Monday, November 25, 2013

பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 4


பைரவி, முகாரி இரண்டிலுமாக சுப்பு தாத்தா அருமையாகப் பாடித் தந்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


இருளினை நீக்கி ஒளிதரும் வடிவே
சிறுமதி யேனுக்கும் அருளிடும் உருவே
குரு வடிவாகி வந்தருள் திருவே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (13)

கருநிறம் கொண்ட காளியின் வடிவே
மருளினை நீக்கித் தெருள் தரும் உருவே
குரு வடிவாகி வந்தருள் திருவே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (14)

வறுமையை நீக்கி அருளிடும் வடிவே
பெருநிதி* யந்தனைத் தந்திடும் உருவே
குரு வடிவாகி வந்தருள் திருவே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (15)

அம்மா என்றே அழுதேன் அனையே*
அன்பால் என்றும் தொழுதேன் உனையே
கண்ணால் கொஞ்சம் பாராய் எனையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (16)


*அனையே == அன்னையே – கவிச் சுவைக்காக மருவியது.
*பெருநிதியம் == பிறவாப் பெருநிதி


--கவிநயா

(நிறைவுற்றது)

Monday, November 18, 2013

பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 3


சுப்பு தாத்தா அடானாவில் அருமையாகப் பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

 
மலமொரு மூன்றினைக் களைவாய் வனிதே
தலமென உளந்தனில் உறைவாய் இனிதே
கலமெனைக் கருணையால் நிறைப்பாய் கனிந்தே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (9)

காமம் அனைத்தும் களைவாய் கனியே
மோகம் அனைத்தும் முறிப்பாய் முனையே*
வேகம் வந்தெமைக் காப்பாய் இமையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (10)

முகத்தினில் குறுநகை தரித்திடும் எழிலே
அகத்தினில் மலரென மணத்திடும் அழகே
இகபர சுகமெனக் கொண்டேன் உனையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (11)

முதலும் முடிவும் நடுவும் நீயே
நலமும் திறமும் சுகமும் நீயே
உயிரும் உறவும் உடலும் நீயே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (12)




*முனையே == முன்னையே - கவிச் சுவைக்காக மருவியது.


--கவிநயா

(தொடரும்)
 

Monday, November 11, 2013

பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 2


மின்னற் கொடியிடை இமவான் மகளே
சின்னக் கனியிதழ் மலர்வாய் அமிர்தே
வன்னப் பூவென மணப்பாய் மனதே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (5)

அன்னப் பறவையும் நாணும் நடையே
கன்னங் கருங்குயில் நாணும் குரலே
மின்னல் எனக்கடை விழியால் அருளே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (6)

எண்ணும் மனதினில் உறைவாய் எழிலே
சொல்லும் வாக்கினில் வருவாய் சுவையே
பண்ணும் செயலினில் ஒளிர்வாய் மணியே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (7)

கன்னற் தமிழ்க் கவி தருவாய் கனியே
பின்னும் ஒருவரம் அருள்வாய் இனியே
இன்னும் எனதன்பில் நனைவாய் சிவையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (8)


--கவிநயா

(தொடரும்)

Monday, November 4, 2013

பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 1



யதுகுல காம்போஜி ராகத்தில் மனமுருகிப் பாடித் தந்திருக்கிறார், சுப்பு தாத்தா. மிக்க நன்றி தாத்தா!



அம்மா வருவாய் அருளைப் பொழிவாய்
கண்ணால் அருள்வாய் கருணை புரிவாய்
பெண்ணார் மணியே கனியே சுவையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (1)

விண்ணோர் போற்றும் விமலே வனிதே
மண்ணோர் போற்றும் மலரே அமுதே
பண்ணோர் போற்றும் பரமே அருளே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (2)

கண்டங் கறுத்தோன் காதல் மனையே
தண்டம் பிடித்தோன் தாயே சிவையே
அண்டம் அனைத்தும் பணியும் அழகே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (3)

வண்டா டுங்கரு விழியே எழிலே
செண்டா டுங்கரம் உனதே லலிதே
கொண்டா டும்புவி உனையே அனையே*
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (4)



*அனையே == அன்னையே – கவிச் சுவைக்காக மருவியது.

--கவிநயா

(தொடரும்)