Sunday, August 11, 2024

ஆடியிலே வருவாள்

 


ஆடியிலே வருவாள்
ஆனந்தம் தருவாள்
(ஆடியிலே)

கோடித் துன்பம் வந்த போதும்
நாடி அவளைப் பணிந்து விட்டால்
(ஆடியிலே)

பாடப் பாட அவள் புகழை
பேசப் பேச அவள் மகிமை
தேடத் தேடத் திருவடியை
ஓடி வந்து அருளிடுவாள்
(ஆடியிலே)

அன்னை என்று அழைத்து விட்டால்
அகம் மகிழ்ந்து வந்திடுவாள்
பிள்ளையென அரவணைப்பாள்
பேரன்பைத் தந்திடுவாள்
(ஆடியிலே)

--கவிநயா


Wednesday, February 22, 2023

தாயே கதி

 

தாயே கதி

அவள் அருளே நிதி

அவள் பதநிழல் என்றும்

தந்திடும் நிம்மதி

(தாயே)

 

சித்தத்தில் அவள் முகம்

நித்தமும் சுகம் தரும்

பக்கத்தில் அவள் துணை

துக்கங்கள் துரத்திடும்

(தாயே)

 

வந்த வினைகள் ஒழிய

வரும் வினைகள் ஒளிய

சந்ததமும் அவள் பெயரை

சிந்தனை செய்வாய் மனமே

 

இருள் கெடுப்பாள்

அவள் ஒளி கொடுப்பாள்

மருள் கெடுத்தே நமக்கு

அருள் கொடுப்பாள்

(தாயே)


--கவிநயா


Tuesday, October 25, 2022

அன்புக்கு அளவேது?


அம்மா உன் அன்புக்கு அளவேது?

உன் பத நிழலுக்கு இணையேது?

(அம்மா)

 

கமல முகம் கண்டு கனிந்திடும் என்னுள்ளம்

கடலெனும் கருணையிலே கரைந்திடும் என் நெஞ்சம்

(அம்மா)

 

அம்மா என்றழைத்ததும் ஓடி வந்தருள்வாய்

அஞ்சேல் அஞ்சேல் என்று அபயம் தந்திடுவாய்

வழியும் கண்ணீரினை வாஞ்சையில் துடைப்பாய்

கழியட்டும் வினை என்று கனிவுடன் அணைப்பாய்

(அம்மா)


--கவிநயா


Monday, October 3, 2022

துர்க்கை அம்மா

 இனிய நவராத்திரி வாழ்த்துகள்!

துர்க்கை அம்மா துர்க்கை அம்மா

துர்க்கை அம்மா துர்க்கை அம்மா

(துர்க்கை அம்மா)

 

துக்கமெல்லாம் தீர்த்து விடும் துர்க்கை அம்மா

பக்கம் வந்து காத்து நிற்கும் துர்க்கை அம்மா

(துர்க்கை அம்மா)

 

சூலம் கொண்டு வந்திடுவாள் துர்க்கை அம்மா

சுற்றும் வினை விரட்டிடுவாள் துர்க்கை அம்மா

நீல நிறக் காளியவள் துர்க்கை அம்மா

நின்று பகை வென்றிடுவாள் துர்க்கை அம்மா

(துர்க்கை அம்மா)

 

சீறுகின்ற சிம்மத்திலே துர்க்கை அம்மா, பெண்

சிங்கமென வந்திடுவாள் துர்க்கை அம்மா

ஆறுதலைத் தந்திடுவாள் துர்க்கை அம்மா

அரவணைத்துக் காத்திடுவாள் துர்க்கை அம்மா

பேறு பெற்றேன் உன்னைப் பாட துர்க்கை அம்மா

வேறு என்ன வேண்டுமடி துர்க்கை அம்மா

(துர்க்கை அம்மா)


--கவிநயா



Sunday, September 18, 2022

வர வேண்டும் தாயே

 

வர வேண்டும் வர வேண்டும் தாயே, அருள்

தர வேண்டும் தர வேண்டும் நீயே

(வர)

வரம் வேண்டும் வரம் வேண்டும் தாயே

நிலையாக என்மனதில் நின்றிடவே நீயே

(வர)

 

ஒரு பார்வை பார்க்க வேண்டும்

ஒரு வார்த்தை பேச வேண்டும்

கண்ணே என்றணைக்க வேண்டும்

கனிவாய்ப் புன்னகைக்க வேண்டும்

வாழ்வெல்லாம் உன்றன் நிழலில்

வாழ்ந்திட நீ அருளிட வேண்டும்

(வர)

 

--கவிநயா


Tuesday, July 5, 2022

அன்பைத் தருவாய்

அன்பைத் தருவாய் அம்மா

அன்பைத் தருவாய், உன்றன்

திருப்பாத கமலங்களில்

அன்பைத் தருவாய்

(அன்பை)

 

உன் நினைவில் வாழ்ந்திடவே

அன்பைத் தருவாய்

உலகப் பற்றை அறுத்து உன்மேல்

அன்பைத் தருவாய்

(அன்பை)

 

செவ்வந்தி வானம் போல தேவி உன் நிறம்

செந்தூரம் துலங்கிடவே ஒளிரும் உன் முகம்

செக்கச் சிவந்த பட்டாடை உன்றன் இடையினில்

செங்கமலப் பதம் பதிப்பாய் என்றன் நெஞ்சினில்

(அன்பை)

 

--கவிநயா


 

Tuesday, June 28, 2022

தஞ்சமென வந்தேன்


தஞ்சமென வந்தேனே தாயே, என்

சஞ்சலங்கள் தீர்ப்பாயே நீயே

தும்பிக்கை கணபதியின் தாயே

நம்பிக்கை தருவாயே நீயே

(தஞ்சம்)

 

உனை நினையா துழலும் பிள்ளை

பாராயோ தாயே

உன் நினைவை என் மனதில்

தாராயோ நீயே

(தஞ்சம்)

 

உலகச் சுமை அழுத்திட நான் உன்னை மறக்கிறேன், அதில்

மேலும் மேலும் அமிழ்ந்து நான் என்னை இழக்கிறேன்

திருப்பாதம் ஒன்றைத்தான் நம்பி இருக்கிறேன், உன்

அருட்பார்வை கிடைக்காதோ, காத்துக் கிடக்கிறேன்

(தஞ்சம்)

 

--கவிநயா



Thursday, June 23, 2022

மன்னிப்பாய்


தவறுகளை மன்னிப்பாய் தாயே, உனக்கு

தகுதியான மகளாக்கு நீயே

(தவறு)

 

செய்த பிழை யாவையும் நீ பொறுத்தருள வேணும், பிழை

செய்யாமல் இனிமேலே காத்தருள வேணும்

(தவறு)

 

கள்ளமில்லா உள்ளமதைத் தருவாய், அதில்

கசடுகளை அறுத்தெறிந்து அருள்வாய்

வெள்ளை உள்ளத் தாமரையில் அமர்வாய்

விடிவெள்ளியாக என் வாழ்வில் ஒளிர்வாய்

(தவறு)

 

--கவிநயா

Tuesday, May 31, 2022

காத்திருக்கிறேன்

 

வாசற் கதவைத் திறந்து வைத்தேன் வந்து பாரம்மா, பூ

வாசம் என்றன் உள்ளத்திலே வீச வையம்மா

(வாசல்)

 

பாசம் வைத்து நானழைத்தேன் காதில் விழலையோ?

நேசம் வைத்து நீவர எந் நேரம் ஆகுமோ?

(வாசல்)

 

துணிவு வேண்டும் அம்மா உலகின் துயரம் தாங்கவே

பணிவு வேண்டும் உன்றன் மலர்ப் பாதம் பணியவே

கனிவு வேண்டும் உயிர்களிடத்தில் அன்பைப் பொழியவே

இவை அனைத்தும் வேண்டும் உனக்குப் பிடித்த பிள்ளையாகவே

(வாசல்)

 

--கவிநயா



Tuesday, May 24, 2022

தஞ்சம் நீயே

தஞ்சம் என்று வந்தேன் அம்மா

அஞ்சேல் என்று சொல்வாய்

கஞ்சம் உன்றன் பாதம் என்றன்

நெஞ்சின் மீதில் வைப்பாய்

(தஞ்சம்)

 

வா எனவே அழைத்த பின்னும்

வாராயோ தாயே

தா எனவே கேட்ட பின்னும்

தாராயோ நீயே

(தஞ்சம்)

 

உலகம் உனக்கு விளையாட்டு

உயிர்களெல்லாம் பொம்மை

கலங்கச் செய்யும் உலகமிது

எனக்கிதுவே உண்மை

 

கரம் கொடுத்துக் கரை சேர்க்க

வரவேண்டும் தாயே

சிரம் மீதில் பதம் சூடும்

வரம்வேண்டும் தாயேன்

(தஞ்சம்)

 

--கவிநயா



 

Monday, May 16, 2022

துணை நீயே

துணை நீயே என் தாயே, துயரங்கள் துரத்தி விட

இதயத்திலே இருந்து, இன்னொளி காட்டி விட

(துணை)

 

பாதங்கள் பற்றிக் கொண்டேன், பார்வையைத் திருப்பி விடு

வேதனை தீர்த்து விடு, வினைகளை விரட்டி விடு

(துணை)

 

அடர்ந்த காடெனினும், கதிரொளி புகுந்து விடும்

இருள் சூழ் மனமெனினும், உனதருள் ஊடுருவும்

எனக்கிங்கு வழி காட்டு, விழிவழி ஒளி காட்டு

உலகினில் உனையன்றி எனெக்கென எவருண்டு?

(துணை)

 

--கவிநயா



 

Monday, May 9, 2022

அருள் என்று கிடைக்கும்?

 

அருள் கிடைக்கும் நாள் எதுவோ, அம்பிகையே?

இருள் நீங்கி ஒளி துலங்க, வா உமையே

(அருள்)

 

நெஞ்சம் தடுமாறச் செய்யும் சஞ்சலங்கள் நீங்கிடவும்

வஞ்சமனம் கொண்டிருக்கும் சம்ஸயங்கள் தீர்ந்திடவும்

(அருள்)

 

உன்றன் பத மலர்களிலே அன்புமிகக் கொண்டிடவும்

உன்னடியை முழு மனதாய் நம்பி நிதம் தொழுதிடவும்

உன்றன் உள உகப்பேதான் என்னுகப்பாய் ஆகிடவும்

என்றும் உன்றன் கரம் பிடித்து உன்றன் வழி நடந்திடவும்

(அருள்)

 

--கவிநயா