Monday, September 28, 2015

நாவில் நடமிடும் நாமம்


தேவ காந்தாரி ராகத்தில் ரசித்துப் பாடியிருக்கிறார், சுப்பு தாத்தா. மிக்க நன்றி தாத்தா!



நாவினில் நடனமிடும் நாயகி உன் நாமம்

பாவினில் பதம் தூக்கி ஆடிடும் உன் பாதம்

(நாவினில்)



அடிமுடி காட்டாத அண்ணா மலையானை

நொடியதும் பிரியாமல் இடங் கொண்ட என் தாயே

(நாவினில்)



காவென வருவோரைக் காத்திடும் என் தாயே

தாவெனக் கேட்பதெல்லாம் தந்திடுவாய் நீயே

வாவெனக் கதறுகின்றேன் வந்தருள்வாய் தாயே

போவெனத் தள்ளாமல் புகல் தருவாய் நீயே

(நாவினில்)

--கவிநயா 


Monday, September 21, 2015

நீயேதான் வந்தாயோ?


ஆபோகியில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



நீயேதான் என் நினைவில் வந்தாயோ? உன்னை

அம்மா என்றழைக்கச் சொல்லித் தந்தாயோ?

(நீயேதான்)



ஊரெல்லாம் கேட்க உந்தன் பேரைச் சொல்லவோ?

உலகெல்லாம் போற்றும் உந்தன் புகழைச் சொல்லவோ?

(நீயேதான்)



உன்னை எண்ணும் போதில் எந்தன் உள்ளம் துள்ளுது

அந்தத் துள்ளலிலே தெள்ளு தமிழ்ப் பாடல் சொல்லுது

புத்தியெல்லாம் உன் நினைவால் பக்தியானது

அந்த பக்தியினால் சித்தமெல்லாம் சுத்தியானது

(நீயேதான்)


--கவிநயா 


Monday, September 14, 2015

அனைத்தும் நீயே!


உலகமெல்லாம் உந்தன் திருவுருவே
உள்ளமெல்லாம் உந்தன் எழில் வடிவே!
(உலகமெல்லாம்)

காணும் பொருளினில், காணா இருளினில்...
தோன்றும் பொருளினில், தோன்றா மருளினில்....
(உலகமெல்லாம்)

வான் நிலம் நீர் நெருப்பு காற்றிவை நீயானாய்
கோன் குடி உயிர்களெல்லாம் கொற்றவையே நீயானாய்
தேனெனும் மொழியானாய், தெள்ளு தமிழ்க் கவியானாய்
மானனை விழியாளே மனதினில் நிலையானாய்!
(உலகமெல்லாம்)


--கவிநயா

Monday, September 7, 2015

பக்தி என்னும் பணிவன்பு


சுப்பு தாத்தா அருமையுடன் பாடித் தந்ததை அன்புடன் கேட்டு மகிழுங்கள்... மிக்க நன்றி தாத்தா!



பக்தி எனும் பணிவன்பு வரும் நாள் என்றோ?

சக்தி உந்தன் திருவருளைப் பெறும் நாள் என்றோ?

(பக்தி)



சித்தி எதும் வேண்டவில்லை உன்னை தாயே, உள

சுத்தியொன்றே தந்தருள வேண்டும் நீயே!

(பக்தி)



கற்றுக் கொண்ட பாடங்கள் கைகொடுக்கவில்லை, உன்னைப்

பற்றிக் கொண்டேன், ஆனாலும் பற்று விடவில்லை

சிக்கிக் கொண்டேன் சிறையினுள்ளே தப்ப வழியில்லை, என்னைப்

பெற்றவளே உன்னையன்றிப் புகல் எனக்கு இல்லை!

(பக்தி)


--கவிநயா