

பாட்டெடுத்துப் பாடும் பிள்ளை பாரம்மா, அதைக்
கேட்டு மகிழ நீ வந்தால் என்னம்மா?
கேட்டதெல்லாம் அள்ளித் தரும் தாயம்மா, நான்
கேட்காமல் நீயே வந்தால் என்னம்மா?

--கவிநயா