Monday, December 12, 2016

ஆயிரம் கண்ணுடையாள்



கீதாம்மாவின் தேனினிய குரலில், ஷண்முகப்ரியா ராகத்தில்

ஆயிரம் கண்ணுடையாள், எங்கள்

ஆதிசக்தி உமையாள்

ஆயிரமாயிரம் பாயிரம் பாடிட

அன்புமழை பொழிவாள்



பாலை வடிவினளாம் அவள்

வாலைக் குமரியளாம்

சோலை நிழல் போல சோகமெல்லாம் நீக்கி

சொர்க்கம் தருபவளாம்



கோல வடிவினளாம் அவள்

கொஞ்சும் குமரியளாம்

நீலமயிலாக ஈசனடி நாடி

பூசிக்க வந்தவளாம்



சின்னஞ் சிறுமியளாம் எழில்

சேல் விழியாள் அவளாம்

மன்னனுக்கும் மகாராணிக்கும் அருள

மகளென வந்தவளாம்



வீரத் திருமகளாம் அவள்

வெற்றித் தலைமகளாம்

அண்ட சராசரம் அனைத்தும் நடுங்க

அசுரரை அழித்தவளாம்



சிந்தையெல்லாம் அவளே, எழில்

சித்திரப் பூமகளே

விந்தை மிகுந்தவள் எந்தை துணையவள்

ஆதிசக்தி அவளே


--கவிநயா

No comments:

Post a Comment