Monday, April 29, 2013

அச்சம் இல்லை!



சுப்பு தாத்தாவும், இந்த முறை மீனாட்சி பாட்டியும் சேர்ந்து கலக்கியிருக்கிறார்கள்! மிக்க நன்றி தாத்தா, பாட்டீ!



அம்மா நீயென் அருகிருக்க
அச்சம் இல்லை என் மனதில்
உன்றன் கண்ணொளி துணையிருக்க
இருளேதம்மா என் வழியில்?

கனிவாய்ப் புன்னகை காண்கையிலே
கனவாய்ப் போகுது கவலையெல்லாம்
பணிவாய் உன்பதம் பணிகையிலே
பதறிச் சிதறுது வினைகளெல்லாம்!

அபயம் அபயம் என்பவர்க்கு
அபயம் அளித்திடும் உன் கரமே
துயரம் எத்தனை வந்தாலும்
உன்னைத் துதிப்பவர்க் கேன் பயமே?

அம்மா உன்னை நினைத்து விட்டால்
உள்ளம் எல்லாம் உன் வயமே
சிந்தையில் உன்னைப் பதித்து விட்டால்
சித்தம் எல்லாம் சின் மயமே!

--கவிநயா

Thursday, April 25, 2013

அம்மா !ஆதரி .



அம்மா !ஆதரி .

காமனை  எரித்த  கண்ணால்
          ஞானச்சேய் பயந்தளித்த 
சோமேசன்  ப்ரிய சுந்தரி!...மாதுரி !
         அபயந்தந்தெனை ஆதரி.

கால்விரலை வாய் சுவைக்க , 
          கைவிரலோ மலை சுமக்க
கோலம்பல காட்டும் அரி ...சோதரி!
         சரணளித்தெனை  ஆதரி  !

பாமர தாசனுக்குக்  
        கவிபாடும் வரமளித்த 
 ஷ்யாமளே !சாகம்பரி !...சங்கரி !
        புகல்தந்தெனை ஆதரி!

ஊமைக்குப் பேச்சருளி 
            ஐந்நூறு பாடவைத்த 
காமாக்ஷி!கருணாகரி!...கடையனின் 
           பாமலரும் ஸ்வீகரி!




         

 

Monday, April 22, 2013

கா அம்மா!



சுப்பு தாத்தா கிராமிய மெட்டில் அமைத்து அசத்தியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



கண்ணீராலே கவிதை வடித்தேன்,
            காதால் கேளாயோ?
பன்னீர்ப் பூவே பாதம் பிடித்தேன்,
            பரிவாய்ப் பாராயோ?
நாவை அசைத்து நாமம் சொன்னேன்,
            நங்காய் கேளாயோ?
பூவை உனக்குப் பூசை செய்தேன்,
            பக்கம் வாராயோ?

அகிலம் காக்கும் என்அம்மா,
            என் அகத்தில் வந்து நில்லம்மா
நிகளம் துகளாய் ஆக்கம்மா,
            புகலாய் வந்தேன் கா அம்மா
விதியோ இன்னும் விடவில்லை,
            மயங்கும் மதியோ மாறவில்லை
பதமே கதியென வந்து விட்டேன்,
            பழவினை விரட்டி அருளம்மா

தேடும் யாவும் நீயாக,
            தெவிட்டா இன்பத் தேனாக…
வாடும் உள்ளம் பூவாக,
            வாசத் தென்றல் காற்றாக…
ஓடும் மனது நின்றிடணும்,
            உன்பதந் தனிலே ஒன்றிடணும்
பாடும் பேசும் பொருள் யாவும்,          
            பாவை புகழே ஆகிடணும்!


--கவிநயா

Monday, April 15, 2013

யாவும் நீயே!



சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் ஆனந்தமாகப் பாடியதைக் கேட்டு நீங்களும் ஆனந்தியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



அண்டமாகி பிண்டமாகி
கண்டன் கொண்ட பாதியாகி
அதுவுமாகி இதுவுமாகி
நின்ற அன்னையே!

நின்றதாகி சென்றதாகி
வென்றதாகி தோற்றதாகி
யாவும் ஒன்று என்று ஆன
என்றன் அன்னையே!

கண்டதாகி விண்டதாகி
கலந்து நின்ற ஜோதியாகி
காலம் யாவும் வென்றதாகி
நின்ற அன்னையே!

தேவராகி அசுரராகி
தேடுகின்ற யாவுமாகி
தெளிந்த ஞான தீபமான
என்றன் அன்னையே!

வேதமாகி வித்தையாகி
வேண்டுவோர்க்கு அன்னையாகி
வித்துமாகி விளைவுமாகி
நின்ற அன்னையே!

சத்வமாகி தத்வமாகி
சாந்தரூப மாகஆகி
சத்தியத்தின் வடிவமான
என்றன் அன்னையே!

புத்தியாகி சித்தியாகி
பக்தியாகி முக்தியாகி
சக்தியாகி சிவமுமாகி
நின்ற அன்னையே!

கனலும் புனலும் காற்றுமாகி
முதலும் நடுவும் முடிவுமாகி
முடியில் பாதம் வைத்து ஆளும்
என்றன் அன்னையே!


--கவிநயா

('ஓம் நமோ நாராயணாய...' என்ற மெட்டில்)

Monday, April 8, 2013

முத்துதிர்ப்பாய் அன்னையே!



சுப்பு தாத்தா சஹானாவில் உருகிப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



மௌனம் ஏனோ மங்கையே
கருணை பொழிவாய் கங்கையே
செப்பு இதழைத் திறந்து சின்ன முத்துதிர்ப்பாய் அன்னையே!

வானம் வையம் எங்குமே
கலந்து நிறைந்த கன்னியே
கானங் கேட்டுக் கனிந்து கனிவாய் முத்துதிர்ப்பாய் அன்னையே!

அலையும் கடலும் உறையவே
மலையும் யாவும் மலைக்கவே
மலரை யொத்த இதழில் தேனாய் முத்துதிர்ப்பாய் அன்னையே!

வேதம் உன்றன் பாதமே
அதில் மோகம் கொண்டேன் நானுமே
வேகம் வந்து சோகம் தீர்க்கவோர் முத்துதிர்ப்பாய் அன்னையே!

ஏங்கும் இந்தப் பிள்ளையே
வாங்கி நெஞ்சில் தாங்கியே
பொங்கும் அன்பால் பொன்னைப் போலொரு முத்துதிர்ப்பாய் அன்னையே!

கனவில் நினைவில் எதிலுமே
காட்சி நீயே யாகவே
கண்கள் பெருக புளகம் அரும்ப முத்துதிர்ப்பாய் அன்னையே!


--கவிநயா