Sunday, January 25, 2009

லலிதா நவரத்தினமாலை 3

1. வைரம்

வற்றாத அருள் ஊற்றே; அந்த அருள் ஊற்றில் இருந்து ஊறும் அருள் என்னும் நீரால் நிறைந்த வற்றாத சுனையே; அன்னையே. கற்பவை கற்க என்றார் குறளாசிரியர். அப்படி கற்க வேண்டியவை என்று என்ன என்ன இருக்கிறதோ அவற்றை எல்லாம் கற்ற பின்னரும் உன் அருள் நிலையைப் பற்றிய தெளிவு பெற்றவர் இல்லையாம். அவர் கற்பவை எல்லாம் கற்றும் தெளியாராம். எத்தனை தான் கற்றாலும் 'கற்ற பின் நிற்க அதற்குத் தக' என்ற சொல்லை மறந்தால் சரியா? அதனால் அந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்டு, நாடு நகரங்களில் கிராமங்களில் மனைவி, மக்கள், சுற்றம், வீடு, வாசல், வயல்வெளிகள் என்று வாழ்ந்து வந்தால் கற்றபடி நிற்க இயலாது; இருக்கும் பற்றெல்லாம் துறந்து கற்றபடி நிற்க வேண்டுமெனில் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணி காடே கதியாய் அங்கேயே நிலையாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு தவம் செய்தாலும் உன் அருள் நிலையைப் பற்றிய தெளிவு பெற்றவர் இல்லையாம். காடே கதியாய் கண் மூடி தவம் செய்தவர்களும் தெளியார்; அதனால் அவர்கள் செய்த தவம் நெடிய கனவினைப் போல் பயனின்றிப் போனதாம்.

கற்க வேண்டியவற்றை எல்லாம் கற்றவர் நிலையும் கற்றபின் அதற்குத் தக நின்றவர் நிலையும் இப்படி என்றால் பெரும் பாவங்களும் பிழைகளும் செய்யும் தாழ்ந்தவன் என் நிலை என்ன? அடியேன் சிறிய ஞானத்தன்; அறிதல் யார்க்கும் அரியவளை அடியேன் காண்பான் அலற்றுகின்றேன்; இதனை விட எள்ளத் தக்க நிலையும் உண்டோ? நான் உன்னை அறிய வேண்டும் என்று பேசுவதும் தகுமோ? அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ?

உலகத்தில் இருக்கும் தீமைகள் எல்லாம் ஒரே உருவாகி என்னுள் வளர்கின்றன. அன்னையே. அத்தீமைகள் என்னும் பகைவர்கள் மிக்க வலிமையுடன் இருக்கிறார்கள். வயிரப்பகைவர்களாக இருக்கிறார்கள். அவர்களை என்னால் அழித்து ஒழிக்க இயலாது. உன் அருளாலேயே அது நடைபெற வேண்டும். அந்த வயிரப் பகைவர்களுக்கு எமனாக உன் திருக்கைகளில் வலிமை மிக்கப் படைக்கலங்களைத் தாங்கியவளே. பற்றும் வயிரப் படை வாள் வயிரப்பகைவர்க்கு எமனாக எடுத்தவளே.

வற்றாத உன் அருட் புனலால் என்னைக் காக்க வருவாய். தாயே. லலிதாம்பிகையே. உனக்கு எல்லா வெற்றிகளும் உண்டாகட்டும். வற்றாத அருட்சுனையே வருவாய். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

கற்றும் தெளியார் காடே கதியாய்
கண் மூடி நெடும் கனவான தவம்
பெற்றும் தெளியார் நிலை என்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படை வாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


2. நீலம்

உடலில் மூலாதாரம் என்னும் அடிப்படைச் சக்கரத்தில் குண்டலினி என்ற பெயரில் வாழும் கனலே சரணம். மூலக்கனலே சரணம் சரணம். எல்லாவற்றிற்கும் தாய் ஆனவளே. எல்லாவற்றையும் படைத்தவளே. யாரும் எவையும் இல்லாத காலத்தில் இருந்த முதன்முதலே. இனி எக்காலத்திலும் இருப்பவளே. யாரும் எவையும் இல்லாமல் போகும் போதும் இருப்பவளே. முடியா முதலே சரணம் சரணம். அழகிய கிளி போன்றவளே. கோலக்கிளியே சரணம் சரணம். ஒரு சூரியன் ஒரு சந்திரன் என்றிவைகளே இவ்வுலகத்திற்கு ஒளி தரப் போதுமானவையாக இருக்க ஓராயிரம் கோடி சூரியர்கள ஒன்று திரண்டாற் போல் ஒளி வீசும் குறையாத ஒளிக்கூட்டம் போன்றவளே. குன்றாத ஒளிக்குவையே சரணம்.

எங்கும் நிறைந்த ஆகாய வெளி நீல நிறத்துடன் இருப்பதைப் போல் எங்கும் நிறைந்த நீயும் நீலத் திருமேனியுடன் இருக்கிறாய். அந்த நீலத் திருமேனியிலேயே நினைவை நிறுத்தி வேறு எந்த நினைவும் இன்றி எளியவன் நிற்கின்றேன். நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று எளியேன் நின்றேன் அருள்வாய். பாலா திரிபுரசுந்தரி என்ற திருப்பெயருடன் சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி உன் அடியவர் நெஞ்சில் நிறைபவளே. வாலைக்குமரி வருவாய் வருவாய். தாயே. உனக்கே எல்லா வெற்றிகளும் உண்டாகட்டும். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்று எளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

9 comments:

 1. "அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ?"

  ஹ்ம்.. உணர வைக்கும் சொற்கள் :(

  அழகான விளக்கம்.

  நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று நிற்க அவள் அருளட்டும்.

  படம் ரொம்ப அழகா இருக்கு :)

  ReplyDelete
 2. நவரத்தினங்களா! மிக்க நன்று!
  வழங்குவதற்கு மிக்க நன்றி.

  வைரமாய் நீலமாய் ஒளிவிடும் அன்னையின் அருள் வேண்டி நின்றாற்பின் வேறென்ன வேணும்!

  ReplyDelete
 3. நவரத்தின மாலை ஜொலிக்குது!
  ஒலிச் சுட்டி எல்லாம் கிடையாதா குமரன்? :)

  //அறிதல் யார்க்கும் அரியவளை அடியேன் காண்பான் அலற்றுகின்றேன்//

  வரவர ரொம்ப மிக்ஸிங் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க! :)
  உங்களைச் சொல்லித் தப்பில்லை! பந்தல், கந்தல்-ன்னு சேர்க்கை அப்படி! :)

  அச்சுவை பெறினும் வேண்டேன்!
  ஆம்ஸ்டர்டாம் நகரு ளானே கிட்டக்க சொல்றேன் உங்க மிக்ஸிங்கை :)

  ReplyDelete
 4. நன்றி கவிநயா அக்கா.

  ReplyDelete
 5. நன்றி இரவி. ஒலிச்சுட்டி கிடைத்தால் சொல்லுங்கள். இணைக்கிறேன். இல்லாவிட்டால் நீங்கள் பாடிக் கொடுத்தாலும் இணைத்துவிடலாம். :-)

  ஆம்ஸ்டர்டாம் நகருளான்கிட்டே சொல்றீங்களோ பெங்களூரு நகருளான்கிட்ட சொல்றீங்களோ கவலையில்லை. நாமார்க்கும் குடியல்லோம் :-)

  ReplyDelete
 6. இந்த இடுகையில் இருக்கு ஒலிச்சுட்டி -
  http://ammanpaattu.blogspot.com/2007/07/lalitha-navarathina-maalai.html

  ReplyDelete
 7. ஒலிச்சுட்டிக்கு நன்றி கவிநயா அக்கா. :-)

  ReplyDelete
 8. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.  Please follow

  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

  (First 2 mins audio may not be clear... sorry for that)

  (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete