Monday, February 27, 2017

பதமே சதம்!



கீதாம்மா தன் இனிய குரலில்...மிக்க நன்றி கீதாம்மா!

பதமொன்றே கதியென்று நம்பி வந்தேன், உன்
பதமொன்றே சதமென்று கண்டு கொண்டேன்
(அம்மா)

சித்திரப் பூப்போலே திருப்பாதம், அதை
வைத்திடென் சென்னியின் மேல் அது போதும்
சத்தியத்தின் வடிவே உன் பாதம், தினம்
போற்றிட அருள் புரிவாய் அது போதும்
(அம்மா)

முந்தை வினை யாவும் சதி செய்யும்
பிந்தை வினையாவும் விதி செய்யும்
கதியென்று உன் பாதம் பணிந்த பின்னே
விடு என்று வினை யாவும் மிரண்டோடும்
(அம்மா)




--கவிநயா

Monday, February 20, 2017

தாய் நீதானே!




கீதாம்மா தன் அருமைக் குரலில்... அம்மாவை அழைக்கிறார்...மிக்க நன்றி கீதாம்மா!

அம்மா அம்மா என்றழைத்தேன்

ஆதி பராசக்தி உனை அழைத்தேன்

ஆதியும் அந்தமும் நீதான் எனினும்

அன்புத்தாயும் கூட நீதானே!

(அம்மா)



அண்டங்கள் யாவையும் பூத்தவளே

அகிலங்கள் யாவையும் ஆள்பவளே

மூன்று தொழிலையும் ஏற்றவளே

முப்பெருந் தேவியாய் ஆனவளே

(அம்மா)



வாலைக் குமரியும் நீதானே

வஞ்சி இள மயில் நீதானே

கோல லலிதை நீதானே

கோபமா காளியும் நீதானே

(அம்மா)


-- கவிநயா


Monday, February 13, 2017

தாமதமேன்?



கீதாம்மாவின் குழையும் குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அம்மா உந்தன் திருவடியே

கதியென்றேனே அருள் புரியேன்

சொன்னால் போதும் உன் நாமம்

தன்னால் தீரும் வினை யாவும்

 (அம்மா)



கண்ணே மணியே களித்தேனே

உனை எண்ணுகையில் மனம் களித்தேனே

தாயாய்ச் சேயாய் நினைத்தேனே, என்

சொந்தமும் பந்தமும் நீதானே

(அம்மா)



சிறகில்லாத பறவையம்மா, என்

சிறகாய் உன்னன்பைத் தருவாயம்மா

உனதருளாலே பறக்கின்றேன், உன்

நினைவால்தான் தினம் சிரிக்கின்றேன்

(அம்மா)



சித்தம் எல்லாம் சிவை மயமே, என்

சொத்தாய் நீயிருக்க ஏன் பயமே?

பற்றிக் கொண்டேன் உன் பதமே, என்

பக்கம் வர இன்னும் தாமதமேன்?

 (அம்மா)

--கவிநயா

Tuesday, February 7, 2017

எத்தனை அழகு என் அன்னை!



கீதாம்மாவின் இனிய குரலில்... இராகமாலிகையில்...மிக்க நன்றி கீதாம்மா!
 
அந்தி மாலை நேரம்

அந்த வண்ணம் அவள்  தேகம்

அலைந் தலைந்து வானளக்கும்

கூந்தல் கரு மேகம்



ஜொலி ஜொலிக்கும் கண்ணிரண்டும்

சூரிய சந்திரர்கள்

அவள் முக மதியின் ஒளியினிலே

மலர்ந்திடும் செவ்விதழ்கள்



வளைத்து வைத்த வில்லைப் போல

குனிந்திட்ட புருவங்கள்

அவள் வதனமதன் நடுவினிலே

நிமிர்ந்திட்ட சிறு நாசி



ஆதி சிவன் அழகு பார்க்க

கண்ணாடிக் கன்னங்கள்

அவன் நடனத்துக்கு இசைந்தாடி

அசைந்திடும் காதணிகள்



சங்கு போன்ற கழுத்தினிலே

அட்டிகை அணி செய்யும்

மார்பினிலே மணியாரம்

மகிழ்வுடன் தவழ்ந்திருக்கும்



கைவளைகள் கலகலவென

கதைகள் பேசிச் சிரிக்கும்

எழில் மோதிரங்கள் மென் விரல்கள்தமை

அணைத்தபடி இருக்கும்



பாசமுடன் அங்குசமும்

பணிவுடன் அமர்ந்திருக்கும்

அருள் சுரக்கும் கரமிரண்டும்

அபயம் தர அழைக்கும்



இல்லை என்று சொல்லும்படி

இருக்கும் அவள் இடையில்

தகதகக்கும் ஒட்டியாணம் 

இருப்பை நினைவுறுத்தும்



பாதங்களை அணைத்தபடி

கொலுசுகள் கலகலக்கும்

மெட்டி ஒலி மென்மையாக

மன்னவனை இழுக்கும்



அன்னையவள் எழிலைச் சொல்லும்

புலவர் இங்கு ஏது?

அதைச் சொல்லுகின்ற திறனைக் கொண்ட

மொழியும் கிடையாது!


--கவிநயா