Monday, December 28, 2015

கோலக் கிளியே காவாயோ?

அம்பிகை அஷ்டகம் - 2




கானம் போலக் காரிருளில்
கலங்கித் தனியாய்த் தவிக்கின்றேன்
ஞாலம் எல்லாம் உனதருளால்
நலந்தரும் உன்னைக் கேட்கின்றேன்
காலம் எல்லாம் கடந்தவளே
சூலந் தாங்கிக் காப்பவளே
ஓலம் இட்டு அழைக்கின்றேன்
கோலக் கிளியே காவாயோ?

--கவிநயா 

(தொடரும்)

Monday, December 21, 2015

நலியாதெனை நீ காவாயோ?

அம்பிகை அஷ்டகம் - 1








தணியாத் துயரம் எனைத் தீய்க்க
தனியா யுழன்று புலம்புகிறேன்
தாயே நீயும் அறியாயோ?
துயரம் தீர்க்க வாராயோ?
பிழைகள் பலவும் செய்தாலும்
பிள்ளை என்மேல் இரங்காயோ?
நாயேன் எனவே ஆனாலும்
நலியாதெனை நீ காவாயோ?


--கவிநயா


(தொடரும்)

Tuesday, December 15, 2015

மலர் முகம்

மனமெல்லாம் உந்தன் மலர் முகமே
நினைவெல்லாம் உலவி சுகந் தருமே
(மனமெல்லாம்)

மதி முகம் மனதிற்கு ஒளி தருமே – உன்னைக்
கதியெனக் கொண்டவர்க்குக் களி தருமே
(மனமெல்லாம்)

சிந்தையில் நின்றாடும் சிவை பதமே
சிந்திப் பவர்க்குத் தரும் அருள் நிதமே
பந்தங்கள் விட்டு அவள் பொற்பதமே
பற்றிக் கொண்டால் நடக்கும் அற்புதமே
(மனமெல்லாம்)


--கவிநயா 

Monday, December 7, 2015

வட்டத் திருமுகம்

 
சுப்பு தாத்தா அனுபவித்துப்  பாடித் தந்தது... அவருக்கு மிகவும்ம் பிடித்து விட்டதாம். மிக்க நன்றி தாத்தா!



வட்டத் திருமுகம் கண்களில் பட்டதும்
நெஞ்சில் ஒட்டிக் கொள்ளுமே, அவள்
வட்டக் கருவிழி பட்டு விட்டால் இனி
மற்றதெல்லாம் சுகமே!
(வட்டத்)

மீன்தன் குஞ்சுகளைக் காப்பது போல் அவள்
நம்மையும் காத்திடுவாள், அவள்
நான்மாடக் கூடலில் மீனாட்சி என்றதோர்
பேர் கொண்டு வாழுகின்றாள்!

காமனை எரித்த காதல் கணவனைக்
கண்களால் கட்டி வைத்தாள், அவள்
காஞ்சி மாநகரில் காமாக்ஷி என்றதோர்
பேர் கொண்டு வாழுகின்றாள்!

நீலக் கடல் போல நீண்ட விழிகளால்
நீள் நிலம் ஆளுகின்றாள், அவள்
காசி நகரில் விசாலாகஷி என்றதோர்
பேர் கொண்டு வாழுகின்றாள்!
(வட்டத்)

அவள் கண்களைக் கண்டு விட்டால்
கண்ட காட்சியெல்லாம் மறக்கும்,
அவள் செவ்விதழ் புன்னகையில்
நம் சிந்தையெல்லாம் கிறங்கும்,
அவள் சின்னத் திருவடியைப்
பாடச் செந்தமிழ் ஓடி வரும்,
அவள் வண்ணங்களைச் சொல்ல
அந்த வானவில் ஆடி வரும்!
(வட்டத்)


--கவிநயா