Monday, March 28, 2016

அருள் வேண்டும்!



அம்மா உந்தன் அருள் வேண்டும்!
தந்தான் எந்தன் இருள் நீங்கும்!
வருவாய் குருவாய் தருவாயே!
மருள் நீக்கி அருள் புரிவாயே!
(அம்மா)

கருணை பொழியும் கருமுகிலே!
கருவிழி யிரண்டும் அருட் கடலே!
இருவினை களையும் முழுமதியே!
சிறுமதி யேனுக்கும் அருள் புரியேன்!
(அம்மா)

சிந்தையில் நீந்திடும் உன் முகமே!
விந்தையில் ஆழ்ந்திடும் என் மனமே!
எந்தையுடன் வந்து இக் கணமே!
தந்திட வேணுமுன் பொற் பதமே!!
(அம்மா)


--கவிநயா


Monday, March 21, 2016

முட்களும் மலராகும்



நீலாம்பரி ராகத்தில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியது... மிக்க நன்றி தாத்தா! 



பச்சை வண்ணப் பட்டுடுத்தி

இச்சை கொள்ள வைப்பவளே!

துச்சமென துக்கமெல்லாம்

மிச்சமின்றித் தீர்ப்பவளே!


நச்சுஉண்ட நாயகனை

பட்சம்கொண்டு காத்தவளே!

மச்சவிழிப் பார்வையால்எம்

அச்சம்போக்கும் தூயவளே1



பக்கத்திலே நீயிருந்தால்

சொர்க்கமென்ன சொந்தமென்ன!

மக்கள்குறை தீர்ப்பதற்கு

நேரமென்ன காலமென்ன!



சிக்கலெல்லாம் ஓடிவிடும்

சிந்தையிலே நீயிருந்தால்!

முட்களெல்லாம் மலராகும்

மங்கையுந்தன் அருளிருந்தால்!


---கவிநயா 


Monday, March 14, 2016

அழகே அருளமுதே!


சுப்பு தாத்தாவுக்கு ரொம்பப் பிடிச்சிட்டதாம்... அவர் வாலாஜியில் வண்ணமுறப் பாடியது இங்கே....மிக்க நன்றி தாத்தா!


அழகே அருளமுதே!
சிவையே கனியமுதே!
சிந்தையுள் ஊறி நிற்கும்
கருப்பஞ் சாறமுதே!
(அழகே)

எண்ணி எண்ணிப் பாட வைத்தாய்!
உன் நினைவில் ஆட வைத்தாய்!
அன்னை என்று நாட வைத்தாய்!
அடியவரைக் கூட வைத்தாய்!
(அழகே)

விந்தை யுந்தன் மாயை!
செய்வ துந்தன் லீலை!
தஞ்சமென்று வந்தவர்க்குன்
திருவடி நிழல் சோலை!
(அழகே)



--கவிநயா


Monday, March 7, 2016

இதயமெல்லாம்...



இதயமெல்லாம் உன்னை நிறைத்து வைத்தேன்
உதயமென்றுன் வரவைக் குறித்து வைத்தேன்
(இதயமெல்லாம்)

வழிமேல் விழி வைத்துப் பார்த்திருக்கேன், உந்தன்
விழிகரு ணைபொழியக் காத்திருக்கேன்
(இதயமெல்லாம்)

விழிவழியும் நீரில் கோலமிட்டு, எந்தன்
இதயக் கமலம் அதன் நடுவில் இட்டு
சந்தத் தமிழ் மாலைகளால் அலங்கரித்து, உந்தன்
தங்கத் திருத்தாள் பதிக்க மலர் விரித்து
(இதயமெல்லாம்)


--கவிநயா