Monday, July 30, 2018

ஆடி வருகிறாள்




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

ஆடி வருகிறாள் அன்னை
ஆடி வருகிறாள்
 (ஆடி)

தில்லையிலே நாதனுடன்
ஆடி வருகிறாள்
நாடி வரும் அடியவரைத்
தேடி வருகிறாள்
(ஆடி)

செம்பாதச் சிலம்பொலிக்க
மென்கரத்தில் வளையொலிக்க
முத்து நகைச் சிரிப்பொலிக்க
ஆடி வருகிறாள், அவள்
பக்தர் மனம் கொள்ளை கொள்ளத்
தேடி வருகிறாள்
(ஆடி)

நாயகியாய் நான்முகியாய்
சங்கரியாய் சாம்பவியாய்
மாலினியாய் சூலினியாய்
ஆடி வருகிறாள், நல்ல
பக்தர் தம்மை ஆண்டு கொள்ளத்
தேவி வருகிறாள்
(ஆடி)

--கவிநயா



Tuesday, July 24, 2018

உன் முகம் கண்டால்...



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

உன் முகம் கண்டால் என் மனம் ஆறும்
உன் பெயர் சொன்னால் வருந் துயர் ஓடும்
(உன் முகம்)

சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவையுனைப் பணிந்திட சிவனருள் சேரும்
(உன் முகம்)

வதனத்திலே ஒரு குறு நகை தவழும்
இதயத்திலே அது ஒளியினை அருளும்
பருவத்திலே பெய்யும் மழையினைப் போலே
தருணத்திலே அருள் பொழியுமென் தாயே
(உன் முகம்)


--கவிநயா

Tuesday, July 17, 2018

தாமரை போல்...



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

தண்ணீரில் தவழ்கின்ற தாமரை மலர் போலென்
கண்ணீரில் தவழுமெந்தன் தாயுந்தன் கமல முகம்
(தண்ணீரில்)

வெந்நீராய் விதி வந்து வாட்டுகின்ற வேளையிலும்
பன்னீரைத் தெளித்திடும் தாயுன் வெண்மதி வதனம்
(தண்ணீரில்)

மலர் போலச் சிரித்திருப்பாய்; மதி போலக் குளிர்ந்திருப்பாய்
உள்ளத்தில் நிறைந்திருப்பாய்; உணர்வுக்குள் நிலைத்திருப்பாய்
அன்னையுன் முகம் நினைந்தால் அல்லலெல்லாம் அரண்டு விடும்
அன்போடு அமைதியும் ஆனந்தமும் தேடி வரும்
(தண்ணீரில்)


--கவிநயா



Tuesday, July 10, 2018

கவலையெல்லாம் தீர்ப்பாய்


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

கவலையெல்லாம் தீர்ப்பாய்
கனிவுடன் எமைக் காப்பாய்
(கவலையெல்லாம்)

சுந்தரி நிரந்தரி சந்த்ர கலாதரி
சங்கரி சியாமளை சதுர்முகி தாயேயென்
(கவலையெல்லாம்)

சித்த்த்தில் நீ இருந்தும்
சிந்தை கலங்குவதேன்?
உன் இருப்பை அறிந்தும்
உன்மத்த மாவதுமேன்?

புத்தியிலே வருவாய்
புத்தொளியைத் தருவாய்
நித்தமுன் தாள் பணிந்தேன்
நித்திலமே யருள்வாய்
(கவலையெல்லாம்)

--கவிநயா

Tuesday, July 3, 2018

அபிராமி! அருள்வாமி!



கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அபிராமியே! எமக்கு அருள்வாமியே!
சிவசாமி இடமிருக்கும் சிவகாமியே!
(அபிராமியே)

உன்னையென் துணையென
உள்ளத்தில் கொண்டு விட்டேன்
என்னைத் தள்ளி விடாதுந்தன்
பத நிழலில் வைப்பாய்
(அபிராமியே)

என்செயல் எண்ணியெண்ணி
உலகத்தில் உழலுகின்றேன்
உன்செயல் எண்ணாது
உள்ளம் நொந்து வாடுகின்றேன்

உன்னை எண்ணும் நாளும் என்றோ
உந்தன் பணி செய்வ தென்றோ
உன்னைப் பற்றிக் கொள்வ தென்றோ
உந்தன் பதம் சேர்வதென்றோ
(அபிராமியே)


--கவிநயா